சிரியாவில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த அமெரிக்காவும், பிரான்ஸும் இணக்கம்
மாலியில் முஸ்லிம் போராளிகளை ஒடுக்க பிரான்ஸ் எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஷுவா ஹொலாந்துடன் தொலைபேசியில் உரையாடிய ஒபாமா, மாலியில் மீண்டும் ஜனநாயக ஆட்சியை கொண்டு வரத் தேவையான உதவிகளைச் செய்ய தயாராக இருப்பதாகத் தெரிவித்தார். இது தொடர்பாக அமெரிக்க அதிபரின் வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மேற்கு ஆப்பிரிக்க நாடான மாலி, பயங்கரவாதிகளின் புகலிடமாக மாறுவதைத் தடுக்க பிரான்ஸ் தலைமையில் சர்வதேச நாடுகள் மேற்கொள்ளும் முயற்சிக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்படும் என்று அதிபர் ஒபாமா, பிரான்ஸ் அதிபர் ஃபிரான்ஷுவா ஹொலாந்திடம் தெரிவித்தார். அமெரிக்காவின் ஆதரவுக்கு பிரான்ஸ் அதிபர் நன்றி தெரிவித்தார்.
ஆப்பிரிக்க யூனியன் மற்றும் சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்புடன் மாலியில் தேர்தல் நடத்தி மீண்டும் ஜனநாயக அரசை ஏற்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விவாதித்தனர். இது தொடர்பாக முயற்சி மேற்கொள்ளும் மாலி இடைக்கால அரசுக்கு ஆதரவாக செயல்படுவது என்றும் முடிவு செய்யப்பட்டது. அல்ஜீரியாவில் கடந்த வாரம் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலுக்கு இரு தலைவர்களும் கண்டனம் தெரிவித்தனர். சிரியாவில் உள்நாட்டுப் போரால் பொதுமக்கள் உயிரிழந்து வருவது குறித்து இருவரும் கவலை தெரிவித்தனர். சிரியா மக்களுக்கு உதவும் வகையில் அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த உதவுவது என்று முடிவு செய்தனர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment