அமெரிக்க ஜனாதிபதியாக ஒபாமா மீண்டும் பதவியேற்பு
அமெரிக்காவில் கடந்த நவம்பர் மாதம் 6-ந் தேதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் பாரக் ஒபாமா மீண்டும் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்றார். இதன் மூலம் அவருக்கு 2-வது முறையாக ஜனாதிபதி பதவியில் அமரும் வாய்ப்பு கிடைத்தது. அமெரிக்க அரசியல் அமைப்பு சட்டத்தின்படி புதிய அதிபர் ஜனவரி 20-ந் தேதி கண்டிப்பாக பதவி ஏற்க வேண்டும்.
அதன்படி பார்த்தால் நேற்றைய தினமான ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளாகிவிட்டது. கோர்ட்டுகள், அரசு அலுவலகம் எதுவும் செயல்படவில்லை. எனவே ஒபாமாவின் பதவி ஏற்பு விழாவை 2 நாள் நிகழ்ச்சியாக நடத்த வேண்டியதாகி விட்டது. இதற்கு முன்பு இதேபோன்று முன்னாள் ஜனாதிபதிகளான ஐஸ்னோவர், ரொனால்டு ரீகன் ஆகியோர் 2 தடவை பதவி ஏற்று உள்ளனர். அதேபோல் இப்போது ஒபாமாவும் 2 முறை பதவி ஏற்கும் நிலை ஏற்பட்டது.
அதன்படி, ஒபமா முதலாவதாக பதவி ஏற்கும் விழா, அமெரிக்க நேரப்படி நேற்று பகல் 11.55 மணி அளவில் வாஷிங்டனில் உள்ள ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையில் எளிமையாக நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் ஜனாதிபதியாக ஒபாமா பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
ஆபிரகாம்லிங்கன், மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் பயன்படுத்திய வரலாற்று சிறப்புமிக்க 2 பைபிள்களை வைத்து ஒபாமா உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஒபாமாவின் மனைவி மிச்செல் மற்றும் குடும்பத்தினர், துணை ஜனாதிபதி ஜோ பைடன் அவரது குடும்பத்தினர், முக்கிய அதிகாரிகள் பங்கேற்றார்கள்.
முன்னதாக அமெரிக்க நேரப்படி நேற்று காலை 8 மணி அளவில் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக ஜோ பைடன் மீண்டும் பதவி ஏற்றார். அவருக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி சோனியா சோதோமாயர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சி துணை ஜனாதிபதியின் அலுவலக இல்லத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அவரது குடும்பத்தினர் மற்றும் சுமார் 120 சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர்.
ஜனாதிபதியாக ஒபாமாவும், துணை ஜனாதிபதியாக ஜோ பைடனும் 2-வது முறையாக பதவி ஏற்கும் விழா பாராளுமன்ற வளாகத்தில் பொது நிகழ்ச்சியாக இன்று (திங்கட்கிழமை) நடைபெறுகிறது. பதவி ஏற்று முடிந்ததும் ஒபாமா நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்துவார்.
இதில் எம்.பி.க்கள், பிரமுகர்கள், அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்கிறார்கள். நிகழ்ச்சி முடிவடைந்ததும் ஒபாமா பேரணியாக வெள்ளைமாளிகை செல்கிறார். அப்போது பொதுமக்கள் சாலைகளின் இருபுறமும் திரண்டு நின்று அவருக்கு வாழ்த்து தெரிவிப்பார்கள்.
Post a Comment