Header Ads



பாகிஸ்தானில் தொடரும் அரசியல் பரபரப்பு - இராணுவம் ஆட்சிக்கு வருமென்றும் பேச்சு..!


பாகிஸ்தானின் 65 ஆண்டு அரசியல் வரலாற்றில் எந்த ஒரு கட்சியும் 5 ஆண்டுகள் முழுமையாக ஆட்சியில் இருந்தது இல்லை. அங்கு பல தடவை ராணுவ புரட்சி நடந்துள்ளது. மக்களாட்சியும், ராணுவ ஆட்சியும் மாறி, மாறி நடந்துள்ளது.

பாகிஸ்தான் மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி ஆட்சியைப் பிடித்ததும் ஆசிப் அலி சர்தாரி ஜனாதிபதியாக பதவியேற்றார். இவர் தன் ஆட்சியை வரும் மார்ச் மாதம் பூர்த்தி செய்து சாதனை படைப்பார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் திடீர் அரசியல் நெருக்கடியை சந்தித்துள்ளார். 

இவருக்கு நெருக்கமாக இருந்த கிலானி கடந்த ஆண்டு ஜூன் மாதம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு காரணமாக பதவி விலக நேரிட்டது. அதன் பிறகு பிரதமர் பதவியை ஏற்ற ராஜா பர்வேஸ் அஷ்ரப்பும் தற்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவால் பதவியை பறிகொடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். 

மின்துறை திட்டங்களில் லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வழக்கில் அஷ்ரப்பை 24 மணி நேரத்துக்குள் கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருப்பதால் பாகிஸ்தானில் அரசியல் பரபரப்பு உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. 

இதற்கிடையே அரசை அகற்ற கோரி இஸ்லாமிய மத குரு தாகீர்-உல்-காத்ரி தலைமையில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு போராட்டம் நடத்தி வருகிறார்கள். பாகிஸ்தானில் தேர்தல் சீர்திருத்தம் செய்யப்பட வேண்டும் மற்றும் பாராளுமன்றத்தையும், மாகாண சட்டசபைகளையும் கலைக்க வேண்டும் என்பது போராட்டம் நடத்தும் காத்ரியின் முக்கிய நோக்கமாக உள்ளது. 

இந்த போராட்டத்துக்கு பாகிஸ்தானின் முக்கிய அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இந்த நிலையில் பிரதமர் அஷ்ரப்பை கைது செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டதால் அரசியல் நெருக்கடி பல மடங்காக அதிகரித்துள்ளது. 

பாகிஸ்தானில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் நெருக்கடிக்கு ராணுவமே காரணம் என்று பல்வேறு தரப்பினரிடமும் சந்தேகம் எழுந்துள்ளது. காத்ரி தலைமையிலான போராட்டக்காரர்களின் பின்னால் ராணுவத்தின் தூண்டுதல் இருப்பதாக பிரதமர் அஷ்ரப்பின் உதவியாளர் பவத் சவுத்திரி சந்தேகம் தெரிவித்துள்ளார். 

ராய்டர் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த அவர் மேலும் கூறியதாவது:- 

காத்ரி நடத்தும் போராட் டத்துக்கும், சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்புக்கும் தொடர்பு இருக்கிறது. இதன் பின்னணியில் ராணுவம் இருக்கிறது. ஆட்சியை கைப்பற்ற ராணுவ அதிகாரிகள் ஆசைப்படுகிறார்கள். 

இவ்வாறு அவர் கூறினார். 

பாகிஸ்தானின் ராணுவ தலைமை தளபதியாக உள்ள கயானி சமீபத்தில் கூறுகையில், ‘‘அரசியலில் இருந்து ராணுவம் விலகியே இருக்கும்’’ என்றார் என்றாலும் கயானி ஒப்புதல் பெறாமல் ராணுவத்தின் மற்ற உயர் அதிகாரிகள் ஆட்சியைக் கைப்பற்ற கூடும் என்ற பயம் அரசியல்வாதிகளிடம் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டே காத்ரி தலைமையில் மக்கள் போராட்டத்தை ராணுவம் தூண்டி விட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. 

ஆட்சியை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததும் தேர்தல் நடத்தும் வரை ராணுவத்தின் தற்காலிக இடைக்கால ஆட்சியை நடத்த ராணுவ உயர் அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. 

இதற்கிடையே கயானி தலைமையிலான ராணுவத்தால் தன் ஆட்சிக்கு எந்த ஆபத்தும் வராது என்று சர்தாரி நம்பிக்கையுடன் உள்ளார். பாகிஸ்தான் பாராளுமன்றத்தில் அவருக்கு பெரும்பான்மை பலம் உள்ளது. எனவே அஷ்ரப்புக்கு பதில் புதிய பிரதமரை தேர்வு செய்து விட்டு மீதமுள்ள 2 மாத ஆட்சியை தொடர சர்தாரி திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. 

No comments

Powered by Blogger.