ஓலுவில் தாறுல் இல்ம் வித்தியாலயத்தின் அவலநிலை
(எஸ்.எல். மன்சூர்)
அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் கடந்தாண்டில் ஆரம்பிக்கப்பட்ட பாடசாலைகளுள் ஒலுவில் தாறுல் இல்ம் வித்தியாலயமும் ஒன்றாகும். ஒலுவில் துறைமுகத்தினால் வீடுகள், காணிகளை இழந்த மக்களுக்காக அமைக்கப்பட்ட இக்குடியேற்றக் கிராமத்தில் ஒரு பாடசாலையின் முக்கியத்துவம் உணரப்பட்டபோது தாறுல் இல்ம் எனப்படும் ஒரு ஆரம்பப்பாடசாலை கடந்தாண்டில் உதயமாகியது. இக்கிராமமானது ஒலுவில் கிராமத்திற்கு மேற்காக அமைந்து காணப்படுவதுடன் துறைமுக அதிகார சபையினால் 58வீடுகள் கட்டப்பட்டு தனிக்கிராமகவே அமைந்துள்ளது.
இவ்வீடுகளில் வசிக்கின்ற சுமார் 250க்கும் மேற்பட்ட மக்களுக்காகவும், அவர்களது பிள்ளைகளை கற்பதற்குரிய பாடசாலை ஒன்றை உடனடியாக அமைக்கவேண்டும் என்கிறநோக்கில் கடந்தாண்டு(2012) தற்காலிக கொட்டில் ஒன்றில் புதிய மாணவர்கள் தரம் ஒன்றில் இணைத்துக் கொள்ளப்பட்டனர். இருப்பினும் மழை போன்ற இயற்கைக் காரணிகளால் பாதிக்கப்பட்ட இப்பாடசாலையை அப்பகுதியில் அமைந்துள்ள பள்ளிவாசலின் ஒரு பகுதியில் தற்காலிகமாக இயங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு தற்போது பள்ளிவாசல் கட்டிடத்திலேயே இயங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
கடந்தாண்டில் 22 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலைக்கு பொறுப்பதிபராக எம். எம. பளீல் நியமிக்கப்பட்டு இரண்டு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டிருந்தனர். பின்னர் ஒரு ஆசிரியர் இடமாற்றப்பட்ட நிலையில் ஒரேயொரு ஆசிரியரும், அதிபரும் இணைந்து பல முயற்சிகைள மேற்கொண்டு வந்தனர். இவ்வாண்டு மேலும் ஒரு ஆசிரியை நியமிக்கப்பட்டு இரண்டு ஆசிரியர்களுடன் அதிபருமாக மூவர் சேவையாற்றி வருகின்றனர். இப்பாடசாலையின் கட்டுமானப் பனிகளை முன்னெடுப்பதற்காக பல அரசியல் வாதிகளிடமும், காரியாலய மட்டத்திலும் முன்னெடுக்கப்பட்டிருந்தாலும் அது உடனடியாக நடைபெறவில்லை. அக்குறைபாட்டை நிவர்த்திக்கும் வகையில் இவ்வாண்டு நிவர்த்திக்கப்படும் என்று அக்கரைப்பற்று வலயத்தின் யுனிசெப் இணைப்பாளரும், உதவிக் கல்விப் பணிப்பாளருமான எஸ்.எம்.ஜெமில் தெரிவித்தார்.
பாடசாலையின் அவலநிலையின் காரணமாக இவ்வாண்டு குறைவான மாணவர்களே சேர்ந்துள்ளதாக பாடசாலையின் அதிபர் தெரிவித்தார். அக்கரைப்பற்று வலயத்தின் முயற்சியினால் சுமார் 30இலட்ச ரூபாய் நிதி தற்போது ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த அதிபர் திகமாடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக எச்.எம். ஹரீஸ் அவர்களின் நிதியொதிக்கீட்டினால் மாணவர்களுக்கான மலசல கூடம் ஒன்றும் புதிதாக ஆரம்பிக்கப்படவுள்ள இடத்தில் கட்டப்பட்டுள்ளதாகவும், ஒக்ஸைட் நிதியுதவியுடன் வலயக் கல்வி காரியாலயத்தின் அனுசரையுடன் மேலும் ஒருதொகுதி மலசல கூடமும் அமைக்கப்பட்டுள்ளதுடன், மாணவர்களுக்கான குடிநீர் அருந்துவதற்கான மையமும் பாடசாலை அமையப் பெறவுள்ள இடத்தில் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
இப்பாடசாலைக்கான காணியினைப் பெற்றுக் கொள்வதில் கடந்தகாலத்தில் பல தடைகள் ஏற்பட்ட போதிலும் அதிபர், ஆசிரியர்கள் மற்றும் ஊர் பிரமுகர்கள் இணைந்து துறைமுக அதிகார சபையிடம் வேண்டிக் கொண்டதற்கிணங்க தற்போது புதிதாக பாடசாலை கட்டிடம் அமையப்பெறவுள்ள இடத்தினை ஒதுக்கித்தந்துள்ளதுடன் மேலும் எதிர்காலத்தில் இப்பாடசாலையின் அபிவிருத்தி கருதி அண்மையிலுள்ள நிலத்தையும் தந்துதவுவதற்கு கோரிக்கை விடப்பட்டுள்ளதாகவும் அதிபர் எம்.எம்.பளீல் தெரிவித்தார். அத்துடன் ஆசிரியர் தட்டுப்பாடு, தளபாடத்தட்டுப்பாடு போன்றவைகளுடன் காணப்படும் இப்பாடசாலையின் அவலைநிலை தொடராது என்பதற்கு அறிகுறியாக இன்று(07.01.2013) இப்பாடசாலைக்கு மேற்பார்வைக்காக விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த அக்கரைப்பற்று வலயக் கல்வி அலுவலகத்தின் உதவிக் கல்விப்பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள் ஆகியோரிடம் பாடசாலையின் அதிபர், ஆசிரியர்களும் பாடசாலையின் குறைபாடுகளையும் எடுத்துக் கூறினர்.
அப்போது அங்கிருந்த ஆசிரிய ஆலோசகர் எம்.ஏ. அபூதாஹிர் மற்றும் ஏனைய அதிகாரிகள் அனைவரும் ஒன்றுசேர்ந்து இப்பாடசாலையின் அவலநிலைகள், குறைபாடுகள் போன்றவற்றை உடனடியாக வலயக் கல்விப் பணிப்பாளருக்கு சமர்ப்பித்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினர். ஆரம்பப் பாடசாலையாக காணப்படும் இவ்வித்தியாலத்தில் கற்பித்த ஆசிரியரான ஐ.எல். ஹமீட் அவர்களது தியாக சிந்தையின் விளைவாக கடந்தாண்டு தரம் ஒன்று மாணவர்களின் அடைவு போற்றத்;;;தக்கதாக காணப்படுகின்றது. மேலும் ஒரு ஆசிரியர் நியமிக்கப்படுவதன் அவசியம், புதிய கட்டிடத்திற்கான அவசியம் போன்றவைகளை உடன் விரரைவு படுத்தப்படுவதன் அவசியத்தை உணர்ந்து உரிய அதிகாரிகள், அரசியல்வாதிகள் இப்பாடசாலைக்குரிய தேவைகளை நிவர்த்திக்குமாறு இப்பாடசாலைச் சமூகம் வேண்டிக்கொள்கின்றது.
Post a Comment