ஈராக்கில் விதவைகளை திருமணம்செய்ய பணமும், காரும் பரிசு - இஸ்லாமியவாதிகள் எதிர்ப்பு
(Tho) ஈராக்கில் விதவைகள் மற்றும் விவாகரத்து ஆன பெண்களை திருமணம் புரிபவர்களுக்கு சிறப்பு பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. ஐந்து மில்லியன் ஈராக் தினாரும், ஒரு காரும் விதவைகளை திருமணம் புரிபவருக்கு பரிசாக அளிக்கப்படுகிறது. ஷபாப் ஸகாஃப் வல் பினாஅ என்ற அமைப்பு பரிசை அறிவித்துள்ளது.
ஈராக்கில் அதிகரித்து வரும் விதவைகளின் எண்ணிக்கை மூலம் சமூக சூழலில் உருவாகும் சமச்சீரற்ற நிலைமைக்கு பரிகாரம் காணவே இவ்வமைப்பு பரிசை அறிவித்துள்ளது. ஆனால், இவ்வறிப்புக்கு இஸ்லாமியவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குடும்ப உறவுகளை சிதிலமாக்கவும், தகர்க்கவும் இது காரணமாகும் என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர்கள் கூறியிருப்பது,,
பணத்தையும், காரையும் விரும்பும் தவறான நபர்களிடம் விதவைகள் பாதுகாப்பை ஒப்படைக்க இயலாது. அதுமட்டுமல்ல நமது பரிசுத்தமான அன்னையரை இவ்வாறு சந்தேகிக்க கூடாது. அவர்களின் கணவன்மார்கள் நாட்டிற்காக உயிரை தியாகம் செய்திருப்பார்கள் என்றால் அவர்கள், கணவர்களின் பரிசுத்தத்தை பேணி பாதுகாக்க திறன் உடையவர்களே. அவர்கள் இளைஞர்களை விரும்புகின்றார்கள் என்பது தவறான எண்ணமாகும். விதவைகளை பாதுகாப்பதும், பரிபாலிப்பதும் இஸ்லாமிய சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும். பணத்தையும், காரையும் கொடுத்து அதனை பிறருடைய தலையில் வைத்து கட்டிவிட்டு நழுவ சமுதாயத்தால் இயலாது. ஈராக் விதவைப் பெண்களை திருமண முடிக்க நமது இளைஞர்கள் பணத்தையும், செல்வத்தையும் கேட்கின்றார்கள் என்பதும் தவறான எண்ணமாகும்.
ஆகையால் இவ்வாறு பரிசு அறிவிப்பது முற்றிலும் தவறானதாகும்.அதனை உடனே வாபஸ் பெறவேண்டும் என்று இஸ்லாமியவாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Post a Comment