Header Ads



“மனிதம் அடைந்த வெற்றியாக”


(சத்யன்)

அன்புமிக்க தோழர்களே..!

சமகால இலங்கை முஸ்லிம் ஊடகங்களில் முஸ்லிம்களுக்கெதிரான இனரீதியான அடக்குமுறை குறித்து பல்வேறுவிதமான கருத்தாடல்கள் இடம்பெற்று வருகின்றன. பல்வேறு ஆதங்கங்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. யோசனைகள் முன்வைக்கப்பட்டுகின்றன. ஆனால் இலங்கை முஸ்லிம் சமூகம் குறித்த சரியான பார்வையுடன் நோக்கும்போது அத்தகைய ஆதங்கங்களுடன் மேலும் சில விடயங்கள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படவேண்டும் என கருதுகின்றேன். 

இலங்கையில் முஸ்லிம்களுக்கெதிரான இனரீதியான ஒடுக்குமுறைகள் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகவும் அதிகரித்துக் காணப்படுகின்றது என்ற கருத்தும் உணர்வும் பரவலாக இருக்கின்றது. ஆனால் சரியான புள்ளிவிபரங்கள், தரவுகளுடன் நோக்கும்போது இலங்கை முஸ்லிம் சமூகம் தவறாக வழிநடாத்தப்பட்டு விடுமோ என்ற அச்சம் எழுகின்றது. 1905கள் தொடங்கி இலங்கையில் முஸ்லிம்களுக்கு எதிரான இனரீதியான பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறியிருக்கின்றன. இனரீதயான அழிவுகள் பலவற்றை எமது சமூகம் எதிர்கொண்டிருக்கின்றது. தமிழ்- சிங்கள இனமுரண்பாடுகள் தலைதூக்க்கியிருந்த காலங்களில் கூட முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகள் இடம்பெற்றிருக்க்கின்றன. 

அதன் தொடர்ச்சியில் சமகாலத்திலும் பல்வேறு அசம்பாவிதங்கள் நிகழ்ந்தேறிக் கொண்டிருக்கின்றன. ஊடகங்களின் செல்வாக்கு மற்றும் சமூக இணையங்களின் மூலம் சமகால செயற்பாடுகள் குறித்து உடனுக்குடன் தகவல்கள் அறியப்படுகின்ற நிலையினைத் தவிர்த்து முன்னைய கால இனவாத செயற்பாடுகளுக்கும் சமகால செயற்பாடுகளுக்கும் இடையில் பாரிய வித்தியாசத்தை எம்மால் உணரமுடியவில்லை. ஊடக செயற்பாடுகளின் மூலம் ஒருவித பதற்றம் ஏற்பட்டு விடுகின்றதோ என்றும் அதன் மூலம் சமூகத்தில் தவறான முடிவுகள் எட்டப்பட்டு விடுமோ என்றும் எண்ணத்தோன்றுகின்றது.

தற்போதைய சூழ்நிலையில் பிரச்சினையின் மூலவேரினை அறியவேண்டிய நிலையில் நாம் இருக்கின்றோம். ஆனால் பலர் பிரச்சினையின் கிளைகளை வெட்டிச்சாய்த்துவிடுவதிலும், கிளைகளில் தொங்கி பிரபல்யத்தினை ஈட்டிக்கொள்வதற்கும் அவசரப்படுவதை எம்மால் உணர முடிகின்றது. இலங்கையில் எந்தவொரு இனத்துக்கு எதிராகவும் முஸ்லிம்கள் அணிதிரட்டப்படுவார்களேயானால் அதுவே இந்த தேசத்தின் முதன்மையான அழிவின் அடையாளமாக இருக்கும். இலங்கைத் தேசத்தில் இனவாதம் என்பது இங்குள்ள மக்களின் அத்தியாவசியமானதொரு அம்சமாக காலனித்துவ காலம் தொட்டு மாற்றப்பட்டிருக்கின்றது. அதன் வரலாறு நீண்டது. அதற்கான காரணிகளும் மிக ஆழமானது, அதனை போசிக்கும் சக்திகளும் மிகவும் பலமானவை. இலங்கையில் பாரிய அழிவு நாசங்களுக்கு அடிப்படைக் காரணியாக இருப்பது இனவாதமே. சிங்கள்- தமிழ் சமூகங்களுக்கிடையிலான மோதல்களின் அடிப்படை இனரீதியான வழிகாட்டல்களே. பல்வேறு சந்தர்ர்ப்பங்களில் முஸ்லிம்களும் இனரீதியான செயற்பாட்டாளர்களால் வழிநடாத்தப்படுகின்றார்கள். இங்குதான் முஸ்லிம் சமூகம் சுதாகரித்துக்கொள்ள வேண்டும்.

இந்தப் பிரச்சினையின் வேர் “இனவாதம்” “எப்பொழுது இந்த நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படுகின்றதோ அப்போதே இந்த நாடு முழுமையான சுதந்திரத்தை அடையும்” இது என்னுடைய ஆணித்தரமான நம்பிக்கையாகும். சமகாலத்தில் முஸ்லிம்களுக்கெதிராக மேற்கொள்ளப்படுகின்ற எல்லா நடவடிக்கைகளும் இனவாதம் என்னும் வேரின் அடியாக எழுகின்றன. அதேபோன்று அவற்றுக்கு பதிலடிகொடுக்க நினைக்கும் முஸ்லிம் செயற்பாடுகளும் இனவாத வேரின் அடிப்படையில் இருந்துவிடக்கூடாது என்பது எமது நிலைப்பாடாகும். இனவாதத்தை ஒழிக்கும் செயற்பாட்டில் இந்த தேசத்தின் பெரும்பான்மை சமூகம் தனக்கிருக்கின்ற தார்மீகப் பொறுப்பினை மறந்திருக்கின்றது அல்லது மறுத்திருக்கின்றது. 

இந்த நாட்டின் பிரசைகள் என்றவகையில் இந்த நாட்டை நேசிக்கின்றவர்கள் என்றவகையில்  இந்த தேசத்தில் இனவாதத்தை இல்லாதொழிகின்ற ஒரு பாரிய போராட்டம் அவசியமாகின்றது. அது ஒரு இரத்தம் சிந்தாப்புரட்சியாக அமையவேண்டும். அதுவே முஸ்லிம்கள் மட்டுமல்ல இந்த தேசத்தில் வாழ்கின்ற எல்லா மக்களுக்குமான வெற்றியாக அமையும். அதனை மிகச்சரியாகத் திட்டமிடுவோம், அமுலாக்குவோம். அது இந்த தேசத்தின் “மனிதம் அடைந்த வெற்றியாக” அடையாளப்படுத்தப்படும்.

அதற்கான சில அடிப்படை வழிகாட்டல்கள்..

முஸ்லிம்கள் இனரீதியாக சிந்திப்பதையும், இனரீதியாக செயற்படுவதையும் இனரீதியாக முஸ்லிம் உம்மத்தை வழிகாட்டுவதையும், உணர்வூட்டுவதையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும்

இந்த தேசத்தில் வாழுகின்ற பெரும்பாலான சிங்களவர்களும், தமிழர்களும், ஏனைய இனத்தவர்களும் இனரீதியான சிந்தனைகளையும் செயற்பாடுகளையும் வெறுக்கின்றார்கள், இந்த உண்மையினை உணர்ந்து அவர்களை இனவாதத்திற்கெதிரான எமது முயற்சியில் இணைத்துக்கொள்தல் வேண்டும்

முஸ்லிம் சமூகத்தில் இனரீதியான செயற்பாடுகளை எதிர்கொள்வதில் முஸ்லிம் அரசியல் கட்சிகள், இஸ்லாமிய இயக்கங்கள் தோல்வி கண்டிருக்கின்றன, எனவே இதனை எதிர்கொள்வதற்கு முற்றிலும் புதிய அணுகுமுறையினைக் கொண்ட ஒரு செயற்சக்தி உருவாக்கப்படவேண்டும்.

உச்ச அளவிலான சிந்தனைப் புரட்சிக்கான பொறிமுறை முதன்மையாக உருவாக்கப்படவேண்டும், அதனைத்தொடர்ந்து நடத்தை ரீதியான செயற்பாட்டுரீதியான மாற்றங்களுக்கான வழிகாட்டல்கள் ஒழுங்குபடுத்தப்படவேண்டும்.

இது ஒரு போராட்டம், இது ஒரு சாத்வீகப் போராட்டம், வெற்றி இலக்கான இனவாதம் தோற்கடிக்கப்படும்வரை, இந்த நாட்டின் அரசியலில் இந்த நாட்டின் பொருளாதாரத்தில், இந்த நாட்டின் எல்லாவிதமான சமூகச் செயற்பாடுகளிலும் இனவாதம் தோற்றுப்போகும்வரை எமது போராட்டம் தொடரவேண்டும்.

இவ்வாறாக ஒரு தூய்மையான அடித்தளத்தில் இருந்து நாம் சிந்திப்போம், செயற்படுவோம். வெற்றிகாணுவோம். இதுவே தேசத்தின் வெற்றியாக அமையும். இன்ஸா அல்லாஹ்.



4 comments:

  1. இனவாதத்திற்கு எதிராக உள்ள உங்கள் அக்கறை பாராட்டுக்கு உரியது. உங்கள் தேசப்பற்று எம்மை மெய்சிலிர்க்கவைக்கிறது ஆயினும் எமக்கான உரிமைகளும், உடமைகளும் போராட்டம் இன்றி வன்முறையின்றி அரசியல் நீரோடையில் அவ்வப்போது அள்ளி அனுபவித்துக்கொண்டிருந்த முஸ்லிம் சமுதாயம் இன்று அதனை பறிகொடுத்துக் கொண்டிருக்கிறது. இதற்கான முளுக்கரணமும் இப்போதுள்ள முஸ்லிம் தலைமைகள்.



    முஸ்லிம் தலைமைகள் எமக்காக குரல் கொடுக்கவே பாராளுமன்றம் அனுப்பினோம் பதவிக்காக ஆளுமையோடு சேர்த்து ஆண்மையையும் இழந்த தலைமைகள் தேர்தல் களத்தில் மட்டும் இனவாதம் பேசி வோட்டுக்களை வாங்கி அவர்களது பலத்தை காட்டிக்கொண்டிருக்கின்றனர்.

    இவ்வளவு ஏன் ?.. யுத்தம் முடிந்து 3 வருடம் ஆகியும் சமாதானம் மலரவுமில்லை, வாழ்க்கைத்தரம் உயரவுமில்லை. இன்னும் இன்னும் இனச்சுத்திகரிப்பு மட்டுமே நடப்பது யாவரும் அறிந்த இரகசியம்.

    ஐ.நா சபையில் என் தாய்மொழியில் பேசி நம் மொழிக்கு சமதானம் தந்து "நாம் எல்லோரும் ஒரு தாய் வயிற்றுப்பிள்ளைகள் " என அடிக்கடி கூறும் ஜனாதிபதிகூட எமக்காக குரல் கொடுக்கவில்லை...! கேள்வி :01 ஜனாதிபதியின் மௌனம் சம்மதமா இல்லை இனவெறியர்களின் உந்துசக்தியா?

    கேள்வி :02 வடக்கிலும் கிழக்கிலும் இவர்கள் தேடிச்செல்லும் புண்ணிய பூமி யுத்தகாலத்தில் இடம் பெயர்ந்து இருந்ததா?

    கேள்வி :03 சுனாமி ஆதாரங்கள் முஸ்லிம் நாடுகள் கொடுக்கும் போது ஹலால் சான்றிதளை எதிர்த்தார்களா?

    என பல கேள்விகள் எம்மை உயிரோடு கொல்கின்றன திரு. சத்யன் அவர்களே...!


    ஒரு பூனையை ஒரு அறையில் வைத்து தாக்கினால் அது தர்காப்புக்காகவேனும் சீறும்/ பாயும் இதனை பூனையின் போராட்டம் என்பது தவறு.

    எல்லாம் வல்ல இறைவன் இன்னும் ஒரு கொடிய யுத்தத்தில் இலங்கை மக்களை பாதுகாப்பானாக...! ஆமீன்

    ReplyDelete
  2. எல்லாம் வல்ல இறைவன் இன்னும் ஒரு கொடிய யுத்தத்தில் இருந்தும் இலங்கை மக்களை பாதுகாப்பானாக...! ஆமீன்

    ReplyDelete
  3. சத்யன் சொலவது சரியாய்தான் தோன்றுகிறது மனிதத்தை வாழவைப்பதற்காக, நாட்டின் சிறப்பான எதிர்காலத்துக்காக நாம் இனவாதத்தை மறந்து செயற்படுவது நல்லதுதான்..... ஆனால் அதற்கான வழிமுறையாக சொல்லப் பட்ட விடையங்கள் சிந்திக்க வேண்டியதாகும்.
    எந்த ஒரு நபியும் எடுத்தியம்பிராத புதிய ஒரு இனவாதத்தை முன்வைக்கிறார் போலும். முஸ்லிம் அரசியல்வாதிகளை இனவாதத்துக்குள் சேர்த்தவர் இஸ்லாமிய இயக்கங்களையும் தன் இனவாதச்சிந்தைக்குள் சேர்த்த நோக்கம்தான் தெரியவில்லை.
    ஹலால் உணவிற்கான பாதுகாப்பை தளர்த்தி மாற்று மதத்தவர்கள் சொல்வது போன்று குர்ஆன் மத்ரஸாக்களையும் கைவிடுவோமா?
    ஞாயிற்றுக்கிழமைகளில் பன்சலைக்குச் சென்று மலர் வளையம் வத்து மண்டியிட வேண்டுமோ ?
    நேற்று பங்காள தேசத்தில் சிலை உடைக்கப்பட்டால் முஸ்லிம்கள் ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும் என்றவர்கள் நாளை வந்து... 1400 வருடங்கழுக்கு முன் நபி (ஸல்) அவர்களால் உடைப்பிக்கப்பட்ட சிலைகழும் புத்தர் உடையதுதான், நீங்கள் சவுதிக்கு எதிராய் ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் எனச்சொன்னால் நாம் ஆர்ப்பாட வேண்டுமா ?
    உங்கழுடைய எம்மதமும் சம்மதம் எனும் கொல்கை சரி வராது.

    இஸ்லாத்தின் அழகிய வழிகாட்டல்களை நாம் எடுத்து நடந்தால் அது போதும் மனங்களை வென்று, மனிதத்தை வாழ வைக்க.
    இன்று, அதிகமான மாற்று மத மக்கள் ஹலால் உணவுப் பிரச்சனையை பற்றி விளங்குவதற்கு அப்பிரச்சனையே வழி கோலிற்று,
    றிசானா நபீக்கிற்கு அல்லாஹ் அருள் புரியட்டும். இஸ்லாமியக்குற்றவியலும் அதன் நிறைவேற்றும் விதமும், இன்று உலகில் உள்ள பிரச்சனைகழுக்கு இன்றியமையாதது என்பதையும்; உண்மையான கிலாபத் சவுதியில் கூட இல்லை என்பதையும் எத்தனையோ மாற்றுமதத்தவர்கள், விளங்க அவரது பிரச்சனை வழிகோலி உள்ளது.
    ஆக எதிர்ப்புகள் இல்லாத எந்தவொரு சமுதாயத்தையும் காண முடியாது.
    அவற்றை எதிர்கொள்ழும் விதத்தைக் கொண்டு நாம் அருள் புரியப் படுவோம் அல்லது சபிக்கப் படுவோம்.
    ஆனால் உண்மையான முஸ்லிமாய் வாழ்ந்தால்; மனிதத்தை நேசிக்கும் ஓர் நல்ல இலங்கையனாய் வாழ முடியும்.

    ReplyDelete
  4. //முஸ்லிம்கள் இனரீதியாக சிந்திப்பதையும், இனரீதியாக செயற்படுவதையும் இனரீதியாக முஸ்லிம் உம்மத்தை வழிகாட்டுவதையும், உணர்வூட்டுவதையும் முற்றாகத் தவிர்க்க வேண்டும்// WHAT DO YOU MEAN BY THIS?

    ReplyDelete

Powered by Blogger.