அம்பாறையில் இராணுவத்தினரின் ஏற்பாட்டில் சர்வமதத் தலைவர்கள் மாநாடு
(எம்.ஐ.முஹம்மட் பைஷல்)
அம்பாறை மாவட்ட இராணுவத்தினரால் ஏற்பாடு செய்யப்பட்ட அம்பாறை மாவட்ட சர்வமதத் தலைவர்களின் 2013 ஆம் ஆண்டுக்கான முதலாவது மாநாடு கல்முனை சுபத்திராராம விகாரையில் அம்பாறை இராணுவ கட்டளைத்தளபதி லெப்டினல் கேனல் சரிந்திரப் பெரேரா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வுக்கு இந்து, பௌத்த, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களின் மதத்தலைவர்கள் கலந்து கொண்டு தங்களின் கருத்துக்களை தெரிவித்தனர்.
இதில் கலந்து கொண்ட அணைத்து மதத் தலைவர்களும் ஒரே கருத்துக்களையே தெரிவித்தனர். இந்த மாநாட்டில் கலந்து கொண்ட மதத்தலைவர்கள் தெரிவித்தவை பின்வருமாறு,
மதத்தலைவர்கள் தங்களின் கடமைகளை சரிவரச் செய்து மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் மற்றவர்களும் சரிவர நடந்து கொள்வார்கள். இந்த நாட்டில் வாழுகின்ற எல்லா மதத்தைச் சேர்ந்தவர்களும் ஒரு தாய் பிள்ளைகளைப்போல் நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு மதத்தலைவர்களின் பங்களிப்புகள் மிக மிக அவசியமாகும்.
அப்போதுதான் நமது இலங்கை தாய் நாடு சுபிட்சமான நாடாக மாற்றம்பெறும். அதற்காக நாம் நமது மதத்தை மட்டும் படித்து தெரிந்திருந்தால் மட்டும் போதாது மற்ற மதங்களைப் பற்றியும் படித்து அறிந்திருத்தல் அவசியம். நாம் கற்றுக் கொண்டவர்களாகவும், மற்றயவர்களுக்கு முன்மாதிரியாக இருந்து கற்றுக் கொடுக்கின்றவர்களாகவும் இருத்தல் அவசியம்.
இதனால் எதிர்கால சந்ததியினருக்கும், இனங்களுக்கும் இடையே பாரிய ஒற்றுமை காணப்படும். என்ற அவசியத்தை வலியுறுத்திக் கூறி இன்னும்பல விடயங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டன.
இந்த மாநாட்டில் அம்பாறை மாவட்ட பள்ளி வாசல்கள் சம்மேளத்தின் தலைவர் டாக்டர் எம்.அஸீஸ், அம்பாறை மாவட்ட இராணுவ கட்டளைத்தளபதி லெப்டினல் கேனல் சரிந்திரப் பெரேரா, காரைதீவு 631 இராணு படைப்பரிவின் பிரிகேடியர் கொமாண்டர் கேனல் பிரியந்த கமகே உள்ளிட்ட பெருமளவிலான உலமாக்கள் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலர் கலந்து கொண்டு கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டனர்.
Post a Comment