சியோனிஸ குற்றவாளிகளுக்கு எதிராக இராணுவ எதிர்ப்பு அவசியம் - மொஹமட் முர்ஸி
(Tn) எகிப்து ஜனாதிபதி மொஹமட் முர்சி தனது பதவி ஏற்புக்கு முன் யூதர்களுக்கு எதிராகக் கருத்து வெளியிட்டதற்கு அமெரிக்கா கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
“நாம் கேட்ட சொற்பிரயோகங்கள் மிக வருத்தத்துக்குரியன” என கூறிய அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பேச்சாளர் விக்டோரியா நூலன்ட் “இவை நிராகரிக்கப்பட வேண்டியவை” என்றார்.
மத்திய கிழக்கு ஆய்வு மையம், மொஹமட் முர்சி 2010 ஆம் ஆண்டு குத்ஸ் தொலைக்காட்சிக்கு வழங்கிய பேட்டி ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் முர்சி, இஸ்ரேலை, ‘பலஸ்தீனத்தை ஆக்கிரமித்தவர்கள்’, ‘இரத்தம் உறுஞ்சுபவர்கள் மற்றும் யுத்த வெறியர்கள், மற்றும் பன்றி, குரங்கின் வம்சத்தவர்’ என்றெல்லாம் விமர்சித்துள்ளார்.
“நாம் அவர்களை எம்மாலான அனைத்து சக்திகளைக் கொண்டும் எதிர்க்க வேண்டும். பலஸ்தீன் நிலத்தை ஆக்கிரமித்திருக்கும் இந்த சியோனிஸ குற்றவாளிகளுக்கு எதிராக ஒரு இராணுவ எதிர்ப்பை பலஸ்தீனம் முன்னெடுக்க வேண்டும்” என அந்தப் பேட்டியில் முர்சி குறிப்பிட்டுள்ளார்.
எனினும் எகிப்தில் மக்கள் எழுச்சிக்குப் பின்னர் இடம் பெற்ற ஜனநாயக தேர்தல் மூலம் கடந்த ஆண்டில் முர்சி ஜனாதிபதியாகத் தேர்வானார். இந்நிலையில் முர்சியின் மேற்படி கருத்துக்கு கண்டனம் வெளியிட்ட அமெரிக்கா அவர் இஸ்ரேலுடனான அமைதி உடன்படிக்கையை மதித்து நடப்பதாகவும் காசா யுத்த நிறுத்தத்தில் எம்முடன் இணைந்து செயற்பட்டதாகவும் கூறியுள்ளது. ஆனால் அவர் என்ன கூறுகிறார் என்பதைக் கொண்டு அவரை கணிக்க வேண்டியுள்ளதாக அமெரிக்கா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளது. tn
Post a Comment