முஸ்லிம்களுடன் விரைவில் பேச்சுவார்த்தை - ஜனாதிபதி மஹிந்த அறிவிப்பு
அமெரிக்க உயரதிகாரிகளின் வருகை திடீரென இடம்பெற்ற தொன்றல்ல. வெளிவிவகார அமைச்சு மட்டத்தில் நீண்டகாலத்துக்கு முன்பே ஏற்பாடு செய்யப்பட்ட விஜயமாகும். வெளிநாட்டுப் பிரதிநிதிகள் வருகிறார்கள். போகிறார்கள். யுத்த காலத்திலும் அவர்கள் வந்து போனார்கள் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று மாலை பத்திரிகைகளின் ஆசிரியர்கள், இலத்திரனியல் ஊடகங்களின் பிரதானிகளுடனான சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
பிரதம நீதியரசர் சிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிரான குற்றப் பிரேரணை நிறைவேற்றப்பட்டு அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் அமெரிக்க உயரதிகாரிகளின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததொன்றாக அமைந்துள்ளதா ? என்று கேட்கப்பட்டபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
அதேவேளை நாட்டில் மதப் பூசல்கள் தலைதூக்கியிருப்பது பற்றி வெளிநாட்டு ஊடகங்களில் அதிகளவுக்கு செய்திகள் வெளியாகியிருப்பது பற்றி கேட்கப்பட்ட போது கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி,
அந்த விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படும் குழுவொன்றை அழைத்துப் பேசினேன். இந்த விடயம் மிகவும் உணர்வு பூர்வமான பிரச்சினை. மதச் சுதந்திரம் சகலருக்கும் உள்ளது. எந்த மதத்தவர்களாக இருந்தாலும் சகலரினதும் மத உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது அவசியம். நான் அழைத்துப் பேசிய குழுவினர் தாங்கள் பிரச்சினையில் ஈடுபட்டதாகச் சொல்லவில்லை. அடுத்து முஸ்லிம் குழுவையும் அழைத்துப் பேசவுள்ளேன். எந்த மதமாக இருந்தாலும் அதனை நிந்திக்கும் விதத்தில் செய்திகளையோ, கட்டுரைகளையோ, கேலிச்சித்திரங்களையோ பிரசுரிக்க வேண்டாம். இன, மதப் பூசல்களுக்கு இடமளித்தால் மோசமான நிலைமைக்கு நாடு சென்றுவிடும். நாட்டின் முன்னேற்றத்தையே பார்க்க வேண்டும். எமக்கென ஒரு கலாசாரம் இருக்கிறது. ஐரோப்பியர் வருகையின் பின்னரும் கூட அந்தக் கலாசாரம் அழிந்து விடாமல் மக்கள் மனங்களில் இருந்துவருகிறது என்று ஜனாதிபதி கூறினார்.
தேசிய கீதப் பிரச்சினை
தேசிய கீதத்தை சிங்களம், தமிழ் ஆகிய இரு மொழிகளிலும் இணைத்துப் பாட யோசனை ஒன்றை முன்வைத்துள்ளதாக அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்திருந்தமை தொடர்பான கேள்விக்கு பதிலளித்த ஜனாதிபதி, இல்லாத பிரச்சினையை உருவாக்க முயற்சிக்கிறீர்களா ? என்று பதில் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் வாசுதேவ, கெஹலிய ரம்புக்வெல்ல ஆகியோர் இது தொடர்பாக கருத்துத் தெரிவித்திருந்தார்களே என்று கேட்கப்பட்ட போது, என்னுடைய கருத்தையும் கேட்டு பிரச்சினையை எழுப்பப் போகிறீர்களா ? என்று கேட்ட ஜனாதிபதி, இவ்வாறு கருத்துத் தெரிவிப்பது அரசாங்கத்திலுள்ள ஜனநாயகம். வாசுதேவ கூறியது அவரின் கருத்தாகும். சிங்கப்பூரில் தேசிய கீதம் மலே மொழியில் இருக்கின்ற போதிலும் சீன மொழியிலும் பிறிதொரு மொழியிலும் பாடுவதற்கான ஏற்பாடு அரசியல் யாப்பில் உள்ளது. இந்த விடயத்தை நல்லிணக்க ஆணைக்குழு முன் கருத்துத் தெரிவித்த அரச சார்பற்ற தொண்டர் நிறுவனமொன்று குறிப்பிட்டிருந்தது. இது இல்லாததொரு பிரச்சினை என்று ஜனாதிபதி கூறினார்.
பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணை
பிரதம நீதியரசர் மீதான குற்றப் பிரேரணை தொடர்பாக கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, இந்த விவகாரத்தால் பாதிப்பு எதுவும் இல்லை. நன்மைதான் ஏற்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டை முதலில் முன்வைத்தவர்கள் ஐ. தே. க. வினரும் ஜே. வி. பி. யினருமேயாவர். நீதிபதி ஒருவர் இருக்கிறார். அவரின் கணவர் இருக்கிறார். முறைகேடாக அவர்கள் செயற்படுகின்றனர் என்ற எதிரணியினரின் குற்றச்சாட்டு தொடர்பாக ஊடகங்கள் உருவாக்கிய கருத்தீட்டிற்கே அரசு ஒத்துழைப்பு வழங்கியது. அரசியலமைப்பின் பிரகாரம் பாராளுமன்றம் நிறைவேற்றிய குற்றப் பிரேரணைக்கு நான் மனச்சாட்சியின் பிரகாரமே அங்கீகாரம் வழங்கினேன். அரசிலமைப்பின் பிரகாரம் சிற்சில குறைபாடுகள் இருப்பது இப்போது வெளியாகியுள்ளன. எதிர்காலத்தில் அவை தொடர்பாக பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால் இப்போது இருப்பதைத்தானே செய்ய முடியும்.
இலங்கையில் மட்டுமன்றி உலகநாடுகளிலும் இத்தகைய நடைமுறைகளே உள்ளன. எதிரணியினர் இப்போது விமர்சிக்கின்றனர். எதிரணியில் இருந்தால் நாங்களும் இதனையே செய்திருப்போம். எமது கலாசாரம் இப்படியாக காணப்படுகிறது. இதில் மாற்றம் வேண்டும். குறுகிய நோக்கம் கூடாது. இந்த விடயத்தை விற்பனை செய்யவும் குழுவொன்று இருக்கிறது. அக்குழு எப்போதுமே இது தொடர்பாக எழுதிக்கொண்டே இருக்கும். சில நாடுகள் இங்கு வருவதில்லை என்று கூறுகின்றன. அந்த நாடுகள் எமக்கு எதிராக அன்றும் இருந்தன. இன்றும் இருக்கின்றன என்று ஜனாதிபதி கூறினார்.
அரசியலமைப்பு
அதே வேளை நீதி, நியாயமான அரசியல் அமைப்பு என்று உலகில் எங்கும் இல்லை. அவ்வப்போது அரசியலமைப்புகளில் திருத்தங்களும் மாற்றங்களும் கொண்டுவரப்படுவது இயல்பானதே என்றும் அவர் குறிப்பிட்டவேளை அரசியலமைப்பில் மாற்றம் அல்லது திருத்தம் கொண்டுவரப்படுமா என்று ஜனாதிபதியிடம் வினவப்பட்டது.
அதற்காகத்தானே பாராளுமன்றத் தெரிவுக்குழுவை நியமித்தேன். ,அக்குழு தொடர்பான செயற்பாடுகள் பாராளுமன்றத்தைப் பொறுத்த விடயம். எல்லாவற்றையும் நானே செய்தால் ஜே.ஆரை சிறியதாகவும் என்னை பூதாகாரப்படுத்தியும் அரசியலமைப்பு தொடர்பாக கேலிச்சித்திரம் வரைவார்கள். தெரிவுக்குழுவில் எதிரணியினர் பங்கேற்க வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
விவாகப் பதிவுக் கட்டணம்
விவாகப் பதிவுக் கட்டணம் 5 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டிருப்பது தொடர்பாக கருத்து தெரிவித்த ஜனாதிபதி, இந்தக்கட்டணம் தொடர்பாக ஆதிவாசிகளுக்கு(வேடுவர்) கட்டணம் அறவிடுவதை முழுமையாக நீக்குமாறு கூறியிருப்பதாகவும் ஆனால் நட்சத்திர ஹோட்டலில் திருமணப்பதிவு செய்வோருக்கு 50 ரூபா பதிவுக்கட்டணமாக அறவிடுவது பொருத்தமானதா என்றும் கேள்வி எழுப்பினார். எனினும் பதிவாளரிடம் நேரடியாகச் சென்று விவாகப்பதிவு மேற்கொள்வோருக்கு கட்டணம் தொடர்பாக நியாயமான முறைமையைக் கையாளுமாறு அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஜனாதிபதி கூறினார்.
Post a Comment