Header Ads



இந்தியாவில் செயற்கை இரத்தம் தயாரிப்பு


சென்னை இந்திய தொழில் நுட்ப கல்வி நிறுவனம் செயற்கை ரத்தம் தயாரிப்பதற்கான ஆய்வு மேற்கொள்ள மத்திய அறிவியல் மற்றும் தொழில் நுட்ப அமைச்சகத்திடம் இருந்து நிதி உதவி பெற்றனர். 

அதைத் தொடர்ந்து டாக்டர் சோமா குஹதா குர்தா தலைமையில் ஆராய்ச்சியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. அவர்கள் “ஸ்டெம்செல்”களில் இருந்து பல லட்சம் கோடி சிவப்பு ரத்த செல்களை சேகரித்தனர். இதில் இருந்து செயற்கை ரத்தம் தயாரித்தனர். இது ஆய்வகத்தில் 17 நாட்கள் வைத்து உருவாக்கப்பட்டது. 


பின்னர், அதை விலங்குகள் உடலில் செலுத்தி வெற்றிகரமாக பரிசோதித்தனர். இன்னும் 3 ஆண்டுகளில் இது மனித உடலுக்குள் செலுத்தப்பட உள்ளது. தற்போது இது ஆக்சிஜனை எடுத்து செல்லும் திறன் கொண்டதாக உள்ளது. மனித உடலில் செலுத்தும்போது ரத்த சிவப்பணுக்களையும் சுமந்து செல்லும் திறன் கொண்டதாக அது இருக்கும். இந்த தகவலை செயற்கை ரத்தம் தயாரிக்கும் குழுவின் தலைவர் டாக்டர் சோமா தெரிவித்தார். 


மேலும் அவர் கூறும்போது, 'இந்த செயற்கை ரத்தம் முதலில் ரத்தசோகை நோய் பாதித்த எலிக்கு செலுத்தப்பட்டது. அதை அந்த எலியின் உடல் ஏற்றுக் கொண்டு உயிர் பிழைத்ததைத் தொடர்ந்து அடுத்த கட்ட பரிசோதனைக்கு சென்றோம். 

உலகம் முழுவதும் செயற்கை ரத்தம் தயாரிப்பதில் விஞ்ஞானிகள் தீவிரமாக உள்ளனர். பிரான்சில் மனிதர்கள் உடலில் செலுத்தி பரிசோதிக்க தொடங்கி விட்டனர். இங்கிலாந்தில் இதை பயன்படுத்தி வருகின்றனர்' என்றார். 

இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 1 கோடியே 20 லட்சம் யூனிட் மனித ரத்தம் தேவைப்படுகிறது. ஆனால் 90 லட்சம் யூனிட் ரத்தம் மட்டுமே சேகரிக்கப்படுகிறது. எனவே, ரத்தத்தின் தேவை அதிகரிக்கும்போது இது போன்ற செயற்கை ரத்தமும் தேவைப்படுகிறது. எனவே, அதை உற்பத்தி செய்ய வேண்டியது மிகவும் அவசியமாகும்.

No comments

Powered by Blogger.