அட்டாளைச்சேனை வெள்ளப்பாதிப்புக்கள் - அரசாங்க அதிபர் ஆராய்வு (படங்கள்)
(அறூஸ், ஏ.எல்.றமீஸ், எம்.ஐ.எம்.பைஸல்)
அட்டாளைச்சேனை பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பாதிப்புக்களை பார்வையிட நேற்று மாலை 2013-01-25 வருகைதந்த அம்பாரை மாவட்ட அரசாங்க அதிபர் நீல் டி அல்விஸ் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச செயலாளர் ஐ.எம்.ஹனிபா ஆகியோருடன் பாதிப்புக்கள் தொடர்பாகக் கேட்டறிந்தார்.
இதன்போது பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடியாக சமைத்த உணவுகளையும், உலர் உணவுகளையும் வழங்கவேண்டும் என்று மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம்.நஸீர் அரசாங்க அதிபரிடம் வேண்டுகோள் விடுத்தார். உடனடியாக அதற்குரிய ஏற்பாடுகளைச் செய்யுமாறு அரசாங்க அதிபர் அட்டாளைச்சேனை பிரதேச செயலாளரைப் பணித்ததோடு, வெள்ளம் வடிந்தோடுவதற்குரிய நடவடிக்கைகளை செய்யுமாறும் கூறினார்.
இதேவேளை, மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.எம். நஸீர், அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில், பிரதேச சபை உறுப்பினர்களான எஸ்.எல்.முனாஸ், ஏ.எஸ்.உவைஸ், பாலமுனை மத்தியகுழு செயலாளர் சதாத் ஆகியோர் 15ம், 16ம் பிரிவுகளில் வெள்ள நீர் உட்புகுந்த வீடுகளுக்குச் சென்று பார்வையிட்டனர்.
அத்தோடு, நீர் வடிந்தோடுவதற்காக இயந்திரங்களைக் கொண்டு தற்காலிக வடிகான் வசதிகள் ஏற்படுத்தப்பட்டது. மக்களை பாதிப்புக்களிலிருந்து பாதுகாப்பதற்காக பிரதேச சபை முழுப்பங்களிப்பினையும் செய்து வருவதாக பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.அன்ஸில் தெரிவித்தார்.
Post a Comment