'ரிஸானாவை எனது குழந்தையாக நினைத்து விடுதலை செய்யூங்கள" என ஜனாதிபதி கோரினார்!
(எம்.ஜே.எம். தாஜுதீன்)
எனக்கு பெண் குழந்தைகள் இல்லை. ரிசானாவை எனது குழந்தையாக நினைத்து மன்னித்து விடுதலை செய்யுங்கள் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சவுதி மன்னரிடம் உருக்கமான வேண்டுகோள் விடுத்திருந்தார் என தகவல் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு இன்று பிற்பகல் பாராளுமன்ற முதலாம் குழு அறையில் நடைபெற்றபோது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலிளிக்கும்போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இது பற்றி அமைச்சர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்:
ரிஸானாவின் உயிரைக் காப்பாற்ற அரசாங்கம் முழு முயற்சி மேற்கொண்டபோதும் அவை பலனளிக்காமல் போனமை மிகவும் கவலைக்குரியது.
ஜனாதிபதியின் உருக்கமான வேண்டுகோளை ஏற்ற சவுதி மன்னர் 3 மில்லியன் சவூதி ரியால்களை மரணமடைந்த குழந்தைக்கு நட்டஈடாக வழங்க முன்வந்தார். எனினும் மரணமடைந்த குழந்தையின் தயார் அதனை பிடிவாதமாக நிராகரித்து உரிய தண்டனை வழங்குமாறு கோரிநின்றார்.
ஒரு நாட்டின் சட்ட நடவடிக்கையில் தலையிட மற்றொரு நாட்டினால் முடியாது. சவுதி அரேபிய நாட்டின் சட்டப்படி எல்லாம் முடிந்துவிட்டது.
எனது வாழ்நாளில் இவ்வாறான ஒரு சோகமான நிகழ்வை நான் எதிர்கொள்ளவில்லை. இது குறித்து நான் மிகவும் மனவேதனை அடைகிறேன் என அமைச்சர் மேலும் கூறினார்.
Post a Comment