Header Ads



'இலங்கையின் உயர்மட்ட இராணுவ அதிகாரிகளை புலிகளின் ஆதரவாளர்கள் குறிவைத்துள்ளனர்'


தவறான தகவல்கள் மற்றும் தவறான ஊகங்களின் அடிப்படையில், அமெரிக்க தொந்தரவு கொடுத்து வருவதாக பாதுகாப்புச்செயலர் கோத்தாபய ராஜபக்ச குற்றம்சாட்டியுள்ளார். 

நான்காவது கட்ட ஈழப்போரில் 53வது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார் என்ற அடிப்படையில், மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்கவுக்கு, அமெரிக்க இராணுவ நிகழ்ச்சித் திட்டத்தில் அனுமதி மறுக்கப்பட்டதைச் சுட்டிக்காட்டியே கோத்தாபய ராஜபக்ச கோபத்துடன் இவ்வாறு கூறியுள்ளார். 

“போரின் போது மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க 53 வது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினாரா என்பதை இராணுவத் தலைமையகத்திடம் அமெரிக்கத் தூதரகம் விசாரித்து தெளிவுபடுத்தியிருந்திருக்கலாம்.  போரின்போது 53வது டிவிசனுக்கு தலைமை தாங்கியவர் மேஜர் ஜெனரல் கமால் குணரட்ணவே. 

மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க பொறியியல் படைப்பிரிவின் தளபதியாக இருந்தவர்.  அண்மையில் அவர் இராணுவச் செயலராக நியமிக்கப்பட்டார்.  வன்னிப் போரில் பங்கேற்ற 53,55, 57, 58, 59வது டிவிசன்கள் அல்லது ஏனைய மூன்று அதிரடிப்படை பிரிவுகள் உள்ளிட்ட எந்தவொரு சண்டைப் படைப்பிரிவுக்குமே மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, தலைமை தாங்கவில்லை. 

தனது நட்புநாடு ஒன்றின் மூத்த அதிகாரியின் திறனை மேம்படுத்திக் கொள்வதற்கு, அனுமதி மறுக்கும் அமெரிக்காவின் முடிவை என்னால் விளங்கிக் கொள்ள முடியவில்லை.  இந்த விவகாரத்தை இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரிய அமெரிக்கத் துதரகத்தின் கவனத்துக்குக் கொண்டு சென்றிருந்தார். 

எந்தவொரு வலுவான காரணமும் இன்றி மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இராணுவப் பயிற்சித் திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டது குறித்து அவர் சுட்டிக்காட்டினார். இராணுவத் தலைமையகத்தின் விளக்கத்தை அடுத்து, அமெரிக்கத் துதரகம் தவறு நடந்து விட்டதாக ஒப்புக்கொண்டது. 

போரின்போது, 53வது டிவிசன் அல்லது வேறொரு சண்டைப் படைப்பரிவின் தளபதியாக இருந்தார் என்ற அடிப்படையில், ஒரு அதிகாரியை நிராகரித்ததைப் போன்ற முட்டாள்தனம் வேறேதும் இருக்க முடியாது. 

மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, 2010 பெப்ரவரி தொடக்கம்- மேஜர் ஜெனரல் தயா ரத்நாயக்க அதைப் பொறுப்பேற்கும் வரை- முன்னாள் விடுதலைப் புலிகளுக்கான புனர்வாழ்வுத் திட்டத்துக்குப் பொறுப்பாக இருந்தவர். 

புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் என்ற பதவியில் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க இருந்ததை அமெரிக்கத் தூதரகம் அறியாமல் இருந்தது என்பது ஆச்சரியமானது.  மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, புனர்வாழ்வு ஆணையாளராக இருந்தபோது, அனைத்துலக சமூகத்துடன் நெருக்கமாகப் பணியாற்றியருந்தார். 

பொய்ப்பிரசாரங்களின் அடிப்படையில், பொறுப்புக்கூறும் விவகாரங்களுக்காக அனைத்துலக போர்க்குற்ற நீதிமன்றுக்கு வலிந்து இழுக்க அவர்கள் முனைகின்றனர்.  இதில் அக்கறை கொண்ட சில தரப்புகள் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தியதாகக் கூட குற்றம்சாட்டின. 

இறுதிப்போரில் பெருமளவு பொதுமக்களை சிறிலங்கா கொன்று குவித்ததாக குற்றம்சாட்டியவர்களால், குறைந்தபட்சம் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்பான ஒரு முடிவுக்குக் கூட வரமுடியவில்லை. 

ஒரு புள்ளிவிபரம், 40 ஆயிரம் பேர் என்கிறது. வேறு சிலர் 70 ஆயிரம் பேர் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர். சில பிரித்தானிய அரசியல்வாதிகள் ஒரு இலட்சம்பேர் கொல்லப்பட்டதாக கூறுகின்றனர்.  தவறான பரப்புரைகளுக்கு அமெரிக்கா ஏமாந்து விடக்கூடாது. 

தீவிரவாதத்துக்கு எதிரான எமது நடவடிக்கைகளை அனைத்துலக சமூகம் பாராட்ட வேண்டும்.  துரதிஸ்டவசமாக, எம்மை இலக்கு வைத்து அனைத்துலக சமூகத்தின் ஒருபகுதி, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்துகிறது.  தீவிரவாதத்துக்கு எதிரான போர் ஒரு தீவிரமான விவகாரம். 

பல்வேறு நபர்களினதும் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்களுக்காக அது பாதிக்கப்படக் கூடாது.  இலங்கையின்  உயர்மட்ட இராணுவ அதிகாரிகளை விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் மீண்டும் குறிவைத்துள்ளனர். 

நியுயோர்க்கில் ஐ.நாவுக்கான பிரதி தூதுவராகப் பணியாற்றும் மேஜர் ஜெனரல் சவீந்திர சில்வாவை அவர்கள் பிரதான இலக்காக கொண்டுள்ளனர்.” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 


No comments

Powered by Blogger.