Header Ads



இங்கிலாந்து பார்க்கரில் குதிரை + பன்றி கலப்பு - வழக்கு தொடர முஸ்லிம்கள் தயார்


(மாலை மலர்)

இங்கிலாந்து, மற்றும் அயர்லாந்து நாட்டில் உள்ள சூப்பர் மார்க்கெட்களில் விற்கப்படும் உணவான 'பர்கர்' சர்வதேச புகழ் பெற்றதாக கருதப்பட்டு வந்தது. இந்நிலையில், சமீப காலமாக பர்கரின் சுவையில் ஏதோ மாற்றம் தென்படுவதாக அயர்லாந்து நாட்டின் உணவு பாதுகாப்பு ஆணையத்திற்கு புகார்கள் குவியத் தொடங்கின.

இதனையடுத்து, அயர்லாந்து நாட்டின் பிரபல பர்கர் தயாரிப்பு நிறுவனம், லண்டனில் உள்ள டெஸ்கோ ஆகிய இடங்களில் விற்பனையான மாட்டிறைச்சி பர்கர்களின் மாதிரிகளை, அதிகாரிகள் கைப்பற்றி ஆய்வு கூடத்திற்கு பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பரிசோதனையின் முடிவில் அந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.

27 பர்கர்களை பரிசோதித்தனர். அதில் 10ல் குதிரையின் மரபணுக்களும், 17ல் பன்றியின் மரபணுக்களும் இருப்பது தெரிய வந்தன. டெஸ்கோ நிறுவனத்தில் கைப்பற்றப்பட்ட மாதிரிகளில் இருந்த இறைச்சியின் அளவில் 29 சதவீதம் குதிரை இறைச்சி என்பதும் உறுதி செய்யப்பட்டது. இதுதவிர, 21 வகை மாட்டிறைச்சி தொடர்பான உணவு வகைகளில் பன்றியின் டி.என்.ஏ. இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதையொட்டி, அயர்லாந்து நாட்டு வாடிக்கையாளர் ஒருவர் கருத்து கூறுகையில் 'குதிரை இறைச்சி உண்பது எங்கள் நாட்டின் கலாச்சாரத்தில் கேட்டறியாத ஒன்று. மாட்டிறைச்சி என்ற பெயரில் குதிரை இறைச்சியை கலப்படம் செய்து விற்ற நிறுவனங்களின் மீது அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார்.

'இஸ்லாமிய சட்டங்களின்படி பன்றி இறைச்சி, பன்றி கொழுப்பு போன்றவை விலக்கப்பட்ட (பாவ) பொருளாக கருதப்படுகின்றது. எனவே, மாட்டிறைச்சி என்ற பெயரில் பன்றி இறைச்சியை உணவுகளில் கலப்படம் செய்து விற்று லாபம் ஈட்டிய நிறுவனங்களிடம் இழப்பீடு கேட்டு வழக்கு தொடுப்போம்' என அயர்லாந்து, மற்றும் லண்டனில் வாழும் முஸ்லிம்கள் கருத்து தெரிவித்தனர்.

இந்த முறைகேட்டிற்கு, இறைச்சியை சப்ளை செய்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என 'பர்கர்' தயாரிப்பு நிறுவனத்தின் உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார். 'குதிரை இறைச்சியை உண்பதால் உடல் நலக்குறைவு ஏற்படும் வாய்ப்புகள் ஏதுமில்லை. எனினும், ஆடு, மாடு, குதிரை, பன்றி போன்ற அனைத்து வகை இறைச்சிகளும் ஒரே தொழிற்சாலையில் பதப்படுத்தப்படுவதால் இந்த தவறு ஏற்பட்டிருக்கக்கூடும்' என அயர்லாந்து சுகாதார அதிகாரி ஒருவர் கருத்து தெரிவித்தார். 

No comments

Powered by Blogger.