கொழும்பில் நடைபெற்ற இஸ்லாஹிய்யத அரபு கல்லூரியின் ஊடகவியலாளர் மாநாடு..!
(ஏ.எஸ்.எம்.இர்ஷாத்)
இஸ்லாமிய கற்கைநெறிகளுக்கான பல்வேறு வசதிகளை கொண்ட சர்வதேச தரத்திலான ஒர் உயர் கல்வியை வழங்கும் நிறுவனமாக மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியை மாற்றுவதே எமது நோக்கமும் எண்ணமும் என இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் அதிபர் எம்.யு.எம்.றம்சி தெரிவித்தார்.
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் வெள்ளி விழா மற்றும் நான்காவது பட்டமளிப்பு விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் மாநாடு நேற்று(08) தெமட்டகொடை தாருல் ஈமான் மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்டு விளக்கமளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் அரபுக் கல்லூரியின் விரிவுரையாளர் எம்.எச்.வஹாப் மற்றும் ஏற்பாட்டாளர் நஜா மொஹம்மட் ஆகியோர்களும் கலந்து கொண்டு விளக்கமளித்தனர்.
இங்கு அரபுக் கல்லூரி அதிபர் மொஹம்மட் றிம்சி மேலும் தெரிவிக்கையில்,,
இதுவரை அரபுக் கல்லூரியிலிருந்து 186 பேர் ஆறு வருட கற்கை நெறியினை பூர்த்தி செய்துள்ளனர். இவர்களில் பலர் சூடான், இங்கிலாந்து, பாகிஸ்தான், யெமன், ஜோர்தான், சவூதி அரேபியா மற்றும் எகிப்து போன்ற நாடுகளில் உயர் கல்வியை கற்று வருவதாக கூறினார்.
குறிப்பாக இஸ்லாமிய சட்டவியல், இஸ்லாமிய வங்கியியல், வணிக முகாமை, சமூக பணி, சர்வதேச உறவு, இஸ்லாமிய கலாச்சாரம் உள்ளிட்ட துறைகளில் இஸ்லாஹிய்யா மாணவர்கள் பலர் முதுமானிப் பட்டங்களை பெற்றுள்ளனர். அரபுக் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்;கள் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் சமூக சீர்திருத்தம், சமூக மேம்பாடு மற்றும் நாட்டின் அபிவிருத்தி போன்றவற்றில் ஈடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அரபுக் கல்லூரியின் மூன்று வருட டிப்ளோமா பாடநெறிக்கு க.பொ.த.சாதாரணதரத்தில் பரீட்சையை வெற்றிகரமாக பூர்த்தி செய்த 18 வயதிற்கு குறைந்தவர்களே சேர்த்துக் கொள்ளப்படுவதாகவும் இதில் அரபு, இஸ்லாமிய கற்கை நெறிகளின் அடிப்படைகள் கற்பிக்கப்படுவதோடு கலை வர்த்தகத்துறைகளில் க.பொ.த.உயர்தர பரீட்சைக்கும் தோற்றுகின்றனர்.
டிப்ளோமா பயிற்சியை முடித்துக் கொண்டவர்களில் ஷரீஆ துறையில் சிறப்பு தேர்ச்சி பெற விரும்புபவர்கள் நான்கு வருட இஸ்லாமிய கற்கை நெறிக்கான பாடநெறிக்கு அனுமதி பெறமுடியும். அல்குர்ஆனின் கலைகள், ஹதீஸ் கலை, இஸ்லாமிய வரலாறு, இஸ்லாமிய சட்டங்கள் அதன் அடிப்படைகள், இஸ்லாத்தின் நம்பிக்கை கோட்பாடுகள் போன்ற பாடங்களுடன் அரபுமொழி, அரபு இலக்கணம் மற்றும் ஆங்கிலம், கணனி மற்றும் முகாமைத்துவம் போன்ற பாடங்களை இவர்கள் கற்பதோடு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழக பட்டப் பரீட்சைக்கும் தயார் செய்யப்படுகின்றார்கள்.
மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரியின் நான்காவது பட்டமளிப்பு விழா ஜனவரி 14ம் திகதி மாதம்பை இஸ்லாஹிய்யா அரபுக் கல்லூரி வளாகத்தில் காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் எனவும் 25வது ஆண்டு வெள்ளிவிழா ஜனவரி 15ம் திகதி புதன்கிழமை கொழும்பு-3 மேமன் மண்டபத்தில் மாலை 6.45 மணிக்கு ஆரம்பமாகி தொடர்ந்து நடைபெறும.; இதன்போது கல்லூரியின் புதிய இலட்சினை, உத்தியோகபூர்வ இணையத்தள அங்குரார்ப்பணம், நினைவு மலர் மற்றும் இஸ்லாஹிய்யாவின் 10 புத்தகங்களும் வெளியிட்டு வைக்கப்படும் என்றார்.
இதுதவிர மார்ச் மாதம் ஆய்வு மாநடு நடைபெறவுள்ளதாகவும் இதற்கு சர்வதேச மாணவர்கள் எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்த அவர் பிராந்திய நிகழ்ச்சிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
Post a Comment