“செய்யாத தண்டனையை நான் ஏன் உம்மா பொறுப்பேற்க வேண்டும்...??
(சுஐப் எம்.காசிம்)
“அவள் மிகவும் மென்மையான உள்ளம் படைத்தவள்! பாசமாய் பறந்து திரிந்தவள். தன்னைவிட பிறரை அதிகம் நேசித்தவள்! பண்புக்கும் பரிவுக்கும் இலக்கணமானவள்! அவள் சிரச்சேதம் செய்யப்படும் அளவுக்கு ஒரு தவறை இழைத்திருப்பாளென்பதை அந்த இறைவனே ஏற்கமாட்டான்” என்று ரிசானா நபீக்கின் அயலவர்கள் மனமுருகி வருத்தம் தெரிவிக்கிறார்கள்.
“என் இரண்டு பிள்ளைகளையும் வளர்த்தவள் ரிசானா! சிறுமியாக இருந்தாலும் குழந்தைகளை தாயைப்போல் அரவணைப்பவள். அவளா பச்சிளம்பாலகனைக் கொன்றிருப்பாள். படைத்தவன் பாவம் செய்யமாட்டான்” என்று அழுதழுது கூறுகின்றார் ரிசானாவின் வீட்டுக்கு அயலில் வாழ்ந்துவரும் மாஹாத் சனூஸ்.
ரிசானா, மூதூர் ஷாபி வித்தியாலயத்தில் கல்வி கற்றவள். மென்மையான உள்ளம் கொண்டவள். சக மாணவர்களுடன் அன்பாகவே பழகுவாள். பணிவும் பரிவும் கொண்ட அவள் உதவும் பண்பை நிரம்பக் கொண்டவள். 8ம் வகுப்பில் சித்திபெற்ற ரிசானா படிப்பிலும் சுமாரான கெட்டிக்காரியாகவே இருந்தாள். அவவின் மரணம் எங்களை உருக்குலைய வைத்துள்ளது. இவ் வாறு அந்த வித்தியால யத்தில் முன்னர் கல்வி கற்பித்த ஆசிரியர் முஹ மட் ஜிஹாத் கவலையுடன் கூறுகின்றார்.
‘ஷரிஆ’ சட்டத்தை நாங்கள் விமர்சிக்க முடியாது. ஆனால் ரிசானாவின் வழக்கு தொடர்பான விசாரணை உரிய முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதே எங்கள் கவலையும் ஆதங்கமும். தான் அடித்துத் துன்புறுத்தப்பட்டு வாக்குமூலம் பெறப்பட்டதாக ரிசானாவே முன்னர் ஒரு தடவை தெரிவித்துள்ளார். வழக்கை நெறிப்படுத்தியதில் நிறைய சந்தேகங்கள் உள்ளன. ரிசானாவின் விசாரணைகளில் மொழிபெயர்ப்பாளராக இருந்தவர் ஒரு மலையாளி. பொலிஸார் அவசர அவசரமாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதை சம்பவங்கள் ருசுப்படுத்துகின்றன என்று மூதூர் மக்கள் மன்றத்தின் பிரதிநிதி ஒருவர் தெரிவித்தார்.
கொடிய வறுமை, இளமையிலேயே ரிசானாவின் வாழ்க்கையோடு விளையாடி கொலைக் குற்றவாளியாக்கி, அவளின் உயிருக்கே உலைவைத்துவிட்டது. 1988 பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி பிறந்த ரிசானா சவூதி செல்லும் போது ஆக 17 வயதே நிரம்பியவள். 1982 பெப்ரவரி 2ஆம் திகதி என திருத்தப்பட்டே அவரது கடவுச்சீட்டு எடுக்கப்பட்டுள்ளது. 2005ஆம் ஆண்டு ஏபரல் மாதம் 5ஆம் திகதி சவூதிக்கு பணிப்பெண்ணாக சென்ற இந்த பாலகி ரிசானா தனது எஜமானியின் பச்சிளங்குழந்தைக்கு பால் புகட்டியபோது குழந்தை இறக்க நேரிட்டது. அந்த துயரச் சம்பவம் சவூதி வீட்டுக்கு சென்று ஆக 17 நாட்களிலேயே அதாவது 2005 ஏப்ரல் 22ஆம் திகதியே நடந்துள்ளது. குழந்தையின் மரணத்தை அடுத்து சவூதி பொலிஸாரால் ரிசானா கைது செய்யப்பட்டார். சிறையில் அடைக் கப்பட்டார். ரிசானா சுமார் இரண்டு வருடங்கள் சிறைவாசம் அனுபவித்த விடயம் அவரது பெற்றோருக்கோ அல்லது வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கோ அல்லது அனுப்பிய முகவர்களுக்கோ தெரிந்திராமல் இருந்ததே வேதனையிலும் வேதனை.
ரிசானா சிறைக்குச் சென்று சுமார் இரண்டு வருடங்களின் பின்னர் வெளி நாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் இருந்து வந்த ஒரு கடிதமே விஷயத்தை பெற்றோருக்கும் உலகுக்கும் தெரியப்படுத்தியது.
சர்வதேச ரீதியிலே ஏகோபித்த அனுதாபத்தைப் பெற்றாள் ரிசானா. அவளது உயிரைக் காப்பாற்ற மேற்கொண்ட முயற்சிகள் அத்தனையும் தோல்விகண்டன. எல்லாமே விழலுக்கிறைத்த நீராகின.
ரிசானாவின் குடும்பம் பரம ஏழையாக இருந்தபோதும் பாசமுள்ள குடும்பம் என்பதை காலம் நிரூபித்துள்ளதை மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இந்தக் கொடிய காலப்பகுதியில் செல்வமும், வாழ்வதற்கு நல்ல வசதியான வீடும் அந்தக் குடும்பத்தை தேடி வந்தபோதும் அத்தனையையும் உதறித்தள்ளிய ரிசானாவின் பெற்றோர்கள், தன் மகளை எப்படியாவது சிறையிலிருந்து மீட்டுத்தருமாறே மனம் உருகி கேட்டனர்.
தன் மகள் மீண்டும் தம்முடன் வந்து சேர்ந்து விடுவாள் என்ற அதீத நம்பிக்கையில் வாழ்ந்த ரிசானாவின் குடும்பம் இப்போது உறைந்து போய் நிற்கின்றது. மூதூர், கிண்ணியா, கந்தளாய்ப் பிரதேசத்தில் சோகம் நீடிக்கின்றது. ரிசானாவின் சோகச் செய்தி கேட்டு நாட்டின் பல பாகங்களிலுமிருந்து மக்கள் அந்தச் சிறுகுடிசையை நோக்கி திரண்டு வருகின்றனர்.
பரோபகாரிகள் பலர் வீடமைத்துத் தருவதாகவும் வாழ்க்கை வசதிகளை ஏற்படுத்தித் தருவதாகவும் ரிசானாவின் பெற்றோர்களிடம் கூறி வருகின்றபோதும், அந்த வார்த்தையில் எதையும் அவர்கள் சட்டை செய்வதாக தெரியவில்லை. தன் மகளின் நினைவைத் தவிர அவர்களுக்கு எதுவுமே புலப்படாத ஒரு நிலையிலேயே இருக்கின்றனர். வேறு எந்தப் புலனும் இருப்பதாக தெரியவில்லை. தந்தை நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையில் கிடக்கின்றார்.
தங்கள் எதிர்பார்ப்புகள் தவிடுபொடியாகி, எல்லாமே ஏமாற்றமாகி இடிந்த ஒரு நிலையிலும் ரிசானாவின் குடும்பம் தங்கள் மகளின் குடும்பத்துக்காக உதவிய அனைத்து உள்ளங்களையும் நன்றியுடன் நோக்குகின்றனர்.
“எனது மகள் ரிசானாவை அல்லாஹ்தான் தந்தான். அவன் எடுத்துள்ளான்” என்று வேதனையால் புலம்பும் ரிசானாவின் தாய் றிபினா, 12.12.2012இலேயே தான் இறுதியாக மகளுடன் தொலைபேசியில் கதைத்தாகக் கூறினார்.
டாக்டர் கிபாயா பிள்ளையை தன் பிள்ளையைபோல பார்த்தார். டாக்டர் இறுதியாக பார்க்க சென்றபோது அவரது தொலைபேசியில் என்னை மகளுடன் தொடர்புகொள்ள வைத்தார். “செய்யாத தண்டனையை நான் ஏன் உம்மா பொறுப்பேற்க வேண்டும்” என மகள் அழுதழுது கூறினாள்.
இவ்வாறு தாயாரான றிபினா கூறினார். எப்ப உம்மா வருவேன்? என்னை எடுங்கம்மா என்றும் அழுதாள். என்றும் தாயார் தெரிவித்தார். அப்பாவியான ரிசானா தான் செய்யாத குற்றமொன்றுக்காக அநியாயமாக மரணதண்டனைக்கு ஆளாகி விட்டார் என்பதே ஒட்டுமொத்த கவலையாகும்.
இந்திய தமிழர்களுக்கு கூட ,,இலங்கை தமிழை புரிந்து கொள்வது கடினம் ...ரிசானாவின் மொழிபெயர்ப்பாளர் ஒரு மலயாளியாம் [ கேரளா காரர் ] இவனுக்கு எப்படி ரிசானாவின் தமிழ் புரிந்திருக்கும் ?????????????????
ReplyDeleterisana sahodari welai seyda weetu urimaiyalar manitha thanmai illada miruha kunam udaiyawarhal.. awarhal mannippu kodukka willai... nalai marumaiyil awarhadu paawangalai um allah mannikkawe mattan... ulaha makkalin kannil kanneerai niraitta anda paavihalukku allahwin safam undahattum...
ReplyDelete