Header Ads



பிரிட்டனில் கைமாற்று அறுவை சிகிச்சை வெற்றி..!


தனது வலது கையில் உள்ள விரல்களை அசைத்துப் பார்க்க முடிவதைப் பார்த்து வாயில் சிரிப்புடன் கண்களில் ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சியுடன் மார்க் காஹில் பேசுகிறார்.

51 வயதான அவருக்கு ஒருவாரத்துக்கு முன்னர்தான் கை-மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

பிரிட்டனில் முதல் தடவையாக அறுவை சிகிச்சை மூலம் புதிதாக மனிதக் கையொன்றைப் பொருத்திக்கொண்டுள்ள முதல் நபர் இவர்தான்.

பிரிட்டனில் லீட்ஸ் மருத்துவமனையில் எட்டு மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையின் போதுதான் இவரது பழைய கை அகற்றப்பட்டு புதிதாக கொடையாளி ஒருவர் வழங்கியிருந்த கையொன்று அவருக்குப் பொருத்தப்பட்டது.

20 ஆண்டுகளுக்கு முன்னர் இவரது காலிலும் விரல்களிலும் மூட்டுவாதம் ஏற்பட்டது. பின்னர் அதுவே 5 ஆண்டுகளுக்கு முன்னர் அவரது வலது கைக்கும் பரவியது. அவரது கை விரல்களை விரிக்கமுடியாதபடி, கையினால் எதனையும் செய்ய முடியாத நிலையும் ஏற்பட்டது.

'எனது கை'பயோனிக் என்ற நவீன செயற்கை முறை இயந்திரக் கையை பொருத்துவது தான் ஒரே வழி என்று இருந்தபோது தான், இவர் இன்னொரு மனிதக் கையை பொருத்தும் கை-மாற்று அறுவை சிகிச்சை செய்துபார்க்கச் சம்மதித்தார்.

இவருக்கு புதிய கையை பொருத்திய மருத்துவ நிபுணர் பேராசிரியர் சைமன் கே, இவரது புதிய கையில் இன்னும் பெரிய முன்னேற்றம் தெரியும் என்று பிபிசியிடம் நம்பிக்கை தெரிவித்தார்.

கை மாற்று சிகிச்சைகள் அமெரிக்காவிலும் பிரான்சிலும் இதற்கு முன்னர் நடந்திருக்கின்றன. உலகெங்கிலும் இவ்வாறான 60 கை-மாற்று சிகிச்சைகள் இதுவரை நடந்துள்ளன.

லீட்ஸ் மருத்துவமனையில் இப்போது நடந்திருக்கின்ற பிரிட்டனின் முதலாவது முயற்சி, கை கால்களை இழந்துள்ள பலருக்கு இதுபோல உதவமுடியும் என்கிற நம்பிக்கையை இன்னும் அதிகப்படுத்தியிருக்கிறது.

பிரிட்டனில் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் இந்த கை-மாற்று சிகிச்சைக்கான திட்டமிடல்கள் நடந்துவந்தன.

பிரிட்டன் மருத்துவத் துறையின் இந்தக் கன்னி முயற்சிக்கு பொருத்தமான ஒருவர் கிடைக்கும்வரை காத்திருந்தார்கள்.

உடல்நிலையில் பொருத்தமானவராகவும் இன்னொருவரின் கையை பொருத்திக்கொள்ளுமளவிற்கு மனதளவில் தயாரானவராகவும் ஒருவர் கிடைக்க வேண்டி இருந்தது.

'இதனை இன்னொருவரின் கை என்று நான் நினைக்கவே இல்லை. எனது கையைப் போலத்தான் நான் உணர்கிறேன். என்னால் எனது கையைபோல அசைக்கமுடிகிறது.. அப்படித்தான் உணர்கிறேன்' என்று பிபிசியிடம் கூறினார் மார்க் காஹில்.

இவரது ஆசை முழுமையாக நிறைவேற இன்னும் காலம் எடுக்கும். ஆனால் இப்போதே அவரால் விரல்களை அசைத்துப்பார்க்க முடிகிறது என்பதே ஒரு பெரிய தெம்பையும் நம்பிக்கையையும் கொடுக்கிறது. bbc

No comments

Powered by Blogger.