நிலத்தை விற்ற கவுதேமாலா கையேந்துகிறது - இலங்கை அரசாங்கம் பாடம் படிக்குமா..?
(இலங்கை அரசாங்கமும் சர்வதேச கம்பனிகளுக்கும், சீனா உள்ளிட்ட நாடுகளுக்கும் இலங்கையின் பல்வேறு பகுதிகளை வற்பனைசெய்து வருகின்றமை இங்கு கவனிக்கத்தக்கது)
மத்திய அமெரிக்க நாடான, கவுதேமாலாவில், உயிரி எரிபொருளுக்காக சோளம் விளைவிக்கப்படுவதால், மக்கள் தங்கள் உணவுக்கு சோளம் கிடைக்காமல் திண்டாடுகின்றனர். பெட்ரோல், நிலக்கரி போன்ற பொருட்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதால், உயிரி எரிபொருளை பயன்படுத்தி, வாகனங்களை இயக்க அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் திட்டமிட்டு உள்ளன.
அமெரிக்காவில் விளைந்த உணவு பொருட்கள், ஏழை நாடுகளுக்கு மானிய விலையில் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தன. இதன் படி, மத்திய அமெரிக்க நாடான, கவுதேமாலா, கணிசமான சோளத்தை, அமெரிக்காவிடம் இருந்து பெற்று வந்தது. தற்போது, அமெரிக்காவில் விளைவிக்கப்படும் சோளத்தில், 40 சதவீதம் உயிரி எரிபொருளுக்கு பயன்படுத்தப்படுகிறது.
இதனால், கவுதேமாலாவுக்கு போதுமான சோளம் கிடைப்பதில்லை. அதுமட்டுமல்லாது, கவுதேமாலாவில் உள்ளூர் விவசாயிகளும், உயிரி எரிபொருளுக்காக, சோளம், கரும்பு, பனை போன்றவற்றை விளைவித்து வருகின்றனர். இதனால், கவுதேமாலா நாட்டின் குழந்தைகள், போதுமான சோள உணவு கிடைக்காமல், வலுவற்றவர்களாக வளர்ந்து வருகின்றனர்.
உயிரி எரிபொருள் தயாரிக்கும் நிறுவனங்கள், கவுதேமாலா நாட்டின் விவசாயிகளை வற்புறுத்தி, அவர்களது நிலங்களை குத்தகைக்கு பெற்று வருகின்றனர். இந்த நிலங்களில், உயிரி எரிபொருளுக்கான சோளம், கரும்பு உள்ளிட்டவை விளைவிக்கப்பட்டு வருகின்றன. சொந்த நிலங்களில் சோளம் பயிரிட்ட விவசாயிகள் கூட, நிலங்களை குத்தகைக்குவிட்ட காரணத்தால், அதிகப்படியாக பணம் கொடுத்து, பல மைல் தூரம் சென்று, சோளம் வாங்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
இதற்கு கவுதேமாலா விவசாயிகள் சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். "விவசாயிகள் கார் ஓட்டவில்லை. எனவே, அவர்களுக்கு உயிரி எரிபொருள் தேவையில்லை. அவர்களுக்கு தேவையானது உணவு தான்' என, இவர்கள் வற்புறுத்தி உள்ளனர். "வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதாரம் பெருகும்' என, ஆசைக்காட்டி, பன்னாட்டு நிறுவனங்கள், கவுதேமாலாவில் பெரும்பாலான நிலங்களை, உயிரி எரிபொருளுக்கான விளைநிலங்களாக மாற்றிவிட்டன. இதனால், உணவுக்கான பழங்கள், சோளம் உள்ளிட்டவை கிடைக்காமல், அவற்றை இரண்டு மடங்கு விலை கொடுத்து வாங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.
Post a Comment