Header Ads



பூதாகரமாக மாறியுள்ள சிறுவர் துஷபிரயோகம் - பெற்றோரின் பொறுப்பு என்ன..?


(அஷ்ஷெஹ் எஸ்.எம்.எம். மஸாஹிர்,
முதுநிலை விரிவுரையாளர்,
தென்கிழக்குப் பல்கலைக்கழகம் - ஒலுவில்)


இன்று உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்ற கொடிய அம்சங்களுள் சிறுவர் துஷ்பிரயோகமும் ஒன்றாகும். இது எய்ட்ஸ், போதை வஸ்த்துப் பாவனை, யுத்தம், வறுமை போன்ற மனித வாழ்வைப் பாதிக்கின்ற விடயங்களோடு சரிசமமாக வைத்துப் பார்க்க வேண்டிய விடயமாகிவிட்டது. எதிர்கால சந்ததியினரையும் மனித சமுதாயத்தையும் பாதிப்பதாக இந்த சிறுவர் துஷ;பிரயோகம் மாறியுள்ளது. 'இன்றைய இளைஞர்கள் நாளைய தலைவர்கள்' என்ற முதுமொழியைக் கேள்விக்குள்ளாக்குவதாக இந்தக் கொடிய செயல் அமைந்துள்ளது.

ஓர் ஆணும் பெண்ணும் திருமணபந்தத்தில் இணைந்ததன் பின்னர் குழந்தைப் பாக்கியத்தைப் பெற்றுவிட்டால் அத்தம்பதியனரின் சிந்தனை, எதிர்பார்ப்பு, கனவு, செயற்பாடு என்பன மாறிவிடுவதை நாம் பார்க்கின்றோம். உனக்காக நான், எனக்காக நீ என்றிருந்த அவர்கள், குழந்தைக்காக நாம் என மாறிக் கொள்கின்றார்கள். பெற்றோரது வாழ்வின் பெரும்பகுதி பிள்ளைகளுக்காக என ஆகிவிடுகின்றது. அவர்களுக்காகவே அல்லும் பகலும் உழைக்கின்றனர். தமது ஆசாபாசங்களைத் தியாகம் செய்கின்றனர். அவர்களது கல்வி, சுகாதாரம், அத்தியவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக பல்வேறு சிரமங்களை சுமக்கின்றனர். இவையனைத்தும் தமது பிள்ளைகளின் எதிர்காலம் சுபீட்சமாக அமைய வேண்டும் என்பதற்காகவே செய்கின்றனர். ஆனால் இந்தக் கனவுகளில் மண்ணை வாரிப் போடுவதாகவும் அவர்களது ஆசைகளுக்கு சாவுமணி அடிப்பதாகவும் இந்த சிறுவர் துஷ;பிரயோகம் அமைந்துள்ளது. அது சில பிள்ளைகளை பிற்காலத்தில் மனநோயாளர்களாகவும், சிலரை மனநிம்மதியற்றவர்களாகவும், சிலரை நரம்புத் தளர்ச்சி கொண்டவர்களாகவும், வேறு சிலரை வெறும் நடைப்பிணங்களாகவும் மாற்றிவிடுகின்றது.

எனவே, இந்தப் பயங்கரமான குற்றச் செயல் தொடர்பாக அனைவரும் அறிந்திருக்க வேண்டும் என்பதற்காகவும் அதன் பாரதூரம் பற்றி விளங்கிக்கொள்ள வேண்டும் என்பதற்காகவும் பெற்றோர் தமது பொறுப்பை உணர்ந்து, பிள்ளைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிமுறைகளைத் தெரிந்திருக்க வேண்டும் என்பதற்காகவும் இக்கட்டுரை எழுதப்படுகின்றது.

சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன?

சிறுவர்களை அவர்களின் இயல்புகளுக்கும் தன்மைகளுக்கும் முரணாகப் பிழையாகப் பயன்படுத்துதல் சிறுவர் துஷ்பிரயோகம் எனலாம். ஐக்கிய நாடுகள் சபைக்குக் கீழ் இயங்கும் யுனிசெப் நிறுவனம் 18 வயதுக்குக் குறைந்தவர்களை 'சிறுவர்' என அடையாளப்படுத்துகின்றது.

உலக சுகாதார நிறுவனம் (றுர்ழு) சிறுவர் துஷ்பிரயோகம் என்பதைக் கீழ்வருமாறு வரைவிலக்கணப்படுத்துகின்றது. 'சிறுவர்களை உடல்ரீதியாக அதனுடன் அல்லது உணர்வுரீதியாக பாதிப்படையச் செய்தல், பாலியல் துஷ;பிரயோகம், புறக்கணித்தல், வர்த்தகம் அல்லது வேறு விடயங்களுக்காக அவர்களைச் சுரண்டல் போன்றவற்றின் மூலம் அவர்களின் ஆரோக்கியம், உயிர் வாழ்தல், வளர்ச்சி மற்றும் கௌரவம் போன்றவற்றுக்கு பாதிப்பை ஏற்படுத்துதல்.

சிறுவர் துஷ்பிரயோகம் 5 பிரதான அம்சங்களோடு தொடர்பானதாக அமையும்.

1. சிறுவரின் உடலைப் பாதித்தல்

அவர்களைக் காயப்படுத்தல், சித்திரவதை செய்தல், அடித்துத் துன்புறுத்துதல், அடைத்து வைத்தல், அளவு மீறி வேலை வாங்குதல், அதிக சுமைகளைச் சுமத்தல், சிறுவர் போராளிகளாகப் பயன்படுத்துதல் போன்றன.

2. உணர்வுரீதியாகப் பாதித்தல்

பிள்ளைகளின் உள்ளம், ஆன்மீகம், சிந்தனை போன்றவற்றைப் பாதிக்கும் வகையில் அவர்களை நடாத்துதல், அவர்களை சிறுமைப்படுத்துதல், ஏளனப்படுத்துதல், பலிக்கடாவாக்குதல், அச்சுறுத்துதல், பயமுறுத்துதல், பாரபட்சம் காட்டுதல், கேலி செய்தல் போன்றன.

3. பாலியல் துஷ்பிரயோகம்

சிறுவர்களின் அந்தரங்க இடத்தைத் தொடுதல் அல்லது தொட்டு விளையாடுதல், அவர்கள் விரும்பாத இடங்களில் முத்தம் கொடுத்தல், அவர்களுடன் தொடர்பற்றோர் அவர்களின் ஆடைகளைக் களைதல், ஆபாசமான வார்த்தைகளை அவர்களுடன் பேசுதல், ஆபாச வீடியோக்களைப் பார்க்கத் தூண்டுதல், அவர்களை உடல் உறவுக்கு உட்படுத்துதல் போன்றவற்றோடு விபச்சாரம், ஆபாச வீடியோ தயாரிப்பு போன்றவற்றில் ஈடுபடுத்துதல் போன்றன.

4. புறக்கணிப்பு

பெற்றோர் அல்லது பொறுப்பு வாய்ந்தோரின் மீது கடமையாக உள்ள, பிள்ளைகளுக்கான கல்வி. சுகாதாரம், உளஆரோக்கியம், போஷhக்கு, உறையுள் மற்றும் பாதுகாப்பான வாழ்வு என்பவற்றை உரிய முறையில் வழங்காமல், உதாசீனப்படுத்துதல் இதுவாகும்.

5. சுரண்டல்

பிள்ளைகளை தொழிலில் ஈடுபடுத்துதல், வேலைக்கமர்த்துதல், பாலியல் தொழிலாளர்களாக ஆக்குதல் போன்றன. 
பயங்கரமான புள்ளிவிபரங்கள்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பாக பல்வேறு ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிக்கொணரப்பட்டுள்ளன.  உதாரணமாக உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு எனவும் அபிவிருத்தி அடைந்த நாடு எனவும் மனித உரிமைகளுக்காக உரத்துக் குரல் கொடுக்கின்ற தேசம் எனவும் புகழப்படுகின்ற அமெரிக்காவில் தினமும் கிட்டத்தட்ட 5 பிள்ளைகள் துஷ்பிரயோகம் மற்றும் அசட்டை காரணமாக மரணமாகின்றனர். 2010ஆம் ஆண்டு அங்கு 1560 சிறுவர் அவ்வாறு இறந்தனர். அங்கு 2010இல் மட்டும் 695,000 சிறுவர்கள் துஷ்பிரயோகத்திற்குட்பட்டனர். ஆச்சரியம் என்னவெனில் 1 வருடத்திற்கும் குறைவான குழந்தைகளே மிகக் கூடுதலாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 1000 : 20.6 என்ற வீதத்தில் உள்ளனர். 2011 ஜெனவரி - ஜூன் வரையும் 226,000 பேர் இவ்வாறு பாதிக்கப்பட்டனர். அவர்களுள் 88,182 பேர் அவர்களது தந்தை அல்லது மாற்றாந் தந்தையாலும் 47,096 பேர் ஏதோ ஒரு வகையில் குடும்ப உறவினர்களாலும் 71,877 பேர் அறிமுகமற்றவர்களாலும் துஷ;பிரயோகப்படுத்தப்பட்டுள்ளனர்.

அந்நாட்டில் ஒவ்வொரு 10 செக்கனுக்கும் ஒரு சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான முறைப்பாடு கிடைக்கப் பெறுகின்றது. சிறுவர் துஷ்பிரயோகத்தின் மூலம் இறக்கின்ற பிள்ளைகளுள் 80 வீதமானவர்கள் 4 வயதையும் விடக் குறைந்தவர்கள். 90 வீதமான துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட பிள்ளைகளுக்கு இக்கொடுமையைச் செய்தவர்கள் ஏதோ ஒரு வகையில் அறிமுகமானவர்களாக இருக்கின்றனர். சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு உட்பட்ட பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களானதும் அவர்களுள் 30 வீதமானவர்கள் தமது பிள்ளைகளுக்கு அதே துஷ்பிரயோகத்தை மீளச் செய்கின்றனர். ஐக்கிய அமெரிக்கச் சிறைகளில் இருக்கும் ஆண்களில் 14 வீதத்தினரும் பெண்களில் 36 வீதத்தினரும் அவர்கள் சிறுவர்களாக இருக்கும் போது துஷ்பிரயோகத்திற்கு உட்பட்டவர்களாவர். 

 உலகம் முழுவதும் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சியூட்டும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன. 300 மில்லியன் சிறுவர்கள் அன்றாடம் சிறுவர் தொழிலாளர்களாக பயன்படுத்தப்படுகின்றனர். ஏறக்குறைய 200 மில்லியன் பிள்ளைகள், சுரங்கங்கள், தொழிற்சாலைகளிலும் இரசாயனப் பொருட்கள், கிருமி நாசினி போன்றவை உற்பத்தி செய்யும் இடங்களிலும் வேலை செய்யுமாறு வற்புறுத்தப்படுகின்றனர். ஒவ்வொரு வருடமும் 1.2 மில்லியன் பிள்ளைகள் வேலைக்காகவும் பாலியல் தொழிலுக்காகவும் கடத்தப்படுகின்றனர். யுனிசெப் தரும் தகவலொன்றின்படி, இன்று 30 நாடுகளைச் சேர்ந்த, 300,000 இற்கும் அதிகமான சிறுவர் போராளிகள் ஆயுதப் போராட்டங்களில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஐக்கிய நாடுகள் சபை 2006ஆம் ஆண்டு மேற்கொண்ட ஓர் ஆய்வில், உலகில் ஓர் ஆண்டில் 15 கோடி சிறுமிகளும் 7 கோடி 30 இலட்சம் சிறுவர்களும் ஏதோ ஒரு வகையில் துஷ;பிரயோகத்திற்கு உட்படுகின்றனர் எனத் தெரிய வந்தது. 

இலங்கையிலும் இது ஒரு பாரிய பிரச்சினை

இலங்கையிலும் சிறுவர் துஷ்பிரயோகம் ஒரு பூதாகரமான பிரச்சினையாக வளர்ந்து வருகின்றது. பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன, 'கடைசி ஆறு மாதங்களில் 975 சிறுவர் கற்பழிப்பு மற்றும் துஷ்பிரயோகம் தொடர்பான தகவல்கள் கிடைத்துள்ளன' எனக் கூறியுள்ளார்.  தைரியமாக பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்தவற்றை வைத்தே அவர் இத்தகவலைக் கூறுகின்றார். குறிப்பிட்ட நபருக்காகப் பயந்து அல்லது குடும்ப மானம் போய்விடும் என நினைத்து அல்லது பிள்ளைகளின் எதிர்காலம் பாதிப்படையலாம் என யோசித்து இத்தகைய சம்பவங்களை மறைத்துக் கொள்பவர்களே அதிகம். அவ்வகையில் பார்த்தால் இத்தொகை மிக அதிகமாக இருக்க வேண்டும்.

நீதி அமைச்சின் அண்மைக்கால அறிக்கைகளின்படி இலங்கையில் சிறுவர் துஷ;பிரயோகம் மிகப் பயங்கரமாக இருக்கிறது. நாடு முழுவதும் விசாரணை செய்ய வேண்டி இருக்கின்ற 15,000 வழக்குகளுள் 4,000  இற்கும் அதிகமான வழக்குகள் சிறுவர் மீதான வன்முறை தொடர்பானவை. இது கிராமப்புறங்களில் அதிகம். கொழும்புக்கு வெளியே உள்ள நீதிமன்ற வழக்குகளில் அரைவாசிக்கும் மேற்பட்டவை சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பானவையாகும். இதில் அதிர்ச்சி தரும் விடயம் என்னவெனில், அமைச்சில் காணப்படும் 1126 சம்பவங்கள் தொடர்பான விரிவான தகவல்களின்படி அவற்றுள் 254 சம்பவங்களில் சிறுவர் துஷ்பிரயோகத்தைச் செய்தவர் பிள்ளையின் உறவினராவார். அவற்றுள் 89 சிறுவர்கள் தமது சொந்த தந்தையாலும், 14 பேர் மாற்றாந்தந்தையாலும் (தாயின் கணவர்), 5 பேர் பாட்டனாராலும் ஏனைய 146 பிள்ளைகள் அவர்களது குடும்ப உறவினர்களாலும் துஷ;பிரயோகத்திற்கு உட்பட்டனர். அவற்றுள் பெரும்பாலான சம்பவங்கள் கற்பழிப்பாகும். மொத்தத் தொகையில் 206 பேர் 10 வயதுக்கும் குறைந்தவர்கள். ஏனைய 878 பேர் 10 – 16 வயதுக்கிடைப்பட்டோராவர்.

ஐக்கிய இராச்சியத்தை தளமாகக் கொண்டு இயங்கும் 2004ஆம் ஆண்டு இலங்கை தொடர்பாகச் செய்த ஆய்வொன்றில் இலங்கையிலுள்ள 12 வயதுக்குக் குறைந்த வயதுடையோரில் 37.8 வீதத்தினர் அவர்களது கடந்த காலங்களில் ஏதோ ஒருவகையில் உடல்ரீதியான துஷ;பிரயோகத்திற்கு உட்பட்டுள்ளனர். சீனாவிலும் கொரியாவிலும் இத்தொகை முறையே 22.6மூ மற்றும் 51.3மூ ஆகும்.
     
2011ஆம் வருடத்தில் சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்பட்டன. வுhந யேவழையெட ஊhடைன Pசழவநஉவழைn யுரவாழசவைல சென்ற வருடம் மாத்திரம் 20,000 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகளைப் பெற்றது

2012ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்கள் இன்னும் நமக்குக் கிடைக்கவில்லை.
சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் பிரதி அமைச்சர் எம். எல். ஏ. எம். ஹிஸ்புல்லாஹ் பாராளுமன்றத்தில் முன்வைத்த தகவல்களின்படி 2000-2010 வரையான காலப்பகுதியில் 27003 சிறுவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2000ஆம் ஆண்டு 600பேரும், 2005ஆம் ஆண்டு 793 பேரும், 2010ஆம் ஆண்டு 1089 பேரும், 2011ஆம் ஆண்டு 1160 பேரும் சிறுமிகளில் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்தோடு 2000ஆம் ஆண்டு 1557 பேரும், 2005ஆம் ஆண்டு 2824 பேரும், 2010ஆம் ஆண்டு 4029 பேரும் சிறுவர்களில் துஷ்பிரயோகத்திற்கு இழக்காகியுள்ளனர்.
அண்மையில் நடந்த சில சம்பவங்கள்

இலங்கையில் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற கோரச் சம்பவங்கள் சிலவற்றை உதாரணத்திற்காகத் தருகின்றோம்.

ஒன்றரை வயது நிறம்பிய பச்சிளம் குழந்தையை 13 வயதான சிறுவன் ஒருவன் பாலியல் வல்லுறவுக்குட்படுத்திய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அவனும் குழந்தையின் சகோதரனும் பாடசாலை நண்பர்களாவர். சம்பவ தினத்தன்று மேற்படி வீட்டுக்கு வந்தவனை வரவேற்ற தாயார், தன் மகன் வெளியே சென்றிருப்பதாகவும் தான் தண்ணீர் எடுத்து வரும் வரை குழந்தையைப் பார்த்துக் கொள்ளும்படியும் கூறிவிட்டு தாயார் வெளியே சென்ற சந்தர்ப்பத்திலேயே இந்த நிகழ்ச்சி நடந்துள்ளது.

மன்னார் மூர் வீதி பிரதேசத்தில் 7 வயதுச் சிறுமி ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக மன்னார் பொலிஸ் நிலையத்தில் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, 67 வயதான நபர் ஒருவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார்.

கொடவெஹர பொலிஸார் அம்பேபுஸ்ஸ இராணுவ முகாமைச் சேர்ந்த ஓர் இராணுவ வீரரை, 6 வயதுச் சிறுமி ஒருவரை கற்பழித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்துள்ளனர். சந்தேக நபர் அச்சிறுமி தனது தோட்டத்தில் விளையாடிக் கொண்டிருக்கும் போதே இப்பாதகச் செயலைச் செய்துள்ளார். அதேவேளை, இச்சந்தேக நபருக்கு எதிராக நிகவரட்டிய நீதிமன்றில் இன்னுமொரு சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்கு 2010ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாவனெல்லை பிரதேசத்திலுள்ள சிறுவர் இல்லம் ஒன்றைச் சேர்ந்த 5 சிறுமிகள் மற்றும் எஹலியகொட பிரதேச சிறுவர் இல்லத்தைச் சேர்ந்த 7 சிறுமிகள் உட்பட 12 சிறுமிகளை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சிறுவர் இல்ல பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி சந்தேகநபரின் நடவடிக்கைக்குத் துணைபோனதாகக் கூறப்படும் பெண் ஊழியர் ஒருவரும் கைது செய்யப்பட்டு, மாவனெல்லை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டனர்.  

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை ஐச் சேர்ந்த விசேட பொலிஸ் குழு 50 உள்நாட்டில் வடிவமைக்கப்பட்ட ஆபாச வலைப்பின்னல்கள் (றநடிளவைநள) பற்றிய விபரங்களை வெளியிட்டுள்ளது. அவற்றுள் சிலவற்றில் சிறுவயது பெண் பிள்ளைகள் பாடசாலை சீருடையோடு நடிக்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த வலைப்பின்னல்கள் இணையத்தின் ஊடாக எவரும் தமது கையடக்கத் தொலைபேசி; மூலம் இலவசமாகப் பார்வையிடக்கூடியவாறு அமைக்கப்பட்டுள்ளன.

ஆண்களின் வக்கிர உணர்வுகளுக்கு சிறு பிள்ளைகள் பலியாவது போலவே பெண்களின் வலைகளிலும் சிறுவர்கள் சிக்கிக் கொள்கின்றனர். இவ்வாறான ஒரு விபரீதமும் இன்று நடந்து வருகின்றது. 11 முதல் 14 வயதுடைய 4 மாணவர்களை மாலை வகுப்பு என்ற பெயரில் வீட்டுக்கழைத்து அவர்களைப் பாலியல்ரீதியில் தவறாகப் பயன்படுத்தி குற்றம் நிரூபிக்கப்பட்ட ஓர் ஆசிரியைக்கு அண்மையில் 28 வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று சிங்கப்பூரில் 15 வயது மாணவனை அவனது ஆசிரியை தகாத முறையில் பயன்படுத்தியமை ஊர்ஜிதப்படுத்தப்பட்டதால் அவளுக்கு ஒரு வருட சிறைத் தண்டனை வழங்கப்பட்டமையையும் அறியக் கிடைக்கிறது.

மேலுள்ள தகவல்கள் அனைத்தும் சிறுவர் துஷ;பிரயோகத்தில் ஈடுபடுவோர் எல்லா மட்டத்திலும் இருப்பதைக் காட்டுகின்றன. அங்கு வயது வேறுபாடோ பால் வேறுபாடோ தொழில்ரீதியான பாகுபாடோ இல்லாதிருப்பதும் ஈன்று கவனிக்கத்தக்கது. 
முஸ்லிம் ஊர்களிலும்!!!

முஸ்லிம் பிரதேசங்களிலும் சிறுவர் துஷ்பிரயோகம் மறைமுகமாக இடம்பெற்று வருகின்றது. அண்மையில் சில புத்திஜீவிகளால் மேற்கொள்ளப்பட்ட சில கண்டறிதல் முயற்சிகளில் இவ்விபரம் தெரிய வந்தது. பாதிக்கப்பட்ட பிள்ளைகள் நேரடியாக எம்மிடம் இது பற்றிக் கூறியிருக்கிறார்கள். குடும்பத் தலைவர்கள் சிலர் இது தொடர்பாக அங்கலாய்த்துள்ளனர். உளநோயியல் வைத்தியர்கள் இதற்கான கணிசமான சான்றுகளை வைத்திருக்கிறார்கள். எனவே, நாம் முஸ்லிம் ஊர்களில் வாழ்கின்றோம் என்பதனால் எமது பிள்ளைகள் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என நம்பிவிட முடியாத நிலை காணப்படுகின்றது. ஊனு, இணையத்தளம், கைத் தொலைபேசி போன்றவற்றின் ஊடாக ஆபாசமான, அசிங்கமான காட்சிகளை எமது இளைய சமுதாயத்தினரும் வளர்ந்தவர்களும் பார்த்து வருகின்றார்கள். தாம் இரசித்த காட்சிகளை செயற்படுத்திப் பார்ப்பதற்கு பாதுகாப்பான, இலகுவான முறையாக சிறுவர்களை அவர்கள் கருதுகின்றார்கள். இதனால் சிறுவர்கள் வெகுவாகப் பாதிக்கப்படுவதை நாம் காண்கின்றோம்.

சிறுவர் துஷ்பிரயோகத்திற்கான காரணங்கள்

சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுவதற்குப் பின்னணியில் பல்வேறு காரணங்கள் உண்டு. அவற்றைக் கீழ்வருமாறு சுருக்கமாக வகைப்படுத்திக் கூறலாம்.

1. பெற்றோரின் கவனயீனம்

பிள்ளைகளைப் பெற்றெடுப்பது மாத்திரமன்றி, அவர்களின் ஒவ்வொரு கட்டத்திலும் மிகக் கவனமாகக் கண்கானிக்க வேண்டிய கடப்பாடு பெற்றோரைச் சாரும். ஏனெனில் குழந்தை என்ற மொட்டை பறித்தெடுத்து, கசக்கிப் போட்டு, காலால் மிதிப்பதற்கென்றே சில தீய சக்திகள் இன்று செயற்பட்டு வருகின்றன. அவற்றின் வலைகளில் எமது பிள்ளைகள் மாட்டிக் கொள்ளாமல் தவிர்ப்பதற்கு பெற்றோரே அவர்களுக்கு அரணாக அமைய வேண்டும்.

2. பிள்ளைகளின் அப்பாவித்தனமும் அறியாமையும்

பொதுவாக சிறுபிள்ளைகள் அப்பாவித்தனமும் வெகுளித்தனமும் கொண்டவர்கள். அவர்கள் யாரையும் இலகுவாக நம்பிவிடுவார்கள். கயவர்களையும் கள்வர்களையும் கூட நல்லவர்கள் என எண்ணுவார்கள். யார் என்ன நோக்கத்திற்காக இப்படியெல்லாம் நடந்து கொள்கின்றார்கள் எனப் புரிந்து கொள்ளும் அறிவும் அவர்களிடம் இல்லை. அதனால் பிள்ளைகளின் இத்தகைய பலவீனங்களை துஷ்பிரயோகிகள் தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கின்றனர். அதனால்தான் என்ற அமைப்பின் பேச்சாளர் மேனகா கல்யானரத்ன 'பெற்றோரோ பாடசாலை ஆசிரியர்களோ மாணவர்களுக்கு பாலியல் மற்றும் ஏனைய துஷ்பிரயோகங்களிலிருந்து எவ்வாறு தம்மைத் தற்காத்துக் கொள்ளலாம் எனக் கற்றுக் கொடுப்பதில்லை.' எனக் குற்றம் சாட்டுகின்றார்.

3. பெற்றோரின் வெளிநாட்டு வேலைவாய்ப்பு

தாய் அல்லது தந்தை அல்லது இருவரும் தமது பிள்ளைகளை விட்டுவிட்டு வெளிநாடுகளுக்குச் சென்று விடுவதாலும் சிறுவர் துஷ்பிரயோகம் இடம்பெறுகின்றது. இவ்வாறான நிலமையின் போது பிள்ளைகள் பாதுகாப்பற்றவர்களாக விடப்படுகிறார்கள். பொறுப்பாளராக நியமிக்கப்பட்டவரால் கூட அப்பிள்ளைகள் பிழையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக தாய் தனது பிள்ளையை விட்டும் பிரிந்திருந்தால் இந்த நிகழ்வுகள் நடப்பதற்கு அதிகளவு சாத்தியப்பாடுகள் உள்ளன.

இலங்கையில் 2006 ஆம் ஆண்டு ளமேற்கொண்ட ஆய்வொன்றில் இலங்கையைச் சேர்ந்த 600,000 பெண்கள் வெளிநாடுகளில் தொழில் செய்கின்றனர். அவர்களுள் 90 வீதமானோர் தாய்மார்களாவர் என்பது தெரியவந்தது.


4. பொருளாதாரப் பலவீனம் 

பெற்றோர் பொருளாதார ரீதியில் பிந்தங்கியிருந்தால் அது பணமுள்ள கயவர்களுக்கு சாதகமாக அமைந்துவிடுகின்றது. சிலபோது தனது பிள்ளைக்கு இப்படியான ஒரு அநியாயம் நடப்பது தெரிந்திருந்தும் தனது வறுமையால் அதனைத் தட்டிக் கேட்க முடியாத நிலைக்கு சில பெற்றோர்கள் தள்ளப்படுவர். சிறுவர் பாலியற் தொழில், சிறுவர் கடத்தல், சிறுவர் விற்பனை பேன்றவற்றுக்கெல்லாம் வறுமையின் தாண்டவமே காரணமாக இருப்பதை அறியலாம். உல்லாசப் பிரயாணத்துறை வளர்ந்த இடங்களில் சிறுவர் துஷ்பிரயோகம் அதிகம் இடம்பெறுவதற்கும் இதுவே காரணமாகும்.

5. தனிமைப்படுத்தப்படல் அல்லது புறக்கணிக்கப்படல்

வீட்டில் பிள்ளைகள் ஒதுக்கிவைக்கப்பட்டிருந்தால் அல்லது அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை குடும்பத்தவர்கள் வழங்காதிருந்தால் அல்லது அவர்களைக் கேலி செய்து, எள்ளிநகையாடி, ஒதுங்கு மனப்பான்மையை ஏற்படுத்தினால் அவர்கள் தாமாகவே பிழையான வழிகளைத் தேடிச் செல்வர். அவர்களுக்குரிய உணவு, உடை, உறையுள், கல்வி, சுகாதாரம், போஷhக்கு போன்றன சரியான முறையில் வழங்கப்படாது, புறக்கணிக்கப்படுகின்ற போதும் பிள்ளைகள் காமுகர்களின் வலையில் வீழ்வதற்கு வாய்ப்பேற்படுகின்றது. 

6. பொழுது போக்குச் சாதனங்கள் குறிப்பாக கைத்தொலைபேசி, இணையத்தளம்

பொதுவாக நாம் பயம்படுத்துகின்ற பொழுது போக்குச் சாதனங்களும் தொடர்பூடகங்களும் முழமையாக நன்மை பயப்பனவாக அமையவில்லை. சமூக அங்கத்தவர்களை கெட்டுக் குட்டிச் சுவராக்கக் கூடிய பல்வேறு நிகழ்ச்சிகளும் சினிமாக்களும் வீடியோக்களும் சர்வ சாதாரணமாக உலா வரக்கூடிய காலத்தில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். குறிப்பாக  வசதிகள் கொண்ட கைத்தொலைபேசிகள், இணையத்தளம் போன்றன வரையறையற்ற பாலுறவையும் கீழ்தரமான உணர்வுகளையும் வளர்த்து விட்டுள்ளன. இது சிறுவர் துஷ;பிரயோகத்தை தீவிரப்படுத்தியுள்ளது.

7. செரிவாகக் கூடிவாழ்தல் 

ஒரு சிறிய வீட்டில் பல குடும்பங்கள் வசித்தல், சேரிப்புற வாழ்க்கை போன்றவையும் சிறுவர் துஷ்பிரயோகத்திற்குத் துணையாக அமைந்துள்ளன. வளர்ந்தவர்களின் தாம்பத்ய வாழ்வை அந்தரங்கமாக அமைத்துக் கொள்ள முடியாத சிறிய வீடுகளில் வசிக்கும் பிள்ளைகள் தமது சுற்றுச் சூழலால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

பெற்றோரின் பொறுப்புகள்

சிறுவர் துஷ்பிரயோகத்தை முற்றாக ஒழிக்க வேண்டுமாயின் பெற்றோரும் பள்ளிவாசல், பாடசாலை, வைத்தியசாலை, சமூக இயக்கங்கள் போன்ற சமூக நிறுவனங்களும் ஒன்றிணைந்து போராட வேண்டியுள்ளது. ஆனால் பெற்றோரின் பொறுப்பே இங்கு பாரியதாகும்.

இறைதூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 'உங்களது பிள்ளைகள் ஏழு வயதை அடைந்து விட்டால் தொழும்படி ஏவுங்கள். பத்து வயதாகியும் தொழாவிட்டால் அதற்காக அவர்களை அடியுங்கள். அவர்களுக்கிடையில் படுக்கைகளைப் பிரித்துவிடுங்கள்.' (அபூ தாவூத், வால்யூம் 1, ப.185)

'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரிகள். அவரவரின் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சியாளர் ஒரு பொறுப்பாளி. அவரது பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார். கணவன் தன் குடும்பத்தின் மீது ஒரு பொறுப்பாளி. அவரது பொறுப்பு பற்றி அவர் விசாரணைக்குட்படுவார். மனைவி தனது கணவனுடைய வீட்டுக்குப் பொறுப்பாளி. அவரது பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.  பணியாளன் தன் எஜமானனின் சொத்தின் மீது பொறுப்பு வாய்ந்தவர். அவரது பொறுப்பு பற்றி அவர் கேள்வி கணக்கிற்கு உட்படுவார்.' (புகாரி, முஸ்லிம்)

இந்தப் பாரிய பொறுப்பைச் சுமந்துள்ள பெற்றோர் தமது அருமைக் குழந்தைகளை இந்தத் தீய சக்திகளிடமிருந்து பாதுகாப்பதற்குப் பின்வரும் வழிமுறைகளை பரிந்துரை செய்யலாம்.

1. சிறுவர் துஷ்பிரயோகம் பற்றித் தெரிந்திருத்தல்

ஒரு விடயம் பற்றி எமக்கு அறிவும் தெளிவும் இருந்தால் அதன் தீமைகளை ஒழிப்பது இலகுவானதாக இருக்கும். அந்த வகையில் சிறுவர் துஷ்பிரயோகம் என்றால் என்ன, அதற்கான காரணங்கள் எவை, அவற்றை எவ்வாறு ஒழிக்க முடியும் போன்ற விடயங்களை பெற்றோர் அறிந்து வைத்திருத்தல் அவசியமாகும். யாரையும் எடுத்த எடுப்பிலேயே நம்பிவிடாமல் இருப்பதற்கும் தமது பிள்ளைகளோடு தொடர்புள்ளவர்களோடு விழிப்போடு இருப்பதற்கும் இது வழிவகுக்கும். 

2. பிள்ளைகளுக்கு இது தொடர்பாக அறிவுறுத்துதல்

சிறுவர்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாகவும் ஆபத்தான நேரங்களில் எவ்வாறு தம்மைத் தற்காத்துக் கொள்ளலாம் என்பது தொடர்பாகவும் பெற்றோர் தம் பிள்ளைகளுக்கு விபரிக்க வேண்டும். தன்னோடு தவறான முறையில் ஒருவர் நடந்து கொள்ள முற்பட்டால் அதனை உறுதியாகவும் உரத்த தொனியிலும் மறுக்கும் துணிவையும் அவர்களுக்கு வழங்குதல் வேண்டும்.

3. மனம்விட்டுப் பேசச் செய்தல்

எந்த ஒரு பிள்ளைக்கும் மிக நெருக்கமானவர்கள் அதனது பெற்றோரேயாவர். அவர்கள்தான் அப்பிள்ளை மீது அதீத அன்பும் பாசமும் கொண்டவர்கள். எனவே, பிள்ளைகள் எந்த விடயத்தையும் தமது பெற்றோரோடு பகிர்ந்து கொள்கின்ற பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். எதுவாக இருந்தாலும் தமது பெற்றோரோடு குறிப்பாக தாயோடு தயக்கமின்றி ஆலோசிக்கின்ற பண்பு வளர்க்கப்பட்டால் அவர்கள் இத்தகையதொரு அசம்பாவிதத்திற்கு உட்படுகின்ற போது உடனே பெற்றோருக்கு அதனைத் தெரியப்படுத்திவிடுவர். எனவே, அப்பிரச்சினையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுவதற்கு இது துணைநிற்கும்.

4. பிள்ளைகளைத் தனிமைப்படுத்தாதிருத்தல்

பெற்றோர் தமது பிள்ளைகளைத் தனிமைப்படுத்தும் போது அதன் எதிர்விளைவு பாரதூரமாக அமைந்துவிடுகின்றது. பிள்ளைகளுக்கு இயல்பாகத் தேவைப்படுகின்ற அன்பும் அரவணைப்பும் அவர்களுக்குப் பெற்றோர்களிடமிருந்து கிடைக்க வேண்டும். அவர்களிடமிருந்து அவை கிடைக்காதபட்சத்தில் அவற்றை யார் தருகின்றார்களோ அவற்றை என்ன விலை கொடுத்தும் பிள்ளைகள் பெற்றுக் கொள்ள முனைவர். இந்நிலை இவ்வாறான பாதகச் செயலைச் செய்வோருக்கு உறுதுணையாக அமைந்துவிடுகின்றது. எனவே, பிள்ளைகளை சிறுவர் துஷ;பிரயோகத்திலிருந்து தடுக்க வேண்டுமாயின் அவர்களோடு அன்போடும் பாசத்தோடும் கரிசனையோடும் பெற்றோர் நடந்து கொள்ள வேண்டும்.

5. கண்ணும் கருத்துமாக இருத்தல்

தமது பிள்ளைகளின் ஒவ்வொரு விடயத்தையும் கவனமாக அவதானித்துக் கொண்டிருக்க வேண்டும். அவர்கள் யாருடன் தொடர்பு வைத்துள்ளனர், அவர்களின் நண்பர்கள் யார், அவர்கள் எவ்வாறானவர்கள், பாடசாலை பள்ளிக்கூடம் பிரத்தியேக வகுப்பு எனச் செல்கின்றவர்கள் உரிய இடங்களுக்குச் செல்கின்றனரா என ஆராய்ந்து பார்க்க வேண்டும். தமது பிள்ளை அதனது வயதை விட மிக அதிகமான ஒருவருடன் தொடர்பு வைத்திருக்கிறது என்றால் அங்கு ஏதோ ஒரு சிக்கல் இருக்கிறது என்பது அர்த்தமாகும். உறவினர்களிடம் பிள்ளையைத் தனியாக விட்டுச் செல்லும் போதும் அவர்களோடு பிரயாணங்கள் அனுப்பும் போதும் மிக மிகக் கவனமாக இருக்க வேண்டும். ஓர் ஆண் அல்லது பெண் தனியாக வீட்டில் இருக்கும் போது பொருட்கள் வாங்குவதற்கோ வேறு ஏதாவது ஒத்தாசைகள் செய்வதற்கோ அங்கு போய் உறங்குவதற்கோ எமது பிள்ளைகளை அனுப்பக் கூடாது. வீட்டில் திருமணம் போன்ற விசேட நிகழ்வுகளின் போது ஆண்களையும் பெண்களையும் கலந்து படுக்க வைக்கக் கூடாது என்பது போலவே சிறுவர்களையும் பெரியவர்களையும் கலந்து உறங்க வைக்கக் கூடாது. இவ்வாறான விடயங்களில் பெற்றோர் கூடிய கவனம் செலுத்த வேண்டும். 

6. நல்லொழுக்கமாக வளர்த்தல்

சிறுவயதிலிருந்தே நற்பண்பும் நல்லொழுக்கமும் கொண்டவர்களாக பிள்ளைகளை உருவாக்க வேண்டும். சிறுபிள்ளைகளாக இருந்தாலும் உடலின் முக்கியமான பாகங்கள் வெளித் தெரியக் கூடியவாறும் அதிக கவர்ச்சி கொண்டதாகவும் ஆடைகளை அணிவிக்கக் கூடாது. சிலபோது இதுவே அவர்களின் மீது பாதகர்களின் கவனம் திரும்புவதற்குக் காரணமாக அமைந்து விடுகின்றது.

அறிமுகமற்றவர்கள், தூரத்து உறவினர்கள் அன்பளிப்புகள் தந்தால் அவற்றை மறுக்கக் கூடியவர்களாக பிள்ளைகளைப் பழக்குதல் வேண்டும். ஏனெனில் சிறுவர்களைக் கவர்வதற்கு டொபி, சொக்கலெட், பலூன் போன்றவற்றைத் துஷ;பிரயோகிகள் பயன்படுத்துவர். எதுவாயினும் வேண்டாம் என மறுக்கின்ற மனப்பான்மையை பிள்ளைகளிடம் உருவாக்க வேண்டும்.

7. கம்பியூட்டர், கைத்தொலைபேசி விடயத்தில் கவனமாக இருத்தல் 

இன்று சிறுவர்களுக்கும் கம்பியூட்டர் அவசியமான ஒன்றாக மாறிவிட்டது. அவர்களது கல்வி விடயங்களுக்காக சிலபோது இணைய வசதிகளும் செய்து கொடுக்க வேண்டியள்ளது. இது தவிர்க்க முடியாத, காலத்தின் கட்டாயமாகும். இந்நிலையில் இணையத்தினால் ஏற்படுகின்ற கெடுதிகளைத் தடுப்பது மிக முக்கியமானதாகும். கம்பியூட்டரை பொதுவான ஓர் இடத்தில் வைத்தல் வேண்டும் அல்லது அறையில்தான் வைத்திருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இருந்தால் அறையின் கதவு எப்போதும் திறந்திருக்கக் கூடியதாக பார்த்துக் கொள்ளல் வேண்டும். 

மொத்தமாக பிள்ளைகளுக்கு கைத்தொலைபேசி வாங்கிக் கொடுக்கக் கூடாது. விலையுயர்ந்த பல்வேறு  கைத்தொலைபேசிகள் இன்று எமது இளைஞர் சமுதாயத்தைக் குட்டிச்சுவராக்கிக் கொண்டிருக்கின்றன.

8. தனிக்குடித்தனத்தை ஊக்குவித்தல் 

திருமணம் செய்பவர்கள் முடியுமானளவு தனிக்குடித்தனமாக வாழ்வதற்கு முனைய வேண்டும். இது இஸ்லாமிய ஷரீஅத்திற்கு மிக நெருக்கமானது மட்டுமன்றி கூட்டுக் குடும்பத்தால் ஏற்படுகின்ற அசௌகரியங்களையும் துஷ்பிரயோகங்களையும் இதன் மூலம் தடுக்க முடியும். 

9. பிறசமூகத்தவருடன் இணைந்து போராடுதல்

சிறுவர் துஷ்பிரயோகம் இன்று எல்லா சமூகங்களுக்கும் தலையிடியாக இருக்கின்ற ஒரு பிரச்சினையாகும். துஷ்பிரயோகத்திற்குட்பட்ட பிள்ளை முஸ்லிமா, முஸ்லிமல்லாதவரா எனக் குறுகிய கண்கொண்டு பார்ப்பதை விடுத்து, அது எந்த சமயத்தைச் சேர்ந்த பிள்ளையாக இருப்பினும் அதற்கெதிராகக் குரல் கொடுக்கும் மனோநிலையை நாம் வளர்த்துக் கொள்ள வேண்டும். அதேவேளை சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிராக ஏற்பாடு செய்யப்படும் நிகழ்ச்சிகள், ஊர்வலங்கள், கருத்தரங்குகளில் நாமும் தவறாது கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு சிறுவர் துஷ்பிரயோகம் என்ற பொதுப்பிரச்சினையை எல்லா சமுதாயத்தவரும் இணைந்து வேரோடு பிடுங்கி எறிவதற்கு அனைவரும் பாடுபடல் வேண்டும்.

10. சட்டத்தின் உதவியை நாடுதல் (1929)

இலங்கை அரசாங்கம் சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் சிறுவர் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கும் சில ஏற்பாடுகளைச் செய்துள்ளது. சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் அலுவல்கள் என்ற ஓர் அமைச்சும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை என்ற ஒரு நிறுவனமும் தற்போது செயற்பட்டு வருகின்றன. அத்தோடு பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு உதவுவதற்காக என்றே 1929 என்ற இலவச தொலைபேசி எண் உருவாக்கப்பட்டுள்ளது. தகவல்கள் கிடைத்த உடனே செயற்பட்டு குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதற்கு இது உதவியாக உள்ளது.  
              
முடிவுரை

சிறுவர் துஷ்பிரயோகம் மிகப் பயங்கரமான ஒரு பிரச்சினையாக இன்று உருமாறியுள்ளது. அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சிரேஷ்ட அமைச்சர்கள் கூட அதனை ஏற்றுக் கொள்வதோடு அதனைத் தடுக்க ஷரீஆ சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் எனக் கோரும் அளவுக்கு நிலமை கட்டுமீறிப் போயுள்ளது. வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் விமல் வீரவன்ச அவர்கள், 'இந்த நாட்டில் நாளுக்கு நாள் குற்றச் செயல்கள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. இக்குற்றச் செயல்களில் சிறுவர்களை பாலியல்ரீதியாக ஈடுபடுத்துவோருக்கு ஆகக் கூடிய தண்டனையாக மரண தண்டனையாவது விதிக்க வேண்டும். சிறுவர் துஷ்பிரயோகம், பாலியல் குற்றச் செயல்கள், போதைவஸ்து போன்ற குற்றங்களுக்கு அரபு நாடுகளில் அமுலாக்கும் இஸ்லாமிய ஷரீஆ சட்டம் போன்றதற்கு சமமானதொரு சட்டமே இலங்கைக்கும் மிக அவசியமாகும்' எனக் கூறியுள்ளார்.

எனவே, நடைமுறையில் இருக்கும் சட்டதிட்டங்கள் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற குற்றச் செயல்களை ஒழிக்கப் போதுமானதல்ல என்பது இதில் தெளிவாவதோடு இஸ்லாமியத் தீர்வை நோக்கித் திரும்ப வேண்டிய கட்டாயமும் இங்கு வலியுறுத்தப்படுகின்றது. எது எப்படியிருந்த போதிலும் சிறுவர் துஷ்பிரயோகத்தை அடியோடு இல்லாமலாக்குவதற்கு பெற்றோரின் பங்களிப்பும் கரிசனையும் மிக அத்தியவசிமானது என்பது பிரத்தியட்சமானது. 





No comments

Powered by Blogger.