கொம்பனித்தெரு பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டாது, அது மேலும் அலங்கரிக்கப்படும் - கோட்டா உறுதி
கொழும்பு- கொம்பனித் தெருவில் மக்களுக்கு குடிசை வீடுகளுக்கு பதிலாக சகல வசதிகளையும் கொண்ட புதிய தொடர்மாடி வீடுகள் அமைத்துத் தரப்படும் என்று பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.
கொம்பனித் தெரு வீட்டுத் தொகுதி மீள் நிர்மாணத் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப் பட்டவர்களுக்கு அவர்களுக்குச் சொந்தமான 6.5 ஏக்கர் நிலப்பரப்பைக் கொண்ட காணிகளி லேயே புதிய தொடர் மாடி வீடுகள் நிர்மாணித்து தரப்படும் என்று அவர் உறுதியளித்தார்.
கொம்பனித் தெரு வீட்டு மீள் நிர்மாண திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட 456 குடும்பங்களுக்கும் 90 வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கும் திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தும் விழிப்புணர்வுக் கூட்டம் நேற்று முன்தினம் மாலை இடம்பெற்றது.
கொழும்பு கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்தில் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் நகர அலுவல்கள் சிரேஷ்ட அமைச்சர் ஏ. எச். எம். பெளஸி, முதலீட்டு ஊக்குவிப்பு பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா, பாராளுமன்ற உறுப்பினர்களான திலங்க சுமதிபால, சுஜீவ சேனசிங்க, கொழும்பு மாநகர முதல்வர் ஏ. ஜே. எம்.முஸம்மில் மேல் மாகாண சபை உறுப்பினர் நவ்ஸர் பெளஸி, கொழும்பு மாநகர சபை எதிர்க் கட்சித் தலைவர் அஜந்த லியனகே, நகர அபிவிருத்தி அதிகாரசபை தலைவர் உட்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கொம்பனித் தெரு வீட்டுத் திட்ட பயனாளிகளுக்கான விழிப்புணர்வில் கலந்துகொண்டவர்களுடன் கலந்துரையாடிய பாதுகாப்புச் செயலாளர் அவர்களது குறை நிறைகளை கேட்டுக் கொண்டதுடன் அவர்களது கேள்விகளுக்கும் பதிலளித்தார்.
அத்துடன் இந்த மக்களின் நலன் பல்வேறு யோசனைகளை முன்வைத்த பாதுகாப்புச் செயலாளர் இவர்களுக்கு தேவையான நிவாரணங்களை சம்பந்தப்பட்ட வீட்டு அல்லது காணி உரிமையாளர்களுடன் கலந்துரையாடி தேவையான சலுகைகளை வழங்குமாறு நகர அபிவிருத்தி அதிகார சபை அதிகாரிகளுக்கு பாதுகாப்புச் செயலாளர் உத்தரவிட்டார்.
தொடர்மாடிகள் அமைக்கும் வரை அங்குள்ளவர்களுக்கு தற்காலிக வீடுகள் அமைத்தல், அரசு வழங்கும் காணியில் வீடுகளை தற்காலிகமாக வீட்டு உரிமையாளர்களே நிர்மாணித்தல், வாடகை பணத்தை செலுத்துல் காணியை நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு விற்பனை செய்து அதன் பெறுமதிக்கேற்ப பணத்தை பெற்றுக்கொள்ளல் போன்ற நான்கு யோசனைகளை முன்வைத்த பாதுகாப்புச் செயலாளர் இவற்றில் ஏதாவது ஒன்றை விரும்பும் உரிமையாளர்கள் ஒருவார காலத்திற்குள் எழுத்து மூலம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
தொடர் மாடிகள் நிர்மாணிக்கும் வரையிலான காலப் பகுதிக்குள் வீடுகளை வாடகைக்குப்பெற முடியாதவர்களுக்கு தற்காலிகமாக வீடு கட்ட பொருத்தமான காணி அல்லது வாடகைக் கொடுப்பனவு வழங்கப்படும் என்றார்.
வாடகைக்கான கொடுப்பனவு தொகை ஏற்கனவே 10ஆயிரம் ரூபா முதல் 35ஆயிரம் ரூபா வரை வழங்கப்பட்டு வந்தது. இதனை 12500 ரூபாவிலிருந்து 50ஆயிரம் ரூபா வரை அதிகரிக்கப்படும் என்றும் பாதுகாப்புச் செயலாளர் உத்தரவாதமளித்தார்.
அதேபோன்று இந்தப் பிரதேசத்திலுள்ள பள்ளிவாசல் எக்காரணத்தையும் கொண்டு உடைக்கப்படமாட்டாது. அது மேலும் அலங்கரித்து தரப்படும் என்றும் உறுதியளித்தார்.
சிலர் கூறுவது போன்ற இங்குள்ள மக்களை பலாத்காரமாக அப்புறப்படுத்தும் எந்த ஒரு தேவையும் அரசுக்கு கிடையாது. மாறாக தத்தமது பிள்ளைகளுடன் சிறந்த முறையில் வாழ்வதற்கு தேவையான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதே எமது நோக்கமாகும் என்றார்.
இந்த திட்டத்திற்கு அமைய நீதவான் அக்பர் மாவத்தை, மஸ்ஜிதுல் ஜாமியா மாவத்தை, ஜாவா லேன் போன்ற இடங்களில் வசிக்கும் 456 குடும்பங்களும் 90 வர்த்தக நிலைய உரிமையாளர்களும் தமக்கான புதிய வீடுகள் மற்றும் வியாபார நிலையங்களை பெற்றுக்கொள்வர்.
நகர அபிவிருத்தி அதிகார சபையானது. மக்களுக்கான சிறந்த வாழ்விட வசதியை ஏற்படுத்திக் கொடுக்கவே இத்திட்டத்தை ஆரம்பித்தது. இத்திட்டம் இந்தியாவின் டாட்டா நிறுவனத்தின் ஊடாக முன்னெடுக்கவுள்ளது. இதற்காக 406 மில்லியன் அமெரிக்க டொலர்களை முதலீடு செய்வதற்கும் அந்த நிறுவனம் தீர்மானித்துள்ளது.
Do we smell something fishy here? Oh yeah, the Geneva conference is coming.
ReplyDelete