அரசாங்கத்தை விரட்ட வாய் பேச்சு மட்டும் போதாது - ரணில்
(Tl) வீதியில் பயணிப்பதாக நினைத்துக் கொண்டு சேற்றில் செல்லும் அரசாங்கம் மக்களுடன் “ருவென்ரி20‘ விளையாடுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, இந்த அரசாங்கத்தை விரட்ட அஹிம்சை வழியில் போராடக் கூடிய பலமான அணியொன்று தேவைப்படுவதாகவும் கூறினார்.
வரக்காப்பொலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு உறுப்பினர்களை இணைத்துக்கொள்ளும் நிகழ்வு நேற்று முற்பகல் இடம்பெற்றபோது பேசுகையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் பேசுகையில்,
எங்களது முழுமையான சக்தியைப் பிரயோகித்து இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதே எமது ஒரே நோக்கம். தான் பயணிக்கும் பாதை என்னவென்று தெரியாத இந்த அரசாங்கம் சேற்றில் பயணித்துக்கொண்டு வீதியில் சென்று கொண்டிருப்பதாகக் கூறுகின்றது. அத்துடன், இந்த அரசாங்கம் மக்களுடன் ருவென்ரி20 விளையாட்டை விளையாடுகின்றது.
வீதிகளை அமைத்து 20 வீதத்தை ஊழலில் எடுக்கும் அரசாங்கம் வீதி அபிவிருத்திக்கு கடன் வழங்குவோருக்கு 20 வீத தரகை வழங்குகின்றது. இந்நிலையில் மக்களுடன் ருவென்ரி20 விளையாட்டை மேற்கொள்ளும் அரசாங்கத்தை அனுமதிப்பதா அல்லது அரசாங்கத்தை விரட்டியடிப்பதா என்பதை மக்களே தீர்மானிக்க வேண்டும். இந்த அரசாங்கத்தை விரட்டுவதாயின் வாயினால் பேசுவதால் மட்டும் செய்ய முடியாது.
இதற்கு பலமான அணியொன்று உருவாக்கப்பட வேண்டும். இந்த அணி ஆயுதம் ஏந்தாது அஹிம்சை ரீதியான போராட்டத்தை நடத்தும் அணியாக உருவாக்கப்பட வேண்டும். இந்த ஆரம்ப பணியை நாம் மேற்கொண்டு வருகின்றோம். இரு கரங்களையும் தட்டி கரகோஷம் செய்வதற்காக எதிர்க்கட்சியில் இருக்க முடியாது. அரசாங்கத்தின் அதிகாரங்களைக் கைப்பற்ற வேண்டும்.
தற்போது அரசாங்கத்துக்கு எதிராக அதில் அங்கம் வகிக்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் போர் கொடி தூக்கியுள்ளனர்.
இவர்களை ஐக்கிய தேசியக் கட்சியின் இணைத்தோ அல்லது ஒன்றிணைந்த எதிர்க்கட்சியில் இணைத்தோ ஜனநாயகத்தைப் பாதுகாக்க அனைவரையும் ஒன்றிணைக்க வேண்டும். இதன் முதற்கட்டமாக அமைப்பு ரீதியான முறைமை உருவாக்கப்பட வேண்டும். இதன் பின்னரே அரசாங்கத்தை விரட்டியடிக்க முடியும். இதனையடுத்தே தேர்தலுக்கு செல்ல வேண்டும். இதன் ஊடாகவே ஜனநாயக ரீதியாக அரசாங்கத்தை உருவாக்க வேண்டும்.
அவ்வாறில்லாது ஊடகங்களில் 30 அல்லது 90 விநாடிகளில் விடயங்களைக் கூறி மக்களுக்குத் தெளிவுபடுத்த முடியாது. கிராம ரீதியில் மக்களைத் தெளிவுபடுத்த வேண்டும். இதற்காக 10 இலட்சம் ஊடகவாய்கள் உருவாக்கப்பட வேண்டும். இதன் பின்னே இரண்டாவது கட்டத்தை கட்சி சிறப்பாகச் செய்ய முடியும். அதாவது 10 இலட்சம் வாய் மூலமான ஊடகங்களைக் கொண்டு மக்களுக்குப் பிரசாரம் செய்வதன் ஊடாக வாக்குப்பலத்தை அதிகரித்து கட்சியின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்க முடியும்.
இதனைக் கட்சியின் தலைவரென்ற முறையில் என்னாலோ அல்லது பிரதித் தலைவர்களாலோ தனித்துச் செய்ய முடியாது. இதற்கு கட்சியின் அனைத்து தரப்பினருமே ஒன்றிணைய வேண்டும். நாட்டைப் பாதுகாக்கக் கூடிய கட்சி ஐக்கிய தேசியக் கட்சி என்பதனை நாட்டு மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். இன்று அரசாங்கத்துக்கு எதிராக பலர் ஐக்கிய தேசியக் கட்சியிலோ, ஒன்றிணைந்த எதிர்கட்சியிலோ அல்லது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிலோ இணைகின்றனர். நாம் அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தை உருவாக்குவோம் என்றார்.
Post a Comment