குவைத்தில் வபாத்தான இலங்கை சகோதரி - குடும்பத்தினருக்கு நீதி கிட்டுமா..?
நான் ஏறாவூரைச் சேர்த்தவன். என் பெயர் முகம்மது காசீம் அப்துல் ஹலால். நீதி மறுக்கப்பட்ட நிலையில் பொங்கி வரும் அழுகையை எழுத்துக்களாக மாற்றி உங்களுக்கு அனுப்புகிறேன். என் மன உளைச்சல் அடங்க இம்மடலை உங்கள் இணையத்தளத்தில் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன்.
எனது சகோதரி முகம்மது காசீம் சமீனா என்பவர் 18/10/2011 ல் வீட்டுப் பணிப்பெண்ணாக குவைத் நாட்டுக்கு வந்தார். வயதுக்கு வந்த இரண்டு பெண் பிள்ளைகளின் தாயான சமீனா கணவனைப் பிரிந்து வாழ்க்கையோடு தினமும் போராடிக்கொண்டிருந்தவர். வறுமையின் கோரப்பிடியிலிருந்து தன்னையும் தன் இரு பெண் பிள்ளைகளையும் விடுவிக்க அவருக்கு குவைத் வருவதைத் தவிர வேறு வழி தோன்றவில்லை.
வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் நிலையமொன்றினூடாக இங்கு வந்து ஒரு அரபி வீட்டில் பணிப்பெண்ணாக சுமார் ஏழு மாதங்கள் பணிபுரிந்திருக்கிறார். இக்காலகட்டத்தில் சமீனாவின் உடல் நலம் குன்றவே அந்த அரபி வீட்டார் சமீனாவை மீண்டும் முகவர் நிலையத்தில் ஒப்படைத்து விட்டார்கள்.
சுகமில்லாமல் இருந்த என் சகோதரியை அந்த முகவர் நிலைய பொறுப்பதிகாரி கண்டுகொள்ளவே இல்லை. சமீனாவை தாய் நாட்டுக்கு அனுப்பி வைக்கவோ,அல்லது வைத்தியப் பரிசோதனைக்கு உட்படுத்தவோ எந்த முயற்சியும் எடுக்காமல் மாதம் ஒரு வீடு என பணிப்பெண்கள் தேவைப்படும் தற்காலிக வீடுகளுக்கு வேலைக்கு அனுப்பியுள்ளார். சுமார் நான்கு அல்லது ஐந்து மாதங்கள் இப்படியே நகர்ந்துள்ளது. இதற்க்குரிய ஊதியத்தையும் சமீனாவுக்கு வழங்காமல் முகவர்களே அபகரித்துள்ளார்கள்.
அதன் பின் கடும் நோய்வாய்ப்பட்டிருந்த எனது சகோதரியை இரண்டாவது தடவையாக 750 குவைத் தினார்கள் வாங்கிக்கொண்டு வேறொரு அரபிக்கு வீட்டுப் பணிப்பெண்ணாக விற்பனை செய்யப்பட்டார். அந்த வீட்டுக்கு சென்ற நாள் முதல் என் சகோதரி சுகயீனமாகவே 25 நாட்களை கடத்தியிருக்கிறார். இதனை அவதானித்த அந்த அரபி வீட்டார் சமீனாவை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று மருந்தெடுத்துக் கொடுத்து மீண்டும் முகவரிடம் ஒப்படைத்து விட்டார்கள்.
நோய் முற்றிய நிலையில் நடைப்பிணமான சமீனாவால் எந்த வேலையும் செய்ய முடியாது என்று தெரிந்த பிறகே குவைத்திலிருக்கும் முபாரக் அல் கபீர் என்ற வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அந்த முகவர். சமீனாவை பரிசோதித்த டாக்டர் உடனே வைத்தியசாலையில் தங்கும்படி கூறியிருக்கிறார். இச்சந்தர்ப்பத்தில் சமீனா வைத்தியசாலையில் உள்ள தொலைபேசிமூலம் தனக்கு நெருங்கிய நண்பி ஒருவரை தொடர்பு கொண்டு தனக்கு முகவர்களால் நடந்த கொடுமைகளையும் தான் தற்போது வைத்தியசாலையில் தங்கவைக்கப் பட்டிருப்பதாகவும் முற்றுமுழுதாக சொல்லி அழுதிருக்கிறார். ஐந்து நாட்களின் பின்பே இவ்விடயம் எனக்கு தெரிய வந்தது. அவர் மூலம் விடயத்தை அறிந்த நான் உடனே புறப்பட்டு வைத்தியசாலைக்குச் சென்றேன். நான் போய்ச்சேர்ந்ததும் எனக்கு அங்கு ஒரு அதிர்ச்சி தகவல் கிடைத்தது. சற்று முன்னர்தான் உங்கள் தங்கை மரணமடைந்தார் என்றார்கள். இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹிராஜிஊன்.
எனது சகோதரி சமீனாவின் ஜனாஸா குவைத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட்டது. முகவர் நிலையத்தில் சமீனா இருந்த போது நான் பலதடவை அவரைச் சந்திக்க முயன்றும் முகவர்கள் என்னை அனுமதிக்கவில்லை. இதேவேளை எனது மூத்தசகோதரி ஒருவரும் சமீனவோடு பேச இலங்கையில் இருந்து முகவரை தொலை பேசியில் அழைத்தபோது முகவர் அலட்சியமாக தொலைபேசித் தொடர்பை துண்டித்துள்ளார். ஒரு வேளை சமீனாவை நான் சந்திக்க அனுமதித்திருந்தாலோ அல்லது இலங்கையில் இருந்து வந்த அழைப்புகளுக்கு சமீனாவை பேச அனுமதித்திருந்தாலோ எனது சகோதரியை மேல் பரிசோதனைக்கு உட்படுத்தியிருக்க முடியும். அல்லது இலங்கைக்கு திருப்பி அனுப்பி இருக்க முடியும்.
உடனே குவைத்திலிருக்கும் இலங்கையின் தூதுவராலயத்திக்கு என் நண்பர்களின் உதவியோடு என் தங்கை சமீனாவுக்கு நடந்த கொடுமையை எடுத்துச் சென்றேன். என் வாக்குமூலத்தைப் பெற்ற தூதுவர் அந்த முகவரை தூதுவராலயத்திக்கு அழைத்து விசாரித்தார். முகவரின் அலட்ச்சியதால்த்தான் இம்மரணம் நிகழ்ந்திருக்கிறது என்பதைக் கண்டறிந்த தூதுவர் இறந்து போன பெண்ணின் பிள்ளைகளுக்கு 750 குவைத் தினார்கள் முகவர் வழங்க வேண்டுமென தீர்ப்பளித்தார். விரும்பியோ விரும்பாமலோ நான் அம்முடிவுக்கு சம்மதித்தேன். தனக்கு இருபது நாட்கள் அவகாசம் வேண்டுமென முகவர் கேட்கவே அந்த காலஅவகாசம் முடிந்து மீண்டும் இங்கை தூதுவராலயத்திட்க்குச் சென்றேன். அங்கு வந்த முகவர் பணம் தரமுடியாதென தூதுவர் முன்னிலையிலேயே கூறினார். அந்தச் சிறு தொகையாவது கிடைத்தால் தாயை இழந்து தவிக்கும் இரண்டு பெண் பிள்ளைகளுக்கும் உதவியாக இருக்குமே என பலதடவை முயன்றும் என் முயற்சி தோல்வியிலேயே முடிந்தது.
ஏமாற்றம் தாங்காத நான் என் மன வேதனையை உங்களுக்கு தெரியப் படுத்துகிறேன்.
அழுது கொண்டிருக்கும் என் மன ஆழத்தில் ஆயிரம் கேள்விகள் அலை மோதுகின்றன.
1) நோயின் தாக்கத்திக்குள்ளான என் சகோதரியை வைத்திய சாலைக்கு அனுப்பாமல் முகவர் பாராமுகமாக இருந்தது ஏன்???
2) குவைத் சட்டத்தையும் மீறி மாதம் ஒரு வீடு என ஒரு நோயாளியை நான்கு மாதங்கள் வேலை வாங்கியது ஏன்??
3) குவைத் சட்டத்தில் ஒரு பணிப்பெண் ஒரு அரபி வீட்டில் மூன்று மாதங்களுக்கு மேல் வேலை செய்தால் அதன் பிறகு பணிப்பெண் முகவர் நிலையத்திக்கு திரும்பினால் அரபி முகவருக்கு கொடுத்த பணத்தை திரும்பிக்கொடுக்க வேண்டியதில்லை. இப்படி இருக்க இரண்டாவது தடவையும் என் சகோதரியை 750 குவைத் டினார்களுக்கு வேறு ஒரு அரபி வீட்டிட்கு விற்றது ஏன்?
4) நோய் அதிகமாகவே மீண்டும் முகவர் நிலையத்திக்கு திரும்பிய சமீனாவை நாட்டுக்கு அனுப்பாமல் தாமதித்தது ஏன்?
5) நஷ்ட்ட ஈடாக தூதுவர் விதித்த தொகையை தருவதாக வாக்களித்து விட்டு ஏமாற்றியது ஏன்?
6) வீட்டுப் பணிப்பெண்ணாக வரும் நம் நாட்டுப் பெண்களை நாயை விடக் கேவலமாக நடத்த இவர்களுக்கு உரிமை கொடுத்தது யார்?
7) இப்படியான முகவர்களுக்கு சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
8) இவர்களுக்கான சட்டங்களில் மாற்றம் ஏற்படுமா?
9) என் சகோதரியைப் போல் ஏராளமான சகோதரிகள் இப்படியான முகவர்களிடம் மாட்டிக்கொண்டு தவிக்கிறார்கள். இவர்களுக்கு விடிவு காலத்தை ஏற்படுத்துவது யார்?
10) மனச்சாட்சி இல்லாத இந்த முகவர்களின் முகத்திரை எப்போது கிழிக்கப்படும்?
மேலே கூறப்பட்டுள்ள எனது சகோதரி சமீனாவின் மரணம் சம்மந்தப் பட்ட அனைத்து ஆதாரங்களும் எனது கையில் உள்ளது என்பதை தெரிவித்துக்கொண்டு கொலைக்கு சமமான என் சகோதரியின் மரணத்திற்க்கு நியாயம் கிடைக்க வேண்டும். சகோதரி ரிசானாவின் மரணத்தில் அலட்சியமாய் இருந்ததுபோல் இதிலும் அலட்சியமாய் இருக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையோடு முடிக்கிறேன்.
Post a Comment