Header Ads



தாவூத் இப்ராகிமின் உறவினராக என்னை பார்க்கவேண்டாம் - ஜாவித் மியான்டட்


பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் ஜாவித் மியான்டட். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் முக்கிய பங்கு வகிக்கும் இவருக்கு டெல்லியில் இன்று நடந்த இந்தியா - பாகிஸ்தான் மோதும்  3-வது ஒருநாள் போட்டியை பார்க்க மத்திய அரசு விசா வழங்கியது.

மியான்டட்டுக்கு  விசா வழங்கியதற்கு பாரதீய ஜனதா, சிவசேனா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஏனென்றால் மியான்டட் மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்புடைய தாவூத் இப்ராகிமின் உறவினர் ஆவார். மியான்டட்டின் மகன் தாவூத் இப்ராகிமின் மகளை திருமணம் செய்து இருக்கிறார். இந்த எதிர்ப்பு காரணமாக மியான்டட் இந்தியா வருவதை ரத்து  செய்தார். 

சர்ச்சையை தவிர்க்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவரின் வேண்டுகோளை ஏற்று அவர் இந்தியா வருவதை தவிர்த்தார். இந்த நிலையில் தன்னை கிரிக்கெட் வீரராக பாருங்கள். சிலரது (தாவூத் இப்ராகிம்)  உறவினராக பார்க்கவேண்டாம் என்று மியான்டட் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

 என்னை ஒரு கிரிக்கெட் வீரராக பார்க்கவேண்டும். விளையாட்டு வீரராக நினைக்க வேண்டும். சிலரது உறவினர் என்றால் என்ன அர்த்தம். நான் விசா பெற்றதில் என்ன பிரச்சினை இருக்கிறது. பாகிஸ்தான் தொடரை வென்றதால் நான் பிசியாக இருக்கிறேன். அவரது (தாவூத் இப்ராகிம்) குடும்பத்தினர் அனைவரும் இந்தியாவில் உள்ளனர். சகோதரர்கள், சகோதரிகள் இந்தியாவில்தான் உள்ளனர். அப்படி இருக்கும் போது என்னை மட்டும் குறி வைப்பது ஏன் என்று தெரிய வில்லை.  

ஏனென்றால் நான் புகழ் பெற்றவனாக இருக்கலாம். நான் கிரிக்கெட் வீரராக இருந்தேன். தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தில் பணி புரிகிறேன்.  இந்தியா - பாகிஸ்தன் இடையே நல்ல உறவு  இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். இரு நாடுகள் இடையே கிரிக்கெட் உறவு தொடரவும் விரும்புகிறேன்.

இவ்வாறு மியான்டட் கூறி உள்ளார்.

No comments

Powered by Blogger.