இந்தியா என்றால்...!
புதுடெல்லியில் ஓடும் பஸ்சில் கற்பழிக்கப்பட்டு, சிங்கப்பூரில் உயிரிழந்த மாணவியுடன் சம்பவம் நடந்த பஸ்சில் உடன் வந்த ஆண் நண்பர், நீண்ட நாட்களுக்குபின் நேற்று முதன்முறையாக மவுனம் கலைத்துள்ளார். சாஃப்ட்வேர் என்ஜினீயராக உள்ள அந்த இளைஞர், தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி நேற்று ஒளிபரப்பானது.
அந்த பேட்டியில் அவைந்திரா பிரதாப் பாண்டே (28) கூறியதாவது:- அந்த கொடுமையை நான் எப்படி சொல்வேன்? என் கண்களால் நான் கண்ட கொடுமையை யாரும் எப்போதும் பார்க்க நேரிடக் கூடாது. பஸ்சில் இருந்தவர்களுடன் போராடி அந்தப் பெண்ணை மீட்க முயற்சித்தேன்.
அந்த பஸ்சின் டிரைவர், கிளீனர் தவிர, இதர 4 பேரும் பயணிகள் போல் மிக சாதாரணமாக அமர்ந்திருந்தனர். நாங்கள் கிளீனரிடம் பஸ் கட்டணமாக ரூ.20 தந்தோம். பஸ் சிறிது தூரம் சென்றதும், அந்த 4 பேரும் என் தோழியை கேவலமாக விமர்சித்து கேலி செய்தனர். அவர்களை நான் தட்டிக்கேட்டதால், எங்களுக்குள் கைகலப்பு ஏற்பட்டது. அவர்களில் 3 பேரை நான் அடித்துவிட்டு, கட்டிப்புரண்டுப் போராடிக்கொண்டிருந்தபோது, ஒருவன் இரும்புக் கம்பியால் என்னை தாக்கினான். நான் மயக்கமடைந்து விழுவதற்கு முன், அந்த பெண்ணை அவர்கள் இழுத்துக்கொண்டு போனார்கள்.
நாங்கள் பஸ் ஏறிய பிறகு சுமார் 2 1/2 மணி நேரத்திற்கு டெல்லியை சுற்றிச்சுற்றி வந்தார்கள். நாங்கள் கூச்சல் போட்டோம். ஆனால், பஸ்சின் உள் விளக்குகளை அவர்கள் அனைத்துவிட்டனர். என் தோழி '100'க்கு போன் செய்ய முயற்சித்தாள். அவளது செல்போனை அவர்கள் பறித்துக்கொண்டனர். அவர்களுடன் அந்தப் பெண்ணும் தன்னை காப்பாற்றிக்கொள்ள கடுமையாக போராடினாள்.
எனக்கு மயக்கம் தெளிந்தபோது, எனது செல்போனையும் பறித்துக்கொண்டு, எங்கள் ஆடைகளை கிழித்து, நிர்வாணப்படுத்தி, பஸ்சில் இருந்து எங்களை கீழே உருட்டித் தள்ளினார்கள். எங்கள் மீது பஸ்சை ஏற்றி நசக்கிக் கொல்லவும் அவர்கள் முயற்சித்தனர். ஆனால், கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்த பெண்ணை இழுத்துக்கொண்டு நான் உருண்டு உயிர் பிழைத்தேன்.
உடலில் துணியில்லாமல், நாங்கள் 20 நிமிடத்துக்கும் மேலாக, சேறும் சகதியுமாக இருந்த வெறுந்தரையில் உதவிக்காக தவித்துக்கொண்டிருந்தோம். அந்த வழியாக நிறைய கார்களும், ஆட்டோ ரிக்ஷாக்களும் சென்றன. ஆனால், யாரும் எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. 3 போலீஸ் ரோந்து வாகனங்கள் அந்த வழியாக வந்தன. அவர்களுக்கும் எங்கள் குரல் எட்டவில்லை. ஆஸ்பத்திரியில் கூட, குளிரில் நடங்கிக்கொண்டிருந்த எங்களுக்கு ஒரு போர்வையை தரக்கூட யாரும் முன்வரவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Post a Comment