நாட்டின் இறைமைக்காக முஸ்லிம்கள் ஆற்றிய பங்களிப்புக்களை மறைப்பதற்கு சதி - அமீன்
முஸ்லிம்கள் இந்த நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் அபிவிருத்திக்கும், நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கும் ஆற்றிய பங்களிப்புக்களை மறைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் ஒரு காலகட்டத்தில் கொழும்பு சாஹிறா கல்லூரி மாணவர்கள் சிங்களத்தில் சஞ்சிகை ஒன்றை வெளியிடுவது முக்கியமான ஒரு நிகழ்வாகவே கருத்தப்படுகின்றதென முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸிலின் தலைவரும் நவமணி பிரதம ஆசிரியருமான என்.எம். அமீன் கூறினார்.
கொழும்பு சாஹிறாக் கல்லூரி சிங்கள சிரேஷ்ட பிரிவு ஆசிரியர்களும் மாணவர்களும் சேர்ந்து வெளியிட்ட அபெ சஹிறா ஹன்ட (எங்களது சாஹிறா வின் குரல்) என்ற சஞ்சிகையின் வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு கூறினார்.
கல்லூரியின் கபூர் மண்டபத்தில் பதில் அதிபர் டிறிஸ்வி மரிக்கார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தொடர்ந்து பேசிய அல்ஹாஜ் அமீன் கூறியதாவது,
ஒரு காலத்தில் இலங்கை முஸ்லிம்களின் கலங்கரை விளக்கு போன்று இருந்த சாஹிறா கல்லூரி கபூர் மண்டபத்திலிருந்து இந்த மாணவர்கள் மத்தியில் உரையாற்ற கிடைத்ததை பாக்கியமாக கருதுகின்றேன். சாஹிறாவிலிருந்து சிங்கள மொழியில் ஒரு சஞ்சிகை வெளிவருவது என்பது இந்நாட்டு முஸ்லிம்கள் இந்த மொழிக்கு அளித்திருக்கின்ற கௌரவத்துக்கு சிறந்த உதாரணமாகும். சிங்கள மொழியின் வளர்ச்சிக்கு இந்நாட்டு முஸ்லிம்கள் பல்வேறு மட்டத்திலே பங்களிப்பு செய்திருக்கிறார்கள்.
இந்தக் கல்லூரியின் மாணவரான முந்நாள் கல்வி அமைச்சர் பதியுதீன் மஃமூத் 1927ம் ஆண்டு சிங்களம் இந்த நாட்டின் அரச மொழியாக வர வேண்டுமென காலியிலே குரல் கொடுத்தார். இந்தக் கல்லூரியின் மற்றொரு புகழ் பூத்த மாணவரான முன்னாள் சபாநாயகர் பாக்கிர் மாக்கார் 1951ல் பேருவளை பட்டிண சபை தலைவராக இருந்த போது சிங்களம் அரச மொழியாக்கப்பட வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றினார்.
கல்லூரியின் மற்றொரு புகழ்பூத்த அதிபரான அறிஞர் ஏ.எம். அஸீஸ் சிங்களத்திற்கும் தமிழுக்கும் உரிய இடம் அளிக்கப்பட வேண்டுமென்று குரல் கொடுத்தார். இவ்வாறான பாரம்பரியங்கள் மிகு சாஹிறாவில் பல சிங்கள தலைவர்கள், தமிழ் தலைவர்கள் கல்வி கற்று இந்த நாட்டுக்கு பங்களிப்புச் செய்திருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் தர்மதாச பண்டா, கலாநிதி வெசும்பெரும, பேராசிரியர் க. சிவத்தம்பி, கலாசூரி ஆர். சிவகுருநாதன், மூத்த ஊடகவியலாளர் பி. பாலசிங்கம் போன்ற பலரை இவ்வரிசையில் கூறலாம்.
முஸ்லிம்கள் தொடர்பான இன்று சில வெளிச்சக்திகள் பல்வேறு பிரச்சாரங்களை முடுக்கி விட்டுள்ளன. இந்த பாடசாலையின் ஸ்தாபக ஆசிரியரான கலாநிதி ரி.பி. ஜாயா இந்த நாட்டுக்கு சுதந்திரம் வாங்கும் போராட்டத்தின் போதும் இந்த நாட்டின் பெரும்பான்மை சகோதரர்களுக்கும் எங்களுக்கும் பிரச்சினைகள் இருக்கலாம் அதற்காக ஒரு நிமிடமேனும் சுதந்திரத்தை தாமதிக்க இடமளிக்க மாட்டோம் என்று பாராளுமன்றத்திலே டொமினிக்கன் அந்தஸ்து வழங்கும் விவாதத்தில் உரையாற்றினார்.
எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க போன்ற சிங்களத் தலைவர்கள் இதனை அங்கீகரித்தும் நன்றி தெரிவித்தும் உரையாற்றியுள்ளார்கள். இது தவிர, யுத்தத்தின் போதும் முஸ்லிம்கள் இந்த நாட்டின் இறைமையை பாதுகாப்பதற்கான பெரும்பான்மை மக்களுடன் இணைந்து செயற்பட்டார்கள். அதன் காரணமாகவே இன்று இந்த நாடு பிரியாது ஒற்றையாட்சி நாடாக இருக்கின்றதென்பதை மறந்து விடக் கூடாது.
முஸ்லிம்கள் இவ்வாறு நாட்டுக்காக ஆற்றிய பங்களிப்புக்கள் கொச்சைபடுத்தப்படுவது கவலை அளிக்கின்றது. முஸ்லிம்கள் 40 சதவீதமானவர்கள் சிங்கள மொழியிலே படிக்கின்றார்கள். இந்த நாட்டின் சிங்கள பாடசாலைகளில் போதிய வாய்ப்பு அளித்தால் இதனை விட கூடுதலான முஸ்லிம்கள் தம் பிள்ளைகளை சிங்கள மொழியிலே படிப்பிப்பார்கள். ஒரு பெரும்பான்மை சமூகத்தின் மொழியை சிறுபான்மை சமூகமொன்று அரவணைத்து இருப்பதென்றால் அதனால் பெருமைப்பட வேண்டியது பெரும்பான்மை சமூகமே.
மொழிப்பிரச்சினை காரணமாக ஒரு யுத்தமே மூண்ட இந்நாட்டில் முஸ்லிம்கள் சிங்களத்தை தம் பிள்ளைகளது போதனா மொழியாக ஏற்றுக் கொண்டிருப்பது எவ்வளவு பெருந்தன்மையான ஒன்று என்பதை பெரும்பான்மை சமூகம் ஏற்றுக் கொள்ள வேண்டும்.
கொழும்பு சாஹிறாக் கல்லூரியில் 2000த்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் சிங்கள மொழியில் கற்கின்றார்கள். கொழும்பிலுள்ள முஸ்லிம் பாடசாலைகளுடைய கல்வி நிலைமை மிக மோசமாக இருக்கின்றது. நான்கு ஐந்து பேர்கள் தான் கொழும்பிலிருந்து பல்கலைக்கழகம் செல்கின்றார்கள். இந்த நிலைமையை மாற்ற சாஹிறாவும் பங்களிப்புச் செய்வது அவசியம்.
கல்லுரி பதில் அதிபர் டிறிஸ்வி மரிக்கார் பேசுகையில்,
இவ்வாறான சஞ்சிகைகளை வெளியிடுவதன் மூலம் மாணவர்களது எழுத்து மற்றும் ஊடகத் திறமைகளை வெளிக்காட்டுவதற்கு வாய்ப்பாக அமைகின்றது. மொழிப் பற்றுடைய நிலையமாக சாஹிறாவை மாற்றுவது இந்த சஞ்சிகையை வெளியிடுவது ஒரு நோக்கமாகும். தாய் நாட்டின் பிரதான மொழியை நேசிப்பது நாம் இந்நாட்டுக்குச் செய்யும் கௌரவமாகும்.
சிங்கள் சிரேஷ்ட பிரிவின் தலைவர் ஏ.டபிள்யூ. அஸீஸ் சஞ்சிகையின் ஆசிரியர் அஷ்ஷேக் ஏ.ஜே.ஜே. ஜவான் ஆகியோரும் உரையாற்றினர்.
Ameen Brother, Assalamualaikum,
ReplyDeleteour anxious must target the small group doing heavy attack on muslims Please find the way and get the people with you.
Allah will help you and your helpers.