ஸ்ரீசித்திவிநாயகர் மாணவர்களுக்கு கைகொடுத்த நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் (படம்)
மகிழவெட்டுவான் ஸ்ரீசித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கும் நல்லாட்சிக்கான மக்கள் இயக்கம் இலவச அப்பியாசப்புத்தகங்களை வழங்கியது.
மட்டக்களப்பு மகிழவெட்டுவான் கிராமத்தில் இயங்கிவரும் ஸ்ரீ சித்தி விநாயகர் அறநெறிப் பாடசாலை மாணவர்களுக்கு காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்த்pனால் இலவச அப்பியாசக் கொப்பிகள் இன்று (05.01.2013) சனிக்கிழமை காலை வழங்கப்பட்டன.
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை உறுப்பினரும், கல்விப் பிரிவின் தலைவருமான 'வித்தியாகீர்த்தி' எம்.எஸ்.எம். அமீரலி ஆசிரியர் மேற்படி அறநெறிப் பாடசாலையின் அதிபர் சந்திரன் சந்திரமதியிடம் இந்த இலவச அப்பியாசக் கொப்பிகளைக் கையளித்தார்.
இப்பாடசாலையில் கல்வி பயிலும் 176 இந்து சமய மாணவர்களுக்கும் இந்த இலவச அப்பியாசப் புத்தகங்கள் அதிபர் ஊடாக வழங்கப்பட்டுள்ளன.
இவ்வறநெறிப் பாடசாலையின் அதிபர் குள்ளமான தோற்றமுடையவர். இவரால் சுயமாக நடமாட முடியாது. எனினும் இவர் கடந்த ஆறு வருடங்களாக இப்பாடசாலையை மிகவும் திறன்பட நடத்தி வருகின்றார்.
1981ம் ஆண்டு பிறந்த அதிபர் சந்திரமதி, எட்டாம் வகுப்பு பயிலும் வரை தனது சொந்தக் கால்களில் நடமாடினார். அதன் பின் திடீரென இவரது கால்கள் செயலிழந்து போயின. எவரேனும் ஒருவர் இவரைச் சுமந்து கொண்டு செல்ல வேண்டிய நிலைக்குள்ளானார். இந்நிலையிலும்கூட மிகுந்த முயற்சிக்கு மத்தியில் க.பொ.த சாதாரண தரம் வரை கல்வி பயின்று அதில் சித்தியும் அடைந்தார்.
முறைசார் கல்வியை அத்துடன் நிறுத்திக் கொண்டு பல நூல்களைப் படித்து தனது அறிவை வளப்படுத்திக் கொண்ட இவர் சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகள் எழுதிச் சிறப்படைந்தார். பூமாலை கட்டுதல், குஞ்சம் அமைத்தல் போன்ற கைப்பணிகளையும் இவர் அற்புதமாக மேற்கொள்வார்.
இவருக்கு ஆன்மீகத்தில் அதிக ஈடுபாடு இருந்ததால் ஸ்ரீ சித்திவிநாயகர் அறநெறிப் பாடசாலை என்ற பெயரில் அறநெறிப் பாடசாலையொன்றை ஸ்தாபித்து அதன் அதிபராகவும் தொழிற்படத் தொடங்கினார். யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் ஏற்பட்ட இடப்பெயர்வுகளின்போது கூட இவர் தனது பாடசாலையைக் கைவிடாமல் தொடர்ந்து நடத்தி வந்தார்.
இந்த அறநெறிப் பாடசாலை இந்து கலாசார திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதிபர் சந்திரமதியின் தலைமையில் எட்டு ஆசிரியர்கள் தற்போது கற்பிக்கின்றனர். 176 மாணவர்கள் இக்கல்வியாண்டில் கல்விகற்க இணைந்துள்ளனர். இந்து கலாசார திணைக்களம் மாதாந்த உபகாரக் கொடுப்பனவாக வழங்கி வரும் மூவாயிரம் ரூபாய் மாத்திரமே இவரது வருமானமாகும்.
இவரது பாடசாலைக்கு நிரந்தர கட்டிடம் எதுவும் கிடையாது. மர நிழல்கள், கோவில்கள், பாடசாலைகள், வீடுகள் என்று பல தற்காலிக இடங்களில்தான் இவர் தனது அறநெறிப் பாடசாலையை நடத்தி வருகின்றார்.
இவருடைய இந்த அறநெறிப் பணியைக் கண்டு நெகிழ்ந்துபோன நாகையா நேசதுரை என்ற புரவலர், தனது 40 பேர்ச் காணியை இந்தப் பாடசாலைக்கான கட்டிடமொன்றைக் கட்டுவதற்காக அன்பளிப்பாக வழங்கியுள்ளார். இந்தக் காணியைச் செப்பனிடுகின்ற பணிகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் திரு. ரி. வசந்தராஜா அவர்களின் ஏற்பாட்டில் இன்று காலை அதிபர் சந்திரமதி தனது உதவியாருடன் காத்தான்குடி நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் அலுவலகத்திற்கு வருகை தந்து தனது மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளைப் பெற்றுக் கொண்டார்.
இக்கைளிப்பின்போது நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் சூறா சபை அமீர் அஷ்ஷெய்க் எம்.பி.எம். பிர்தௌஸ் நளீமியும் பிரசன்னமாகி இருந்தார்.
Post a Comment