மருத்துவ துறையில் சாதனைகளை புரிந்த விஞ்ஞானி மஹ்தி ஹஸன் மறைவு
(தூது)
மருத்துவ துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்த விஞ்ஞானி மஹ்தி ஹஸன் நேற்று மரணமடைந்தார். உடல் நலக்கோளாறால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் மரணத்தை தழுவினார். அவரின் உடல் இன்று லக்னோவில் உள்ள இமாம்பாடா குஃப்ரா மாப் சாஹிப் அடக்கஸ்தலத்தில் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 1936 மார்ச் 21-ல் உத்திரப்பிரதேசத்தில் உள்ள கதாயன், அக்பர்பூர் (இப்போதைய அம்பேத்கர் நகர்) என்னும் கிராமத்தில் பிறந்தவர்தான் பத்மஸ்ரீ பேராசிரியர். மஹ்தி ஹஸன்.
மருத்துவப் பணியில்:இந்திய தேசிய விஞ்ஞானக் கழகத்தின்( Indian National Science Academy) கவுரவ விஞ்ஞானியாக இருந்தவர். 1883 யிலிருந்து 87 வரையில் லக்னோவின் ராஜா ஜார்ஜ் மருத்துவப் பல்கலைக்கழகத்தில் (King George’s Medical University) மனித உடற்கூறு பாடப் பிரிவின் கவுரவ பேராசிரியராக பதவி வகித்தார். அதே பல்கலைக்கழகத்தில் முதல்ராகவும், சிறப்பு மேலதிகாரியாகவும் பதவி வகித்தவர். 1992-94 வரை அலிகாரில் உள்ள ஜவஹர்லால் நேரு மெடிகல் காலேஜில் டீனாகவும், 1972-96 வரை பேராசிரியராகவும், 1990-93 வரையில் மனித உடற்கூறு பிரிவின் சேர்மனாகவும் இருந்தவர்.
1991-1992 இன் டாக்டர். பி.சி.ராய் தேசிய விருதை (Dr B.C. Roy National Award) ‘தலை சிறந்த மருத்துவ ஆசிரியர்’ பணிக்காகப் பெற்றவர். இன்றைய உலகில் 12,200க்கும் மேற்பட்ட அவரின் மாணவர்கள் மருத்துவப்பணி ஆற்றிக்கொண்டுள்ளனர்.
‘எஸ்கார்ட்ஸ் இருதய மருத்துவமனை’யின் பத்மஸ்ரீ டாக்டர்.அஷோக் சேத்தும், இதய ரண வைத்தியர் பத்மஸ்ரீ டாக்டர்.நரேஷ் ட்ரெஹானும் பேராசிரியர் ஹசனின் மாணவர்களே என்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ-அறிவியல் உலக சாதனைகள்:பேராசிரியரின் இடைவிடா முயற்சியானது, மருத்துவத்துறையை நவீனப்படுத்தும் முயற்சிகளின் மேலான மருத்துவ ஆராய்ச்சிகளேயாகும். சுற்றுப்புற சூழல் மாசுபடுதல், விவசாயத்தில் உபயோகிக்கப்படும் அதி வீரிய பூச்சி மருந்துகள் குறித்த ஆய்வு, உடல் உறுப்புக்களுக்கும், நரம்புகளுக்கும் மாற்றாக உலோகங்களை உபயோகித்தல் (neurotoxicity), மண்டையோட்டில் நீர் கோர்த்தல்(hydrocephalus), மூப்படையும் மூளை போன்றவை குறித்த ஆய்வுகள் ஆகியவை அவரின் ஆராய்ச்சியின் முக்கிய அம்சங்களாக இருந்தன.
மூளையில் படரக்கூடிய நிறப்படலங்கள்(lipofuscin), எங்கேயிருந்து, எதனால் தோன்றின போன்ற கேள்விகளுக்கு ஒரு அனுமானத்தை 1972இல் பேராசிரியர் ஹசனும், அவருடைய குழுவும் ஆராய்ந்து அறிவித்தது. அதனையே 2002இல் ஸ்காண்டினீவியாவைச் சார்ந்த ஆராய்ச்சிக்குழு(Scandinavian group) பரிசோதனை செய்து உறுதிபடுத்தியது.
மூளையில் துத்தநாகம் இருப்பதை கண்டுபிடிக்கும் புதிய உத்திகளையும் பேராசிரியர் இவ்வுலகிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார்.
கல்விப் பணியில்:மருத்துவத்துறையைச் சார்ந்த பெயர் பெற்ற, குறிப்பிடத்தகுந்த இதழ்களில் எல்லாம் பேராசிரியரின் கட்டுரைகள் அட்டவணைப்படுத்தப்பட்டுள்ளன. மருத்துவ நூல்களில் புகழ் பெற்ற க்ரே’யின் மனித உடற்கூறு புத்தகம்(Gray’s Anatomy) உட்பட உலகளாவிய தரத்தில் 38 புத்தகங்கள் வரையிலும் அவருடைய ஆராய்ச்சிகள் மேற்கோள்களாக காட்டப்பட்டுள்ளன். பல மருத்துவ கட்டுரைகளிலும், இதழ்களிலுமாக 660க்கும் மேலான குறிப்புகள் இவரின் ஆராய்ச்சிகளிலிருந்து உதாரணங்களை காட்டப்பட்டுள்ளன. கடும் உடல்நலக் குறைவில் இருந்தபோதும் கடந்த வருட டிசம்பர்-2012ல் ஒரு புத்தகம் எழுதி வெளியிட்டார். மருத்துவத்துறையில் அதனுடன் சேர்த்து மொத்தம் ஆறு புத்தகங்கள் அவரால் எழுதப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
இன்னாலில்லாஹி வயின்னாஹ் இலைஹி ராஜியூன்.
ReplyDeleteஇன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
ReplyDeleteஇறைவா அன்னாரை பொருந்திக்கொள்வாயாக