தெரு நாய்களிடம் பாடம் கற்றுக்கொள்ள தயாராகும் ருமேனியர்கள்..!
சாலைகளில், சிக்னல்களை எப்படி மதிக்க வேண்டும் என, தெரு நாய்களிடமிருந்து, ஒவ்வொருவரும் கற்றுக்கொள்ள வேண்டும் என, கூறும் ருமேனிய நாட்டின் போலீசார், அவற்றை வைத்து மனிதர்களுக்கு சாலை விதிகளை பற்றிய விழிப்புணர்வு பயிற்சிகளை அளிக்க உள்ளனர். ருமேனிய தலைநகர் புக்காரெஸ்ட் நகரில், சாலை விபத்துகளில் சிக்கி, ஏராளமான பாதசாரிகள் மரணமடைகின்றனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைகின்றனர்.
"ஜீப்ரா கிராசிங்'குகளில், சிவப்பு விளக்கு எரிந்தாலும், அவற்றை மதிக்காமல், தங்கள் விருப்பம்போல் சாலையை கடந்தவர்கள்தான் இவ்வாறு, விபத்தில் சிக்கிக் கொள்கின்றனர்.அதே நேரத்தில், அந்நாட்டின் தெரு நாய்கள், மனிதர்களுடன் சென்றாலும் சிவப்பு விளக்கு எரிந்தால், ஒரு அடி கூட நகருவதில்லை. அங்கேயே நின்று வேடிக்கை பார்க்கின்றன. பச்சை விளக்கு எரியும்போது, சர்வ சாதாரணமாக சாலையை கடந்து செல்கின்றன.
இவ்வாறு நாய்கள், சாலையை கடந்து செல்வதை, ருமேனியாவின் பல்வேறு நகரங்களில் காணடிந்தது. இவற்றை, "டிவி'யிலும் ஒளிபரப்பி, தெரு நாய்கள் சிக்னல்களை மதிக்கும்போது, நம்மால் முடியாதா என்ற வாசகங்களையும் இடம் பெற செய்துள்ளனர்.இதுகுறித்து, ருமேனியாவின் போக்குவரத்து போலீஸ் அதிகாரி லூசியன் தினிடா கூறுகையில், ""பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகளை விலங்குகளும் பின்பற்றுகின்றன என்ற ஒரு அரிய தகவல், மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ளதாககவும், படிப்பினையாகவும் இருக்கும் என, நம்புகிறேன்'' என்றார்.
தனியார் நிறுவனத்தின் இயக்குனர் செமிடா துரிகா என்பவர் கூறியதாவது:கடந்த ண்டு மட்டும், 360 பேர் சாலை விபத்தில் இறந்தனர்; 1,200 பேர் படுகாயமடைந்தனர். சிவப்பு விளக்கு எரிந்தால், அந்த இடத்திலேயே நிற்கும் தெரு நாய்கள், கார்களுக்கு வழிவிடுகின்றன.பின், பச்சை விளக்கு எரிந்தால், சாலையைக் கடக்கின்றன. தெரு நாய்கள், மனிதர்களைப் போல் படிப்பறிவு பெற்றிருக்கவில்லை என்றாலும் அவை, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்றுபவையாக இருக்கின்றன. இவற்றிலிருந்து மனிதர்கள் நிறைய கற்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
Post a Comment