இலங்கை பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டியதில்லை - மௌலவி முபாறக்
இலங்கைப்பெண்கள் வேலைக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்வதை தடைசெய்ய வேண்டும் என்ற ஜாதிக்க ஹெல உறுமய பாராளுமன்ற உறப்பினர் அத்துரலிய ரத்ன தேரரின் கருத்தை முஸ்லிம் உலமா கட்சி வரவேற்கும் அதே வேளை புத்தர் சிலையொன்றை வைத்திருந்தால் கையை வெட்டும் காட்டு மிராண்டித்தனமான சட்டம் சஊதியில் நிலவுவதாக கூறியிருப்பது சஊதி சட்டங்கள் பற்றிய அவரது அறியாமையையே காட்டுகிறது என உலமா கட்சித்தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்துள்ளர். இது பற்றி அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் இவ்வாறு இஸ்லாமிய சட்டங்கள் பற்றி பிழையாக கருத்துக்கூறும் போது எமது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்மூடி மௌனமாய் சரணம் போட்டது கவலை தருவதாகும். இஸ்லாமிய மார்க்கம் பற்றியோ, அதன் சட்டங்கள் பற்றியோ தெரியாத 'மேதை'களை பாராளுமன்றத்துக்கு அனுப்பிய முஸ்லிம்களைத்தான் முதலில் நொந்து கொள்ள வேண்டியுள்ளது.
பொதுவாக ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொருவிதமான சட்டங்கள் உலகில் நடைமுறையில் இருப்பதை காண்கிறோம். ஒரு நாட்டில் தடைசெய்யப்பட்டுள்ள விடயம் இன்னொரு நாட்டில் அனுமதிக்கப்படுவதை காண்கிறோம். ஒரு நாட்டிலிருந்து இன்னொரு நாட்டுக்கு செல்லும் ஒருவர் அந்த நாட்டின் சட்டங்களை மதிக்க வேண்டும் என்பது சர்வதேச நியதியாகும்.
இந்த வகையில் சிலையை வணங்குவது இலங்கையில் அனுமதிக்கப்பட்டதாக இருப்பினும் சஊதியில் அது தடை செய்யப்பட்ட ஒன்றாக உள்ளது. சஊதியில் சிலை வைத்திருந்ததற்காக கைவெட்டப்படும் என்ற சட்டம் இல்லை. மாறாக அவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்படுவதோடு கசையடியும் வழங்கப்படுவார். இதனை காட்டுமிராண்டித்தனம் என விமர்சிப்பதை விடுத்து அது சஊதி அரேபிய நாட்டின் சட்டம் என்பதையும் அதனை இலங்கையிலிருந்து செல்வோர் மதிக்கப்பழகிக்கொள் வேண்டும் என்பதையும் நாட்டு மக்களுக்கு கூறுவதே புத்தியுள்ளவர்கள் செயலாகும்.
இதே போல் சஊதியிலிருந்து இலங்கைக்கு வரும் ஒருவர் தமது நாட்டில் சிலைகளை கண்டால் உடைக்க அனுமதியுண்டு எனக்கூறி இலங்கையில் சமய சிலைகளை உடைத்தால் இலங்கையின் சட்டம் அவரை சும்மா விடுமா? அவரை பிடித்து சிறையில் அடைக்கப்பட்டால் ஒரு சிலையை உடைத்ததற்காக இவ்வாறு இலங்கையில் சிறைத்தண்டனை வழங்குவது காட்டுமிராண்டித்தனமான செயல் என சஊதியில் உள்ளோர் கூறினால் அதனை இலங்கையரான நம்மால் பொறுத்துக்கொள்ள முடியுமா என சிந்திக்கும்படி கேட்கின்றோம்.
அதே போல்; இலங்கையில் திருமணமான ஓர் ஆண் வேறொரு பெண்ணுடன் இருவரும் விரும்பி தகாத உறவு வைத்துக்கொண்டால் அவர்கள் தண்டிக்கப்படுவதில்லை. இதுவே சஊதியின் இஸ்லாமிய சட்டத்தின் படி விருப்பத்துடனோ விருப்பமின்றியோ நடைபெற்றாலும் அவர்கள் மரண தண்டனை விதிக்கப்படுவர். இலங்கையிலிருந்து அந்நாட்டுக்கு செல்பவர் எமது நாட்டில் இதற்கு அனுமதி உள்ளது என கூறி இச்செயலில் ஈடுபட்டு தண்டிக்கப்பட்டால் அதனை காட்டுமிராண்டித்தனம் என கூற முடியுமா?
ஆக ஒரு நாட்டின் சட்டங்கள் என்பன அந்த நாட்டின் சமயம், கலாச்சார பண்பாடுகள், மக்கள் நன்மை கருதி அந்நாட்டினரால் நடைமுறை படுத்துவதாகும். நமது நாட்டுக்கு வரும் ஒரு சஊதிக்காரர் எமது நாட்டின் சட்ட திட்டங்களை அவர் மதிக்க வேண்டும் என நாம் விரும்புவது போல் சஊதிக்குச்செல்லும் ஒருவர் அந்நாட்டு சட்டங்களை மதிக்க வேண்டும் என அவர்கள் எதிர் பார்ப்பது எந்த வகையிலும் தவறாகாது. ஆகவே எதையும் ஆராயாது எழுந்தமானத்தில் பேசுவதனை விடுத்து நமது நாட்டு மக்கள் பிற நாட்டுக்கு சென்றால் அந்நாட்டின் சட்டங்களை மதிப்பதற்கான நாகரிகத்தை மதிப்புக்குரிய பாராளுமன்ற உறப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் போன்றோர் மக்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டும் என முபாறக் மௌலவி தெரிவித்துள்ளார்.
மிக அழகான முறையில் சொல்லிய முபாரக் அப்துல் மஜீத் அவர்களின் இந்த வழிமுறையை முஸ்லிம் பா.ம.சொதப்பினர்கள்(உறுப்பினர்கள்) பின்பற்றினால் நன்றாக இருக்குமோ?! எனக்கு ஒரு சந்தேகம் அக்குறணையில் இருந்து ஐ.தே.க. மூலம் ஒரு முஸ்லிம் உறுப்பினர் உண்டு பாராளமன்றம் சென்று வருகிறாரா?தெரிந்தவர்கள் அறியத்தரவும்.!அத்துடன் அவருடைய பழைய போட்டோக்களையாவது இங்கு பிரசுரித்து ஒரு விளம்பரம் கொடுக்கலாமே?
ReplyDelete