Header Ads



மாணவர்களின் நலன்கருதி சவால்களுக்கு முகங்கொடுப்பதே சிறந்த நிருவாகமாகும் - அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர்



(எஸ்.எல். மன்சூர்)

மாணவர்களின் நலனைமேம்படுத்தி பாடசாலைகளில் ஏற்படும் சவால்களுக்கு முகங்கொடுத்து அதனைத் தீர்த்துவைக்கின்ற ஒருவரே சிறந்த நிருவாகியாவார். என அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் அஷ்சேஹ் ஏ.எல்.எம். காசீம் தெரிவித்தார். 

அட்டாளைச்சேனை கோட்டக் கல்விப் பணிப்பாளர் அல்ஹாஜ் ஏ.சி. கஸ்ஸாலி தலைமையில் நேற்று நடைபெற்ற கோட்டப்பாடசாலைகளின் அதிபர்கள் கலந்து கொண்ட விசேட ஒன்றுகூடலுக்கு பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு வலயக் கல்விப் பணிப்பாளர் தெரிவித்தார். மேலும் அவர்பேசுகையில்,,

ஒவ்வொரு அதிபர்களும் தங்களுக்கான கடமைகளை சிறப்பாக முன்னெடுத்துச் செல்லவேண்டும். பாடசாலைகளைப் பொறுத்தளவில் பல்வேறு சவால்களுக்கும் முகங்கொடுக்க வேண்டிவரும். ஆசிரியர் பற்றாக்குறை, மாணவர்களின் பிரச்சினை, ஆசிரியர்களின் பிரச்சினை, சமுகத்தின் பிரச்சினை, காரியாலய மட்டத்திலான பிரச்சினைகள் போன்றவைகள் ஒரே நேரத்தில் ஏற்படலாம். அத்தனை சவால்களையும் சாதமாகப் பயன்படுத்தி மாணவர்களின் நலனில் அக்கரை கொண்டு அதனை வெற்றி கொள்பவரே சிறந்த நிருவாகியாவார். எனவும் தெரிவித்தார்.

அட்டாளைச்சேனைக் கோட்டத்திலுள்ள 24 பாடசாலைகளிலும் கல்வி பல்வேறுபட்ட குறைபாடுகள் காணப்படுகின்றன. உள்ள வளத்தைக் கொண்டு உச்சப்பயனை அடைவதற்கு அதிபர்கள் முற்சிக்கவேண்டும். குறைகள் காலவோட்டத்தில் நிவர்த்திக்கப்படும். நிறைவாக இருந்தால் சவால்களை வெற்றி கொள்ள முடியாது. குறைவாக இருக்கின்றபோதுதான் சாதனைகைள் நிலைநாட்டப்படும். அதிபர்கள் தங்களது பாடசாலைகளில் காணப்படும் வளத்தைக் கொண்டு உச்சப்பயனை அடைந்து சாதனைபுரியவேண்டும். வரலாற்றை எடுத்துப்பார்த்தால் சாதனையாளர்களின் சாதனைகள் குறைவான வளத்தைக் கொண்டு உச்சப்பயனை அடைவதிலேயே சாதனை நிலைநாட்டியுள்ளனர். இதனை ஒவ்வொரு அதிபரும் தங்களது ஆசிரியர்கள், சமூகம் ஊடாக சாதனை புரிந்து இவ்வலயத்தின் கல்வி மேம்பாட்டுக்கு உதவுமாறும் வேண்டிக் கொண்டார். இவ்வைபத்தில் அட்டாளைச்சேனைக் கோட்டத்திற்கான அதிபர்களது சங்கத் தெரிவும் இடம்பெற்றதுடன் வலயக் கல்வி அலுவலகத்தின் திட்டமிடல் உதவிக் கல்விப்பணிப்பாளர் ஏ. எம். அஷ்ஹர், ஆசிரிய ஆலோசகர் எஸ்.எல். மன்சூர் ஆகியோரும் கலந்து கொண்டனர்.






No comments

Powered by Blogger.