Header Ads



பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தியாவில் கௌரவம்



இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் இரண்டாவது ஒருநாள் போட்டி கோல்கட்டாவில் நடக்கவுள்ளது. இங்கு ஒருநாள் போட்டிகள் நடந்து 25 ஆண்டுகள் ஆனதை கொண்டாட, ஈடன் கார்டன் மைதானம் தயாராகிறது.

கடந்த 1987, பிப்., 18ல் கோல்கட்டாவில் முதல் ஒருநாள் போட்டி நடந்தது. இதில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. முதல் ஒருநாள் போட்டி நடந்து, 25 ஆண்டுகள் ஆன நிலையில் இரு அணிகள் நாளை மீண்டும் சந்திக்கின்றன. 

இப்போட்டியை காண வர இருந்த, பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி ஆகியோரது பயணம் கடைசிநேரத்தில் ரத்தானது. இருப்பினும், முதல் ஒருநாள் போட்டியில் கேப்டனாக பங்கேற்ற கபில்தேவ், இம்ரான் கானை பாராட்ட பெங்கால் கிரிக்கெட் சங்கம் (சி.ஏ.பி.,) முடிவு செய்துள்ளது.

தவிர, பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன்கள் ஆசிப் இக்பால், ஜாவித் மியான்தத், ஜாகிர் அபாஸ், வாசிம் அக்ரம் உட்பட 10 பேரை அழைத்து கவுரவம் செய்கிறது. 

இப்போட்டிக்கான ஆடுகள பராமரிப்பாளர் பிரபிர் முகர்ஜி, சமீபத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கு தோனி கேட்டபடி ஆடுகளத்தை அமைத்து தர மறுத்தார். இதனால், இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவர் சீனிவாசனும் வெறுப்படைந்தார். இவர், பாகிஸ்தானுடனான போட்டியுடன் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்போது பணியில் தொடர்வார் எனத் தெரிகிறது. 

தவிர, ஒருநாள் போட்டி என்பதால், உள்ளூர் அணி, வெளியூர் அணி என்ற பாகுபாடு இல்லாமல், ஆடுகளத்தை பேட்டிங்கிற்கு சாதகமாக அமைத்துள்ளாராம்.

வாய்ப்பு எப்படி

கோல்கட்டாவில் இந்திய அணி இதுவரை 17 போட்டியில் பங்கேற்று, 10ல் வென்றது. 6ல் தோற்றது. ஒரு போட்டி ரத்தானது. 

* பாகிஸ்தானுக்கு எதிராக இங்கு விளையாடிய மூன்று (1987, 1989, 2004) போட்டிகளிலும் இந்திய அணி தோற்றுள்ளது. 

டிக்கெட்டுகள் காலி

கடந்த 2011, நவம்பரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் மோதிய டெஸ்ட் போட்டியை காண, 1000 பேர் தான் வந்தனர். இதுகுறித்து அப்போது "டுவிட்டரில்' செய்தி வெளியிட்ட சமீபத்தில் மரணம் அடைந்த முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் டோனி கிரெய்க்," எனக்கு பிடித்த மைதானங்களில் கோல்கட்டாவும் ஒன்று. ஆனால், இப்போது, "மார்ச்சுவரி' (பிணவறை) போல, அமைதியாக உள்ளது,' என, தெரிவித்தார். 




No comments

Powered by Blogger.