இலங்கை அரசாங்கம் தங்க மாடுகளை இறக்குமதி செய்துள்ளதா..?
(Tm) அவுஸ்திரேலியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டுள்ள 'பேப்பசியா' என்ற இனத்தைச்சேர்ந்த பசுமாடுகளின் உலக சந்தை பெறுமதி இலங்கை ரூபாவின் பெறுமதியில் 2 இலட்சம் ரூபாவாகும். எனினும், அங்கீகரிக்கப்பட்டுள்ள தொகையை பார்த்தால் பசுமாடு ஒன்றுக்கு 7 இலட்சம் ரூபா செலவாகும் இவைகள் பசுமாடுகளா? இன்றேல் தங்க மாடுகளா? என்று ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பினர்.
ஊடகத்துறை அமைச்சின் கேட்போர் கூடத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே ஊடகவியலாளர்கள் மேற்கண்டவாறு கேள்வி எழுப்பினர்.
கேள்விகளுக்கு பதிலளித்த ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவைப்பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல, மாடுகளின் தரம் பற்றி என்னால் சரியான கூறிமுடியாது. பசுமாடுகளை இரண்டு இலட்சம் ரூபாவிற்கு மேலும் கொள்வனவு செய்யலாம் அமைச்சர் தொண்டமான் இறக்குமதி செய்துள்ள மாடுகள் பெறுமதிவாய்ந்தவையாக இருக்கலாம். ஆகையால் உங்களுடைய கேள்விகளுக்கு பதிலளிப்பதற்கு அவரையே அடுத்த அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்போம் என்றார்.
இதேவேளை, அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ள அமைச்சரவைப்பத்திரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பசுமாடுகளை இறக்குமதி செய்தல் வேலைத்திட்டத்தின் கீழ் 4500 பசுமாடுகளை வளர்ப்பதற்காக போபத்தலாவ, நிக்கவரெட்டிய மற்றும் ஸ்ரீரிங்கபான் பாற்பண்ணைகளில் விசேட பண்ணைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
பசு மாடுகளை இறக்குமதி செய்வதற்காக 28,537,185 அமெரிக்க டொலர் ஒதுக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக 500 பசுமாடுகள் இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. அந்த பசுமாடுகள் போபத்தலாவ பாற்பண்ணைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.
இன்னும்,1500 பசுமாடுகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 2013 ஆம் ஆண்டிற்குள் மிகுதி 2500 பசுமாடுகளும் இறக்குமதி செய்யப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்தே, நாட்டில் பால் உற்பத்தி செய்வதற்கு போதியளவான வளப்பற்றாக்குறை இருக்கின்றது. பால் உற்பத்தியாளர்களுக்கு உரிய விலை கிடைக்காமையினால் அவர்களை பாலை கீழே கொட்டுகின்றனர் என்று சுட்டிக்காட்டிய ஊடகவியலாளர்கள்; உலக சந்தையில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலான விலைக்கொடுத்து பசுமாடுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இது பசுமாடுகளா? இன்றேல் தங்கமாடுகளா? என் வினவினர்.
Post a Comment