ஈரானுடன் உடன்படிக்கை எட்டப்படவில்லை - சர்வதேச அணுசக்திக் கழகம்
ஈரானுடன் நடந்த ஆலோசனையில் முடிவு எட்டப்படாததால், உடன்டிக்கை எதுவும் இறுதி செய்யப்படவில்லை. அடுத்த ஆலோசனைக் கூட்டம் வரும் பிப்ரவரி 12ஆம் தேதி நடைபெறும் என்று சர்வதேச அணுசக்திக் கழகம் (ஐஏஇஏ) தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக ஐஏஇஏ தலைமை, அணுசக்தி ஆய்வாளர் ஹெர்மன் நகேர்ட்ஸ் வியன்னா விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது: ""கடந்த டிசம்பர் மாதம் நான் ஈரான் சென்று வந்த பின்னர், இந்த வாரத்தில் இறுதி முடிவு எட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இது தொடர்பாக எவ்வித முடிவும் எட்டப்படவில்லை. பிப்ரவரி 12ஆம் தேதி அடுத்த கூட்டம் நடைபெறும். பார்சின் ராணுவ வளாகத்துக்கு எந்த அனுமதியும் இம்முறையும் வழங்கப்படவில்லை'' என்றார்.
ஈரான் அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. இது தொடர்பாக, ஐஏஇஏ தொடர்ந்து அங்கு ஆய்வு நடத்தி வருகிறது. ஈரானில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்ட அணுசக்தி மையங்கள் தவிர அறிவிக்கப்படாத இடங்களில் 2003ஆம் ஆண்டு வரையும், தற்போதும் சில இடங்களில் இத்தகு ஆராய்ச்சிகள் நடத்தப்படுவதாகக் கருதப்படுகிறது.
ஆனால், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடவில்லை என்பதை ஈரான் மறுத்து வருகிறது. தவறான உளவுத்துறை தகவல்களின் அடிப்படையில் ஐஏஇஏ ஆய்வு நடத்தி வருவதாக ஈரான் தெரிவித்துள்ளது. பார்சின் என்பது ஈரான் ராணுவ வளாகமாகும். அங்கு அணு ஆயுதங்கள் தயாரிக்கப்படலாம் எனச் சந்தேகிக்கப்படுகிறது.
Post a Comment