குவைத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர் அதிலிருந்து மீண்டார்
குவைத்தில் கொலை வழக்கொன்றில் மரண தண்டனை விதிக்கப்பெற்ற கேரளாவைச் சேர்ந்தவர், அம்மாநில முதல்வர் உம்மஞ்சாண்டியின் முயற்சியால் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து 'உங்களது முயற்சிகள் இல்லையேல் என்றோ நான் மரணித்திருப்பேன்' என்று உம்மஞ்சாண்டியிடம் கண்ணீர் மல்க நன்றி கூறினார்.
கேரளா மாநிலம் ஆழப்புழாவைச் சேர்ந்த 32 வயதான சிமில் சசி என்பவர் வளைகுடா நாடுகளில் ஒன்றான குவைத்தில் பணிபுரிந்து வந்தார். 2007-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், கிரிக்கெட் விளையாட்டின் போது ஏற்பட்ட சண்டையில், தன்னுடன் பணிபுரிந்து வந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த சுரேஷ் என்பவரை, குத்தி படுகொலை செய்தார். இவ்வழக்கை விசாரித்த குவைத் நீதிமன்றம், படுகொலை செய்யப்பட்ட சுரேஷின் மனைவி மன்னித்தாலே அன்றி சசியை தூக்குமேடையிலிருந்து காப்பாற்ற முடியாது என்று தீர்ப்பு வழங்கியது.
அச்சமயத்தில் எதிர்கட்சித் தலைவராக இருந்த தற்போதைய கேரள முதல்வர் உம்மஞ்சாண்டியின் கவனத்திற்கு இவ்விசயம் எடுத்துச் செல்லப்பட்டதைத் தொடர்ந்து, அவர் குவைத் வாழ் கேரள நண்பர்களையும், ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியையும் தொடர்புகொண்டு ரூ.பதினைந்து லட்சத்தை திரட்டி, சுரேஷின் மனைவியிடம் அளித்து சசியை மன்னிக்க கோரினார். இத்தொகையைப் பெற்றுக்கொண்ட சுரேஷின் மனைவி சசியை மன்னித்தார். இந்த நடவடிக்கையின் மூலம் சசி 2008ஆம் ஆண்டு தூக்கு தண்டனையிலிருந்து தப்பி மீதமிருந்த சிறைத் தண்டனையை பூர்த்தி செய்து சென்ற வாரம் ஊர் திரும்பினார்.
கடந்த புதன் கிழமையன்று முதல்வர் உம்மஞ்சாண்டியை சந்திக்க அவரது வீட்டில் சசி காத்திருப்பதை அறிந்து தமது கூட்டத்தை விரைவாக முடித்துக் கொண்டு உடனடியாக முதல்வர் வீடு திரும்பினார். அவரைக் கண்டதும் சசி ஓடிச்சென்று கட்டித்தழுவி தம் உயிரை காப்பாற்றியதற்காக அவருக்கு கண்ணீர் மல்க நன்றி கூறினார். இச்சமயத்தில் முதல்வர் உம்மஞ்சாண்டியின் மனைவி அனைவருக்கும் இனிப்பு வழங்கினார். inneram
Post a Comment