மாலியிலிருந்து பின்வாங்கிய போராளிகள் - பிரான்ஸ் ஜனாதிபதி அதிர்ச்சி
வடக்கு மாலியில் இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் வசம் இருந்த வரலாற்று பிரசித்திபெற்ற திம்புக்து நகரை பிரான்ஸ் மற்றும் மாலி படைகள் கைப்பற்றியுள்ளன. இங்கு தமது கட்டுப்பாட்டை உறுதிப்படுத்தும் நடவடிக்கையில் பிரான்ஸ் படை ஈடுபட்டுள்ளது.
திம்புக்துவில் பிரான்ஸ் படை ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள தோடு மேலும் ஆயுததாரிகள் ஒளிந்திருக்கிறார்களா என்பது குறித்து சோதனையில் ஈடுபட்டிருப்பதாக பிரான்ஸ் இராணுவத்தின் கட்டளை தளபதி குறிப்பிட்டார்.
பண்டைய சஹாரா பாலைவன வர்த்தக நகரான திம்புக்துவில் இருக்கும் பல கட்டிடங்களும் கிளர்ச்சியாளர்களால் தீமூட்டி அழிக்கப்பட்டுள்ளதோடு, பல பழைமையான கையெழுத்து பிரதிகளை அழித்துவிட்டே கிளர்ச்சியாளர்கள் அங்கிருந்து பின்வாங்கியுள்ளனர்.
கிளர்ச்சியாளர்கள் நகரைவிட்டு வெளியேறும் முன் வரலாற்று ஆவணங்கள் இருக்கும் வாசிகசாலை உட்பட பல கட்டிடங்களுக்கும் தீமுட்டியுள்ளனர். இதில் திம்புக்து வாசிகசாலையில் 13ஆம் நூற்றாண்டுக்கு முந்தைய கையெழுத்து பிரதிகள் இருந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தீமூட்டப்பட்ட அஹமத் பாபா நூலகத்தில் 30,000 கையெழுத்து பிரதிகள் இருந்துள்ளன.
அதில் கடந்த நூற்றாண்டுகளில் நகரின் வாழ்க்கை முறை மற்றும் அயல் நாடுகள் பற்றி விளக்கும் ஆவணங்களும் இருந்துள்ளன. இதில் 3000 க்கும் அதிகமான பிரதிகள் அழிக்கப்பட்டு விட்டதாக அங்கு பணி புரியும் ஒருவர் ஸ்கை செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.
மாலியில் கடந்த ஆண்டு ஏற்பட்ட இராணுவ புரட்சியை பயன்படுத்தி இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள் நாட்டின் வட பகுதியை கைப்பற்றியதோடு அங்கு சுதந்தரப் பிரகடனத்தை செய்து இஸ்லாமிய ஷரிஆ சட்டத்தை அமுல்படுத்தினர். பல இஸ்லாமிய ஆயுதக் குழுக்கள் இணைந்தே வடக்கு மாலியை கைப்பற்றியது. இதில் அல் கொய்தா அமைப்புடன் தொடர்புடைய ஆயுதக் குழுவும் உள்ளடங்கும்.
பிரான்ஸ் படை வரும்முன்னரே அவர்கள் பெரும்பாலான பகுதிகளை கைவிட்டு வெளியேறியிருந்தனர். இவ்வாறு வெளியேறிய கிளர்ச்சியாளர்கள் பாலைவனப் பகுதிகள் மற்றும் மொரித்தானியா போன்ற அயல்நாடுகளுக்கு தப்பிச் சென்றுவிட்டதாக நம்பப்படுகிறது.
பிரான்ஸ் ஜனாதிபதி பிரான்கொயிஸ் ஹொலன்டே, மோதலில் பிரான்ஸ் வெற்றிபெற்றதாக திங்கட்கிழமை அறிவித்தார்.
“தீவிரவாதிகள் ஒளிந்துள்ள நிலையில் தற்போதுதான் அபாயகரமான கட்டம் ஆரம்பமாகிறது. தீவிரவாதிகள் மாலி மற்றும் அயல் நாடுகள் மீது மோசமான தாக்குதலை நடத்த வாய்ப்பு உள்ளது” என ஹொலன்டெ குறிப்பிட்டார். தற்போதைய நிலையில் கிளர்ச்சியாளர்கள் எங்கு சென்றார்கள் என்பது குறித்து தகவல் இல்லை. எனினும் மறைந்து நின்று தாக்குதல் நடத்துதல் மற்றும் தற்கொலை தாக்குதல் என இந்த யுத்தம் மற்றுமொரு பரிமானத்தை எடுக்க வாய்ப்பு உள்ளது.
Post a Comment