Header Ads



நேபாள அரசின் அதிரடி உத்தரவு


நேபாள தலைநகர் காத்மாண்டுவில் வீடு கட்டுபவர்கள் தங்களது வீட்டில் குறைந்தபட்சம் இரண்டு மரங்களையாவது கட்டாயம் வளர்க்க வேண்டும் என அந்நாட்டு அரசு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. 

நேபாள நாட்டின் தலைநகர் காத்மாண்டு, பனிபடர்ந்த மலைகளின் நடுவே அமைந்துள்ளது. ஒரு நாட்டின் தலைநகர் என்ற தகுதிக்கேற்ப தற்போது காத்மாண்டு நகரம் வளர்ச்சி கண்டு வருகிறது. இதையடுத்து மலைகளில் மரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. இதையடுத்து நேபாள அரசு தற்போது அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து காத்மாண்டு மெட்ரோபாலிட்டன் தலைமை அதிகாரி கேதார் பகதூர் அதிகாரி கூறுகையில், வரும் ஜனவரி 14ம் தேதி முதல் காத்மாண்டுவில் வீடு கட்ட விரும்புவோர் கண்டிப்பாக தங்களது வளாகத்தில் குறைந்த பட்சம் 2 மரங்களையாவது நட்டு வளர்க்க வேண்டும். மிகச்சிறிய இடங்களில் வீடு கட்டுவோர் தங்களது வீட்டு மாடியில் சிறிய தோட்டங்களை கண்டிப்பாக அமைக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். நகரத்தின் அழகை மேம்படுத்தவும், சுற்றுப்புறச்சூழலை மேம்படுத்தவும் இந்த நடைமுறை அமலுக்கு வருவதாக தெரிவித்த அவர், இது முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வுகள் நடத்தப்படும் என்றும் கூறினார். மேலும், ஏற்கனவே கட்டப்பட்ட வீடுகளில் மரம் வளர்ப்பது குறித்து தனியாக கொள்கை வகுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி தெரிவித்தார்.

15 லட்சம் பேருக்கு அதிகமான மக்கள் தொகை கொண்ட காத்மாண்டு பள்ளத்தாக்கு பகுதியில், லலித்பூர், பக்தாபூர், கீர்த்திபூர் மற்றும் திமிதே ஆகிய இடங்கள் அடங்கும். கடந்த 1999ம் ஆண்டு 33 சதவீதமாக இருந்த நாட்டின் மொத்த வனப்பரப்பு, தற்போது வெறும் 10 சதவீதத்திற்கு குறைந்து விட்டது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.