Header Ads



பதுளையில் இன ஒற்றுமைக்கான டிஜிடல் கதையாக்கப் பயிற்சி (படங்கள்)


பதுளை மாவட்டத்தில் பல்லின மக்கள் செறிந்து வாழ்வதுடன், அவர்கள் பலவிதமான கலாசார ரீதியான சவால்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர். குறிப்பாக அண்மைக் காலமாக பௌத்தர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையில் பதற்றம் அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் பின்னால் அரசியல் சக்திகள் செயற்படுகின்றபோதிலும் நீண்ட கால அடிப்படையில் பார்பபோமேயானால் அது இனங்களுக்கிடையிலான நல்லுறவில் பாரிய பாதிப்பினை ஏற்படுத்தும். பதுளை மாவட்ட இளைஞர்களுடைய கருத்துக்களை அவதானிக்கும்போது, அங்கே பல விதமான பிரச்சினைகள் இருப்பதை அவதானிக்க முடிந்தது. வறுமை, இனங்களுக்கிடையிலான பதற்றம், நகர கிராமிய வேறுபாடு, பிற கலாசாரங்கள் பற்றிய எதிர்மறையான கண்னோட்டம், பால்நிலை வேறுபாடுகள், சாதி வேறுபாடுகள் போன்ற பல்வேறுபட்ட கலாசார ரீதியான பிரச்சினைகளை இளைஞர்கள் முன்வைத்தனர். ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளாமையும், வித்தியாசங்களை ஏற்றுக்கொள்ள முடியாத மனோபாவமும்தான் இவற்றுக்கு பிரதான காரணங்கள் எனலாம். 

மக்களுடைய உளப்பாங்கில் மாற்றம் ஏற்படுத்தக் கூடிய சக்தி ஊடகங்களுக்குக் காணப்படுகின்றன. இன்று நவீன தொடர்பாடல் கருவிகள் கலாசாரங்களுக்கிடையிலான உறவினை வளர்ப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. அந்தவகையில், டிஜிடல் கதையாக்கம்  என்பது தற்காலத்தில் பரவலாக் பயன்படுத்தப்படுகின்ற ஊடகமாக விளங்குகின்றது.  சாதாரண மக்கள் தமது சொந்தக் கதைகளை வெளிப்படுத்துவதற்கான ஒரு விதமான குறுந் திரைப்படவாக்கம் என்று கூறலாம். 

இலங்கையின் சமாதானம்மிக்க எதிர்கலம் இளைஞர்களுடைய கையில் தங்கியுள்ளது. ஆனால், அதற்கு பல தடைகளும் காணப்படுகின்றன. நாம் முன்னர் குறிப்பிட்ட காலாசார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய அறிவு இளைஞர்களிடமும் குறிப்பாக பாடசாலை மாணவர்களிடமும் குறைவாகவே காணப்படுகின்றது. இந்த இடைவெளியை ஓரளவேனும் நிவர்த்தி செய்வதற்காக நீலன் திருச்செல்வம் நம்பிக்கைப் பொறுப்பின் அனுசரனையில், இலங்கை அபிவிருத்திக்கான ஊடகவியலாளர் மன்றம் பதுளை மாவட்டத்தில் டிஜிடல் கதையாக்கத்தினூடாக கலாசார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மையை ஊக்குவித்தல் எனும் பயிற்சிப்பட்டறையை ஆரம்பித்தது. இதற்கென பதுளை மாவட்டத்தில் உள்ள மூவின பாடசாலைகள், ஊவா மாகாண கல்விப் பணிப்பாளரின் சிபாரிசுடன் தெரிவு செய்யப்பட்டன. பதுளை மத்திய கல்லூரி, சரஸ்வதி தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் அல் அதான் முஸ்pம் மகா வித்தியாலம் ஆகியவற்றிலிருந்து கலை, இலக்கியம் ஆகிய துறைகளில் ஆர்வமுடைய தலா 6 மாணவர்கள் வீதம் மொத்தம் 18 மாணவர்கள் இப்பயிற்சி நெறிக்காக தெரிவு செய்யப்பட்டனர்.

இப்பயிற்சி நெறியின் ஆரம்பத்தில், மாணவர்களுக்கு கலாசார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மை பற்றிய அறிவு வழங்கப்பட்டது. இதன்போது, மாணவர்கள் இதற்கு முன்னர் கலாசார வேறுபாடு மற்றும் பல்வகைமை பற்றிய அறிவு குறைந்தவர்களாக காணப்பட்டதை எம்மால் அவதானிக்கக் கூடியதாக இருந்தது. இதைப்பற்றி பதுளை மகா வித்தியாலய மாணவி மல்ஷா குறிப்பிடுகையில் 'உண்மையாகவே சிங்கள இனத்தவர்கள்தான் உயர்ந்தவர்கள் என்ற மனப்பான்மை'   சரஸ்வதி மகா வித்தியாலயத்தின் மாணவர் கோகுல் பின்வருமாறு கூறினார். 'இதற்கு முன்னர் சிங்கள மற்றும் முஸ்லிம் மாணவர்களுடன் பழகும் சந்தர்ப்பம் பெரிதாக எனக்குக் கிடைக்கவில்லை. இதனால் அவர்களுடைய கலாசாரங்களையும் பற்றி எனக்குப் பெரிதும் தெரியாது. இப்பயிற்சிக்கு வந்ததன் பிறகு எனக்கு வித்தியாசமான கலாசாரங்கள் பற்றி அறியக் கிடைத்ததுடன் எல்லா கலாசாரங்களும் ஒப்பீட்டளவில் ரசிக்கக் கூடியதாகவுள்ளது.'

கதையாக்கத்துக்கான பயிற்களும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அவர்கள் கற்றுக்கொண்ட இரு பிரதான எண்ணகருக்களான கலாசார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மை ஆகியவற்றை மையமாகக் கொண்ட 10 கதைகள் எழுதப்பட்டுள்ளன. ஒவ்வொரு கதையும்  கலாசார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மை பிரதிபளிக்கும் 10 விழுமியங்களை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளன. இக்கதைகளை அடிப்படையாகக் கொண்டு டிஜிடல் கதைகள் உருவாக்கப்பட்டன. இதற்கான தொழினுட்ப ரீதியான பயிற்சிகள் பதுளை அறிவக (நெனசல) நிலையத்தில் நடைபெற்றது. கதைக்கேற்ற காணொளிகளை படம் பிடித்தல், புகைப்படங்களை எடுத்தல், சித்திரங்களை வரைதல். ஒலி மற்றும் ஒளிப்பதிவுகளை மேற்கொள்ளல் ஆகிய பயிற்சிகளும் அவைகளை கணணி மென்பொருள்களை உபயோகித்து செப்பனிடுவதற்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டன.

டிசம்பர் மாத இறுதியில் இப்பயிற்சிநெறி முடிவடைந்ததுடன் பயிற்சியின் இறுதியில் கலாசார உணர்திறன் மற்றும் பன்முகத்தன்மையை வெளிப்படுத்தும் 10 டிஜிடல் கதையாக்கங்களும் வெளியிடப்பட்டன. பயிற்சியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டன. மாணவர்களுடைய டிஜிடல் கதைகளை பார்வையிடுவதற்காக பாடசாலை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோரும் வருகைதந்திருந்தனர். 






1 comment:

Powered by Blogger.