பங்காளாதேஷில் ஜமாத்-இ-இஸ்லாமி கட்சி தலைவருக்கு மரண தண்டனை
பாகிஸ்தானிடம் இருந்து வங்கதேசம் கடந்த 1971ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றது. இதற்கான போராட்டம் நடந்த காலகட்டத்தில் பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஆதரவாக வங்கதேசத்தில் இருந்த ஒரு பிரிவினர் செயல்பட்டனர். ரசாகார் படை என்று அழைக்கப்பட்ட அவர்களில் மிக முக்கியமானவர் அபுல் கலாம் ஆசாத் எனப்படும் பச்சு ரசாகார் ஆவார்.
வங்கதேச விடுதலைக்குப் பின் ஜமாத்-இ-இஸ்லாமி என்ற பெயரில் முஸ்லிம் அடிப்படைவாதக் கட்சி ஒன்றை அபுல் கலாம் தொடங்கினார். தனியார் தொலைக்காட்சி ஒன்றில் முஸ்லிம் மதம் தொடர்பான நிகழ்ச்சியையும் நடத்தி வந்தார். அவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் கடந்த ஆண்டில் தொடரப்பட்டன.
இதைத் தொடர்ந்து, அபுல் கலாம் கடந்த ஏப்ரல் மாதம் வங்கதேசத்தில் இருந்து தப்பியோடினார். 63 வயதாகும் அவர் இப்போது பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன.
இந்நிலையில், அபுல் கலாம் மீதான வழக்குகளை விசாரித்து வந்த வங்கதேச சிறப்பு நீதிமன்றம் அவருக்கு தூக்கு தண்டனை விதித்து, திங்கள்கிழமை தீர்ப்பளித்தது. நீதிபதி ஒபைதுல் ஹசன் அளித்த தீர்ப்பில், ""கொலை, கடத்தல், பாலியல் பலாத்காரம், சித்திரவதை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு மரண தண்டனை விதிக்கப்படுகிறது.
இந்தக் குற்றங்களை அவரே நேரடியாக இழைத்தது சாட்சியங்களின் வாக்குமூலத்தில் இருந்து தெளிவாகத் தெரிய வருகிறது. அவர் தலைமறைவுக் குற்றவாளியாவார். விசாரணையை அவர் தவிர்த்ததன் மூலம் அவரது குற்றத்தன்மை உறுதியாகிறது'' என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து வழக்குரைஞர்கள் கூறுகையில், ""சர்வதேசக் குற்றத் தீர்ப்பாயச் சட்டத்தின்படி, அடுத்த 30 நாள்களில் அபுல் கலாம் சரணடைந்தாலோ அல்லது கைது செய்யப்பட்டாலோ அவர் இத்தீர்ப்பை எதிர்த்து வங்கதேச உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். அது நடக்காத பட்சத்தில், இது குறித்து இறுதி முடிவெடுக்க வேண்டியது உச்ச நீதிமன்றம்தான்'' என்று தெரிவித்தனர்.
Post a Comment