புதிய நீதியரசரும், இன்றைய இலங்கை முஸ்லீம் சமுகத்தின் நெருக்குவாரங்களும்!
(கழுகுப் பார்வை)
இன்று இலங்கையில் நடைபெறுகின்ற விடயங்களைப் பார்க்கி;ன்றபோது இலங்கையின் நீதித்துறை மக்களின் வாயில்களில் போட்ட அவல்மாதிரி எல்லோருமே அசைபோடத் தொடங்கியுள்ளனர். புதிய நீதியரசர் நியமிக்கப்பட்டுள்ளார். 44வது பிரதம நீதியரசராக சத்தியப்பிரமானம் எடுத்தகையுடன் முன்னாள் நீதிபதி என்கிற பட்டத்துடன் நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க ஒதுங்கிவிட்டார். தன்னுடைய உத்தியோகப்பூர்வ இல்லத்திலிருந்து வெளியேறிகின்றபோது 'தான் இன்னும் நீதியரசராகவே இருக்கின்றேன். நான் விலகவில்லை உத்தியோகபூர்வ இல்லத்தில் இருந்தால் எனக்குப் பாதுகாப்பு இல்லை என்பதால் நான் வெளியேறுகின்றேன்'; என்கிற கருத்துக்களை 43வது நீதியரசரான கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கா கூறியிருந்தார்.
புதியநீதிபதியும் தன் முன்னால் உள்ள பலபிரச்சினைகளுக்கு தீனிபோடவேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றார். ஏழு நீதிபதிகள் அண்மையில் இடமாற்றம் பெற்றனர். அவர்களை உடனடியாகவே இரத்துச் செய்வதாக புதியவர் ஆணையிட்டிருந்தார். நீதிமன்றத்தினால் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விசாரணை செய்து வெளியேற்றும் நடவடிக்கையை மேற்கொள்ளப்போவதாகவும் அறிக்கையை விட்டிருந்தார். அதேவேளை சில சட்டத்தரணிகள் உயர்நீதியரசரை பகிஷ்கரிக்கப்போவதாகவும் சிலர் அதனை மறுப்பதாகவும் அறிக்கைமேல் அறிக்கைகள் வந்தவண்ணமிருந்தன. இத்தனைக்கும் மேலாக புதியவர் புதியவர்தான் பழையவர் பழையவராகி ஆறமர அமர்ந்துவிட்டார் என்பதுதான் உண்மையாகும். முன்னாள் நீதியரசரின் பதவியிறக்கத்தில் பரிதாபப்பட்ட முன்னாள் படைகளின் தளபதியாகவும், கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி;யை எதிர்த்து ஆட்சிபீடம் ஏறலாம் என்று கணவுகண்ட சரத்பொன்சேகா தன்னோடு இணைந்து அரசியலில் ஈடுபடமுன்வருமாறு வேண்டுகோள் விடுத்திருந்தார். எதனையும் தான் கண்டுகொள்ளாததுபோல் பால்குடிக்கும் பூணைபோல பெட்டிப்பாம்பாக மாறிவிட்டாரா என்று நினைக்கும் அளவுக்கு பழையவர் ஒதுங்கிவிட்டார் போலவே தெரிகின்றது.
அதேவேளை பலகுற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள நீதியரசர் மொஹான் பீரிஸ் காணப்படுவதாக விஜிதஹேரத் எம்பி அண்மையில் கூறியிருந்தார். ஆதலால் நாட்டில் இனிமேல்தான் பிரச்சினையே ஆரம்பமாகப் போகின்றது எனவும், இப்பிரச்சினைகள் பன்மடங்காகப் பெருகி நாட்டில் பெரும் அபாயகரமான நிலையைத் தோற்றுவிக்கும். இல்லாத பிரச்சினைகள் திடீரென உருவெடுக்கும் என்றும், சட்டவிரோதமான முறையில் நியமிக்கப்பட்டுள்ள புதியநீதியரசர் விடயத்தில் அரசு நீதமாக நடந்து கொள்ளவில்லை எனவும், புதிய நீதியரசர் உயர்நீதிமன்றில் நீதியரசர் குழாமில் அங்கம் வகிக்காதவர் என்றும், இவ்வாறு அங்கம் வகிக்காதவரை பிரதம நீதியரசராக நியமிப்பது பெரும் பிழையான விடயமாகும். அமைச்சரவை ஆலோசகர், பல்வேறு அரச நிறுவனங்களின் நிறைவேற்றுக் குழுவில் அங்கம் வகிப்பவர், பலகுற்றச்சாட்டுக்களில் தொடர்புடையவர், மக்களுக்கோ, அரசியல் கட்சிகளுக்கோ, நீதித்துறையினருக்கோ நம்பிக்கையீனத்தை ஏற்படுத்தும் ஒரு நடவடிக்கையாகவே இது நோக்கப்படுகின்றது. நீதித்துறையின்மீது மக்களுக்கு பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி நாட்டின் ஜனநாயகம், நீதித்துறையின் வீழ்ச்சிக்கே இது வழிவகுக்கும் செயலாகவே கருதப்படுகின்றது எனப் ஜே.வீ.பியின் பிரச்சாரச் செயலாளர் மற்றும் நாடாளுமன்ற உருப்பினருமான விஜித ஹேரத் தெரிவித்;திருந்தார்.
சில தினங்களுக்கு முன்னர் கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் விடுத்துள்ள அறிக்கையொன்றில் இலங்கையில் நடைபெற்றுவருகின்ற நீதிநெறிமுறையற்ற சம்பவங்கள் தொடர்பில் இலங்கையரசுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளதுபோல் தெரிகின்றது. அதாவது, சிவில் சமூகத்திற்கு விடுக்கப்படும் அச்சுறுத்தல் தொடர்பில் அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகின்றது என்றும், கருத்துக்கூறும் உரிமையை சிவில் சமூகத்திடம் உறுதிப்படுத்துமாறும், சட்டத்திற்காக குரல்கொடுப்பவர்களின் மீது தொடராக நடாத்தப்பட்டுவருகின்ற தாக்குதல்களை நிறுத்துமாறும் அமெரிக்க அரசு வேண்டிக் கொள்வதுடன், அடிப்படை உரிமையை பாதுகாக்குமாறும் அச்சமின்றி வாழ்வதற்கான அனைத்துப் பிரஜைகள்மீதும் பாதுகாப்புக்களை வழங்குமாறும் பழிவாங்கும் நடவடிக்கைளைத் தவிர்த்து அச்சமின்றி தமது கருத்துக்களை வெளிப்படுத்துவதற்குரிய உரிமைகளை உறுதிப்படுத்துமாறும் இலங்கை அரசைக் கோருவதாகவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. இதனைப் பார்க்கின்றபோது இலங்கையின் அண்மையக்கால நீதித்துறைச் சம்பவங்களையும், நடந்தேறிவருகின்ற சமய சமூகப் பிரச்சினைகள் மற்றும் சிறுபான்மைச் சமூகங்கள் மீது காட்டப்படும் காட்டமான வெறுப்புணர்வுகளையும் உன்னிப்பாகவே கவனிக்கத் தொடங்கியுள்ளன என்பதைத்தான் அமெரிக்க அரசின் உத்தியோகபூர்வ அறிக்;கைகள் கூறிநிற்கின்றது.
மேலும், இதற்குக்காரணமாக அமைகின்ற செயற்பாடாக முன்னாள் உச்சநீதிமன்ற நீதித்துறைத் தலைவருக்குப் பின்னால் இருந்து செயற்பட்ட நீதிபதிகள், சட்டத்தரணிகளுக்கெல்லாம் அனாமோதய தொலைபேசிகள் ஊடாக அச்சுறுத்தல் விடப்படுவதாகவும் கூறப்படுகின்றது. அதனை முற்றாக தடைசெய்யும் நோக்குடன் இந்த அறிவிப்பை அமெரிக்கா அறிவித்திருந்த அதேவேளை இக்கருத்துக்கு ஆப்பாக ஆட்சி அதிகாரம், பாராளுமன்ற அதிகாரம், நாட்டின் நீதித்துறை போன்றவைகளை ஒருசிலரின் போக்குக்கு ஏற்றவிதத்தில் மாற்றியமைக்க முடியாது என்று அண்மையில் நுவரெலியாவில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் ஜனாதிபதி தெரிவித்திருந்தார். இக்கருத்தின்பிரகாரம் உச்சநீதிமன்றமாக இருந்தால் என்ன அமைச்சராக இருந்தால் என்ன எதிர்க்கட்சியாக இருந்தால் என்ன? படைத்தளபதியாக இருந்தாலும்சரியே நீதி நீதியாகவே இருக்கும். என்பதையும் கூறாமலே கூறிவிட்டார் நமது ஜனாதிபதி. மேலும், இன்றைய இலங்கையின் அரசியல் அமைப்பின் பிரகாரம் ஆளும் பாரளுமன்றத்தின் அதிகாரங்களை மேலும் வலுப்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகளை மீளமைப்பதற்கான ஏற்பாடுகள்கூட நடைபெறப்போகின்ற ஒரு நிலைமையும் ஆட்சியாளர்கள் மத்தியில் தற்போது காணப்படுகின்றது.
இதற்கிடையில் இந்த நாட்டில் ஏற்பட்டுவரும் ஆளஊடுறுவியுள்ள அரசியல் சித்துக்களில் அமைச்சர்களின் அதிகாரம் தலைவிரித்தாடுகின்ற சம்பவங்களும் நடைபெற்றுவருகின்றமை கவலையான விடயமாகும் என்பதை புத்திஜீவிகள் சுட்டிக்காட்டுகின்றனர். அந்த விசமத்தனத்தினால் கல்வி, சுகாதாரம், நீதிமன்றம், பொலீஸ், நிருவாகத்துறை என்பன இந்த ஆட்சியாளர்களின் ஆட்சியில் தொடர்ந்து செல்லுமாக இருந்தால் எல்லாமே அழிந்துவிடும் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும் என்று தென்மாகாண சபையின் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினரான மைத்திரி குணரத்ன அண்மையில் ஹபராதுவயில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது தெரிவித்திருந்தார். மேலும் அவர் தெரிவிக்கையில் சுகாதாரத்துறையை அமைச்சர் மைத்திரிபால சிறிசேனாவால் நிருவகிக்க முடியாது பலபிட்டி வைத்தியசாலையில் தாயும்சேயும் உயிரழந்துள்ளனர்;. உயர்கல்வி அமைச்சரின் அண்மைக்கால நடவடிக்கைகள் வெட்வெளிச்சமாகிப் போன நிலையும், நீதித்துறை தலைகீழாக மாறியுள்ளது என்றும் உண்மையான நீதியரசராக ஷிராணி பண்டாரநாயக்கவே எனவும் மைத்திரி குணரத்ன தெரிவித்திருந்தார்.
நாட்டில் சமூகரீதியான பிரச்சினைகளும், இனரீதியான பிரச்சினைகளும், பயங்கரவாதப் பிரச்சினைகளும் முடிவுற்றதாகக் கூறப்படும் முள்ளிவாய்க்கால் சமரின் பின்னரான யுத்தக்குற்றச்சாட்டுக்கள், ஜெனீவாப் பிரச்சினைகளின் பின்னர் தொடராக கூறப்பட்டு வருகின்ற மனித உரிமைகள் தொடர்பில் ஏற்பட்டுள்ள எல்லை மீறல்கள் பிரச்சினை, இந்தியாவுடன், அமெரிக்கா போன்ற நாடுகளுடன் ஏற்பட்டுள்ள முறுகள் நிலைமைகள், ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்த நடவடிக்கைகள் தொடர்பான பிரச்சினைகள், நாட்டில் சீனர்களின் அதிகரித்த வருகை, சீனாவின் ஐக்கியத்தினுள் இலங்கையின் அனைத்துவிடயங்களும் உட்புகுந்துள்ள நிலைமைகளின் தொடராக இலங்கையின் சந்தைகளில் சீனப்பொருட்கள் மலிவான விலையில் கிடைக்கும் சங்கதிகள் என்பனவற்றுடன் இணைந்துள்ள நீதித்துறையின் மேலெழுந்த பிரச்சினைகளை வெகுண்டெழுந்த அதிகாரத்துறை அடக்கியுள்ள மாற்று நடவடிக்கைகள் இன்றைய இலங்கையின் பொருளாதாரத்தையே ஆட்டங்காணச் செய்து நாட்டு மக்களின் வாயிலும் வயிற்றிலும் அடிக்கும் செயலாகவே பார்க்கப்படுவதாக பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர்.
அதேநேரம் நாட்டில் இனரீதியான எதிர்ப்பலைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஆளும் அரசுடன் ஒட்டிக் கொண்டுள்ள முஸ்லீம் கட்சிகள் எதுவுமே பேசாமடந்தையாக இருந்துவருகின்றனர். குறிப்பாக நாட்டின் நாலாபுறமும் வாழுகின்ற முஸ்லீம் மக்களின் வாழ்வினைக் கேள்விக் குறியாக்கியுள்ள பேரினவாத சமாச்சாரம் கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருக்கின்ற ஒரு நிலையில் முஸ்லீம்களுக்கு பொறுப்புக்கூறவேண்டிய முஸ்லீம்கள் கட்சிகள் தங்களது கதிரைகளைக் காப்பற்ற போராடி வருகின்றனர் போலவே தெரிகின்றது. அண்மையில் குருநாகலையில் நடைபெற்ற மாவட்ட பேராளர் மாநாட்டில் பேசும்போது சில கருத்துக்களை முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், அமைச்சருமான றஊப் ஹக்கீம் அவர்கள் முன்வைத்திருந்தார். அதாவது 'தொடர்ச்சியாக முஸ்லீம் சமூகத்தின்மீது பேரினவாதிகளினால் கட்டவிழ்த்தப்பட்டுள்ள முஸ்லீம் விரோத நடவடிக்கைகள் இன்னும் கட்டுமீறிச் செல்கின்றன. இதனை தொடராக அனுமதிப்பது என்பது அரசுக்கு நல்லதோர் விடயமல்ல. பலமான அரசின் ஸ்திரத்தன்மையை இழந்து பலவீனப்படுத்துவதற்கு தாம் இடமளிக்க விரும்பவில்லை என்றும், நாங்கள் இந்நாட்டில் கொழுந்து விட்டெரிகின்ற ஒருபெரிய பிரச்;சினைக்குள் மாட்டிக் கொண்டிருக்கின்ற நிலையில் இந்த சமகாலப் பிரச்சினையை முஸ்லீம் காங்கிரஸின் தலைமை எவ்வாறு அணுகப்போகிறது என்று எல்லோரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள். இச்சந்தர்ப்பத்தில் தம்முடைய உள்வீட்டுப்பிரச்;சினைகளை அலட்டிக் கொள்ளாது அந்த முக்கியமான விடயங்களில் கவனம் செலுத்தியாகவேண்டும்' என்றும் கூறியிருந்தார்.
தன்னுடைய பக்கத்து நியாயங்களை எல்லாம் கொட்டித்தீர்க்கும் அளவுக்கு தன்னால் இந்த அரசின் யதார்த்தத்தை புரிந்துகொள்ளாமல் இருக்க முடியவில்லை என்கிற இயலாத்தனத்தையும், மக்கள் தம்மீது கொண்டுள்ள அவநம்பிக்கையின் வெளிப்பாடுகளை ஒட்டுமொத்தமாக அரசிக்கு எதிராக கொண்டுவருவதற்கு தன்னுடைய கட்சிக்காரர்கள்மீதுள்ள நம்பிக்கையீனத்தை சொல்லாமலே சொல்லிவிட்டார் முஸ்லீம் காங்கிரஸின் தலைவர். நீதிக்குள் நீதியாக இருக்கவேண்டிய நீதியமைச்சுக்கு நீதியை நிலைநாட்டுவதற்குரிய சந்தர்ப்ப சூழ்நிலைகள் சரியான பொருத்தப்பாடுகளை நோக்கிய பயணத்தை உருவாக்கிக் கொள்ள சந்தர்ப்பம் பார்க்கப்படுகின்ற தோரணையில் அமைச்சரின் பேச்சுக்களில் உள்ளார்ந்த மனவலிகள் தெரிகின்றன. என்பதுதான் யதார்த்தமாகும். நாட்டின் இறையான்மைக்கு குந்தகம் விளைவிக்கின்ற பேர்வழிகள் நாளாந்தம் உருவாகிக் கொண்டிருக்கின்;றார்களா என்பதை நாடிபிடித்து அவற்றை தகர்த்தெறியும் செயற்பாடுகளை இன்றைய ஆளும் கட்சிக்காரர்களின் உதவியுடன் செய்ய முற்படுவதற்கு அமைச்சர் ஒத்தடமிட சந்தர்ப்பத்தைப் பார்க்கின்றாரா? என்பதையும் சிந்திக்க வேண்டி உள்ளது.
தமிழ்தேசியத்துவத்துடன் சங்கமிக்கப்போகின்ற முஸ்லீம்களின் நான்காவது அணி?
இதற்குள் பேரினவாதிகளின் பிடியிலிருந்து தவிர்த்துக் கொள்வதற்கான முஸ்தீபுகளை சில முஸ்லீம் இயக்கங்கள் தமிழ்தேசியத்துடன் சங்கமிக்கப்போகின்ற பேச்சுக்களும் அடிபடத்தொடங்கியுள்ளன. முஸ்லீம்களை தமிழ்தேசியத்துடன் இணைத்து இரண்டு சிறுபான்மையினரும் ஒன்றாகி சங்கமமாகின்றபோது பேரினவாதம் முற்றாக செயலிழந்து போவதற்குரிய சந்தர்;ப்பத்தை உருவாக்கலாம் என்பது இவர்களின் கொள்கையாக இருக்கலாம். கடந்த காலங்களில் இரு இனத்திற்குமிடையில் ஏற்பட்டிருந்த மனக்கசப்புக்கள் இல்லாமலாக்கப்பட்டிருந்தாலும் அண்மையில் ஓட்டமாவடி, மற்றும் வாழைச்சேனைப்ப பிரதேங்களில் ஏற்பட்டுள்ள சம்பவங்களைப் பார்க்கின்றபோது மீண்டும் இரு சிறுபான்மையினத்தினுள்ளும் ஒரு முறுகளை ஏற்படுத்தி பிரிக்கப்பார்க்கின்ற பேரினவாதிகளின் செயலாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது.
இதனையெலல்லாம் மறந்து சிறுபான்மைத் தமிழ்தேசியத்துவத்தினர் இந்த முஸ்லீம்களை அரவணைத்துக் கொள்ளத்தேவையான பக்குவங்களை தமிழ்பேசும் மக்களின் குறிப்பாக கிழக்;;கு, வடக்கில் வாழுகின்றவர்களின் மனங்களை வெல்வதற்கான பக்குவங்களை நான்காவது அணியினராக ஏற்றுக்கொண்டு கருவரை வரையில் சென்று ஆத்மார்த்தமான செயற்பாடுகளை தமிழ்தேசியத்துவம் செய்ய முடியுமாக இருந்தால் அது கடந்த எஸ்ஜேவி. செல்வநாயகம் அவர்கள் இருந்த யுகத்திற்குள் இரு இனமும் ஒன்றாக சந்தேகமேயற்ற பார்வையுடன் ஓரினமாக ஐக்கியப்படும் நாளாகவே இருக்கும். அவ்வாறு நடைமுறைச் சாத்தியப்பாடுகள் உருவாகின்றபோது பேரினவாதிகளின் ஒட்டுக் கட்சிக்குள் சங்கமிக்கின்ற ஒரு விடுதலை உணர்வை இந்த முஸ்லீம்கள் உணர்வார்கள். என்பதே பல முஸ்லீம் புத்திஜீவிகளின் நேர்பார்வையாக அமையும். எது எப்படியாகினும், தமிழ்தேசியத்துவம் எதிர்வரும் காலத்தில் பேசப்போகின்ற பேச்சுக்களில் முஸ்லீம் சமூகத்தின் அபிலாஷைகளை பூர்த்திக்கும் வகையில் அமைய வேண்டும் என்பதையும் யதார்தத்ததை புரிந்து கொண்டோர் நினைவில் கொண்டால் வெற்றிகள் நிச்சயம் கிடைக்கும். யாவற்றையும் பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
Post a Comment