சீனாவிடம் மேலும் கடன் கேட்கிறது இலங்கை
அம்பாந்தோட்டையில் அமைக்கப்பட்டு வரும் மத்தால விமான நிலையப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு சீனாவிடம் மேலும் 72 மில்லியன் டொலர் (9.1 பில்லியன் ரூபா) கடனுதவியைக் கோர இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
இலங்கை அரசாங்கம் மத்தால விமான நிலையப் பணிகளுக்காக ஏற்கனவே, 209 மில்லியன் டொலரை (26.6 பில்லியன் ரூபா) செலவிட்டுள்ளது. இதில் 190 மில்லியன் டொலர் (24.2 பில்லியன் ரூபா) சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் இருந்து கடனாகப் பெறப்பட்டது.
இந்தநிலையில், விமானப் போக்குவரத்து அமைச்சர் பிரியங்கார ஜெயரத்ன, அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ள பத்திரம் ஒன்றில், மேலும் இரண்டு தேவைகளுக்காக மேலதிக நிதி தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக வேலைகளுக்கான செலவுக்கு 45.5 மில்லியன் டொலரும் (5.7 பில்லியன் ரூபா), விலை அதிகரிப்பினால் ஏற்பட்டுள்ள செலவுகளை ஈடுசெய்ய 26.5 டொலரும் (3.3பில்லியன் ரூபா) தேவைப்படுவதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலதிக நிதித் தேவைகளை ஈடுசெய்வதற்கு சீனாவின் ஏற்றுமதி இறக்குமதி வங்கியிடம் இருந்து கடனுதவி கோரவும், மேலதிக வேலைகளுக்கான வடிவமைப்பு மற்றும் கட்டுமானப் பணிகளுக்கு சீனாவின் துறைமுக பொறியியல் நிறுவனத்துடன் உடன்பாடு செய்வதற்கும் அமைச்சரவையிடம் பிரியங்கார ஜெயரத்ன அனுமதி கோரியுள்ளார்.
சிறிலங்கன் எயர் லைன்ஸ் விமானங்களுக்கான தரிப்பிடம் மற்றும் அதற்கான பாதை, வெளிப்புற வீதி, சரக்கு முனையம் மற்றும் அதற்கான பாதை ஆகியவை இந்த மேலதிக வேலைகளுக்குள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
Post a Comment