Header Ads



ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க படைகள் வெளியேறுமா..?



(Peter Symonds)

2014ல் ஆப்கானிஸ்தானில் நேட்டோ நடவடிக்கைகளுக்கான காலக்கெடு முடியும் நேரம் நெருங்குகையில், ஒபாமா நிர்வாகம் அங்கு காலவரையறையற்ற வருங்காலத்திலும் தொடர்ந்த அமெரிக்க இராணுவ பிரசன்னத்திற்கு தயாராகி வருகிறது. நியூ யோர்க் டைம்ஸ் தகவல் கொடுத்துள்ள இத்திட்டங்கள், அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பின் புதிய சூறையாடல் மற்றும் நவகாலனித்துவ முறையின் தன்மையை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன. 

டைம்ஸ் கூற்றுப்படி, ஆப்கானிஸ்தானில் அமெரிக்க உயர் தளபதியாக இருக்கும் ஜெனரல் ஜோன் ஆலென் 2014 இன் முடிவில் “போரில் ஈடுபடும் துருப்புக்கள்” திரும்பப் பெறப்படல் என்பதற்குப் பின் பென்டகனுக்கு மூன்று விருப்பங்களைக் கொடுத்துள்ளார். ஒன்று, அமெரிக்கத் துருப்பு அளவை 6,000ல் தக்க வைத்தல், மற்றொன்று 10,000 சிப்பாய்களை நிறுத்தி வைத்தல் மற்றும் மூன்றாவது 20,000 துருப்புக்களை அடிப்படையாகக் கொள்ளல்.

பெயரிடப்படாத பாதுகாப்புத் துறை அதிகாரிகள் விளக்கியுள்ளபடி, இந்த மூன்று திட்டங்களுக்கும் மையமாக இருப்பது “எழுச்சியாளர்களை வேட்டையடும் திறமையுடைய சிறப்பு நடவடிக்கை கமாண்டோக்கள்” தொடர்ந்து நிலைப்பாடு கொள்வது ஆகும். கூடுதலான அமெரிக்கப் படைகள் ஆப்கானியப் பாதுகாப்புப் படைகளுக்கு ஊக்கம் தரும் வகையில் வான் ஆதரவு, தளவாடங்கள் அளித்தல், பயிற்சி கொடுத்தல் ஆகியவற்றில் ஈடுபடும்.

இவை அனைத்துமே “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற போலிக்காரணத்தைக் காட்டி நியாயப்படுத்தப்படுகின்றன; உண்மையில்,12 ஆண்டுகளுக்கும் மேலாக இடையறாத குருதிக்களரி நிறைந் போரைக் கண்டுள்ள ஆப்கானிஸ்தான், இப்பிராந்தியம் முழுவதும் அமெரிக்கச் செல்வாக்கை காட்டும் செயற்பாட்டுத் தளமாக சேவைசெய்துள்ளது.

ஜனாதிபதி ஒபாமா ஏற்கனவே போரை “ஆப்-பாக் போர்” என்று மாற்றியுள்ளார்; அண்டை பாக்கிஸ்தான் நாட்டிற்குள் டிரோன் தாக்குதல்களை விரிவாக்கியுள்ளார். ஈரானுக்கு எதிரான போரின் முன்னேற்றகரத் திட்டங்களில் ஆப்கானிஸ்தான் சந்தேகத்திற்கு இடமின்றி முக்கிய கூறுபாடு ஆகும்; இதைத்தவிர, அமெரிக்க திட்டமிடல், சூழ்ச்சிகள் என்று மத்திய ஆசியக் குடியரசுகளில் அது நடத்துவதற்கு வசதியான முன்னிலைப் பகுதியும் ஆகும்.

ஓர் அமெரிக்க அரைக்காலனித்துவ நாடாக ஆப்கானிஸ்தானை பராமரித்தல் என்பது ஆப்கானிய ஜனாதிபதி ஹமித் கர்சாயியின் வெற்றுத்தன ஆட்சிக்கு முட்டுக் கொடுத்தல் என்று பொருளாகும். அமெரிக்க சிறப்புப் படைகளிலுள்ள துருப்புக்கள் ஏராளமானவர்களை நிறுத்தி வைத்திருப்பதின் உண்மை நோக்கம் வெளிநாட்டு ஆக்கிரமிப்பிற்கு ஆழ்ந்த விரோதப் போக்கு காட்டும் குடிமக்களை மிரட்டி அச்சுறுத்துவதுதான். “பச்சை நீலத்தைத் தாக்கும்” என அழைக்கப்படும் நிகழ்வுகள் பெருகியிருப்பது —ஆப்கானிய துருப்புக்களும் பொலிசாரும் வெளிநாட்டுத் துருப்புக்களை நோக்கி தங்கள் துப்பாக்கிகளை திருப்புவது— தொடர்ந்த அமெரிக்க ஆக்கிரமிப்பிற்கு உள்ள பரந்த சீற்றம் மற்றும் விரோதப் போக்கை சுட்டிக் காட்டுகிறது.

2014க்குப் பின் அமெரிக்க இராணுவ நிலைப்பாடு குறித்த விவரங்கள் பற்றி இந்த வாரம் வாஷிங்டனில் ஒபாமாவிற்கும் கர்சாயிக்கும் இடையே பேச்சுக்களை நடத்துவது பற்றித்தான் ஆலெனுடைய திட்டங்களின் தயாரிப்பு ஆகும். செய்தி ஊடகத்தில் அளித்துள்ளபடி, இரு இறைமை பெற்ற நாடுகளுக்கு இடையே பேச்சுக்கள் நடத்தப்படும். இது உண்மையை அபத்தமாகவும், கொடூரமாகவும் சிதைத்துச் சித்தரிப்பதற்கு ஒப்பாகும்.

கர்சாய் மற்றும் அவருடைய அரசாங்கம் முற்றிலும் வாஷிங்டனை நம்பிய தன்மையில் இருப்பவை. நாட்டின் பொருளாதாரம் சர்வதேச உதவியை நம்பியுள்ளது. முற்றிலும் வெளிநாட்டு இராணுவ ஆதரவை நம்பியிருக்கும் ஆப்கானிய பாதுகாப்புப் படைகள் அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளால் விலைக்கு வாங்கப்படுகின்றன. சமீபத்திய பென்டகன் பரிசீலனைப்படி, ஆப்கானிய இராணுவத்தின் 23 உயர்பிரிவுகளில் ஒன்றுதான் சுதந்திரமாகச் செயல்பட முடியும்.

அமெரிக்க துருப்புக்களுக்கும் அதிகாரிகளுக்கும் 2014க்குப் பின் ஆப்கானிய சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களில் இருந்து பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று ஒபாமா நிர்வாகம் வலியுறுத்துகிறது. ஆப்கானிஸ்தானில் நிலையான இராணவத் தளங்களை தான் கோராது என்று அமெரிக்கா அறிவித்துள்ளது. ஆனால் அமெரிக்க அதிகாரிகளின் முழுச் செயற்பாட்டுச் சுதந்திரம் கொண்டுள்ள கூட்டு நிலையங்கள் பென்டகனுடைய நோக்கங்களை நிறைவேற்றும் வகையில்தான் இருக்கும்.

அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் தங்கள் நலன்களுக்கு உதவும் ஆப்கானிய இராணுவத்திற்கு நிதி அளிக்கத் தயாராக உள்ளன ஆனால் கைப்பாவை ஆட்சியின் நிலைமைக்கு ஏற்றம் தருவதற்கு அல்ல.

21ம் நூற்றாண்டு நவகாலனித்துவ முறைக்கு ஆப்கானிஸ்தான் ஒரு பரிசோதனைக் களமாக உள்ளது. இந்த ஆக்கிரமிப்பு, வாஷிங்டன் தன் பொருளாதார மற்றும் மூலோபாய மேலாதிக்கத்தை எரிசக்தி செழிப்புடைய மத்திய கிழக்கு, மத்திய ஆசியாவில் விரிவாக்க முற்படுகையில் ஈராக், லிபியா மற்றும் இப்பொழுது சிரியாவில் அமெரிக்க தலைமையிலான செயலகளுக்கு வடிவமைப்பைக் கொடுத்துள்ளது.

அமெரிக்க இராணுவ மற்றும் உளவு நிறுவனங்கள் மிரட்டுதல், பயங்கரவாதம் மற்றும் படுகொலைகளை விரோதப் போக்குடைய மக்களுக்கு எதிராகப் பயன்படுத்துவதில் தேர்ந்துவிட்டன; உள்ளூர் கைக்கூலிகள், முகவர்களை விலைக்கு வாங்குவதிலும் தேர்ச்சி பெற்றுள்ளன; பழங்குடி, இனவழிப் போட்டிகளைத் திரித்தல், உரிய முறையில் வளைந்து கொடுக்கும் அரசாங்கங்களை நிறுவவும் தக்க வைக்கவும் தேர்ச்சி கொண்டுள்ளன. தொழில்நுட்பம் இன்னும் நவீனமாக இருக்கிறது என்றாலும், உத்திகள் 19ம் நூற்றாண்டு ஐரோப்பிய காலனித்துவகையைப் பெரிதும் ஒத்துள்ளன.

லிபியாவிலும் சிரியாவிலும் அமெரிக்கத் தலையீடுகள் “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பதின் போலித்தன்மையை அம்பலப்படுத்தியுள்ளன; அதுதான் முதலில் ஆப்கானிஸ்தானத்தில் அமெரிக்கப் படையெடுப்பிற்கு போலிக் காரணமாக இருந்தது. லிபிய, சிரிய அரசாங்கங்களை அகற்றுவதற்கு பென்டகனும் CIA யும் சுன்னி இஸ்லாமிய அடிப்படை வாதிகளை அதிகம் நம்பின; இவற்றுள் அல்குவேடாவுடனான உறவுகளும் அடங்கும். பல நேரங்களில் நிதி மற்றும் ஆயுதங்கள் பேர்சிய வளைகுடாவில் உள்ள அமெரிக்க நட்பு நாடுகளால் கொடுக்கப்படுகின்றன – சௌதி அரேபியா மற்றும் வளைகுடாவில் உள்ள சர்வாதிகார ஆட்சிகளால்.

அமெரிக்கா, மத்திய கிழக்கிற்கு “ஜனநாயகத்தைக் கொண்டுவருகிறது” என்ற கூற்றுக்களை ஆப்கானிஸ்தான் பொய் ஆக்குகிறது. தேர்தல்கள் தில்லுமுல்லுகளுக்கு உட்படுகின்றன. ஆப்கானிய பாராளுமன்றம் போட்டி அமெரிக்கப் பிரிவுகளின் கலப்பிடம் ஆகும்; இப்பிரிவுகளில் இழிந்த போர்ப்பிரபுக்கள் மற்றும் போராளித்தன தலைவர்கள் அடங்குவர். வெளிநாட்டு ஆக்கிரமிப்பு குறித்து சுதந்திரமான வாக்கெடுப்பு எப்பொழுதாவது நடத்தப்பட்டால், அதன் முடிவு மிகப் பெரிய அளவில் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவே இருக்கும். இவை அனைத்தும் திரிப்போலியில் நிறுவப்படுவதற்கு மாதிரியாக உள்ளன; டமாஸ்கஸில் அமெரிக்கா நிறுவ முற்படுவதற்கும் மாதிரியாக உள்ளன. 

ஆப்கானிய ஆக்கிரமிப்பிற்கு எதிர்ப்பு ஆப்கானிஸ்தானுடன் நின்றுவிடவில்லை. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளில் நடத்தப்படும் கருத்துக் கணிப்புக்கள் பெரும்பாலான மக்கள் போரை எதிர்க்கின்றனர் என்று பலமுறையும் தெரிவித்துள்ளன. ஆயினும்கூட அந்த எதிர்ப்பிற்கு அரசியல் அல்லது செய்தி ஊடக நடைமுறையில் வெளிப்பாடு இல்லை.

ஈராக் போருக்கு எதிரான வெகுஜன எதிர்ப்புக்களுக்கு ஆதரவளித்த தாராளவாதிகள் என அழைக்கப்படுபவர்களும் முன்னாள் இடதுகளும் விரைவில் தங்கள் எதிர்ப்பு இயக்கத்தை ஒபாமா பதவிக்கு வந்தபின் கைவிட்டுவிட்டன. இதே அமைப்புக்கள்தான் ஒபாமா நிர்வாகத்தின் லிபியா, சிரியாவில் “ஜனநாயகத்திற்கான” புதிய போர்களுக்கு ஊக்கம் கொடுப்பவையாக உள்ளன.

நவ-காலனித்துவ வகை, இராணுவ வாதம் ஆகிய இந்த வெடிப்பிற்கு உந்துதல் சக்தி முதலாளித்துவத்தின் மோசமாகிவரும் உலக நெருக்கடியாகும். உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்திற்கு எதிரான தாக்குதல்களை நடத்துகையிலேயே, ஒபாமா நிர்வாகம் வாஷிங்டனின் ஐரோப்பிய, ஆசிய போட்டி நாடுகள், குறிப்பாக சீனாவிற்கு எதிரான நிலைப்பாட்டில் அமெரிக்க மேலாதிக்கத்தை உலகெங்கிலும் மறு உறுதிப்படுத்தும் முயற்சியில் பெரும் தீவிரத்துடன் ஈடுபட்டுள்ளது. இதன் விளைவு முக்கிய சக்திகளுக்கு இடையே உறவுகள் தீவிர அழுத்தம் பெறுவதும், பேரழிவு தரும் உலக மோதல் என்னும் ஆபத்து எழுச்சி பெறுவதும்தான்.

ஓர் உண்மையான போர் எதிர்ப்பு இயக்கத்தின் வளர்ச்சி, போர், இராணுவ வாதம் மற்றும் நவ-காலனித்துவம் ஆகியவற்றிற்கான மூலகாரணத்தை ஆராய்ந்து, அதை நிறுத்தும் முன்னோக்கு கொண்ட அடிப்படையின் மூலம்தான் அபிவிருத்தியடைய முடியும்—அதாவது இலாப நோக்கு உற்பத்தி முறையை அகற்றுதல். கடந்த தசாப்தம் முதலாளித்துவ அரசாங்கங்களுக்கும் கட்சிகளுக்கும் முறையீடு செய்வதின் பயனற்ற தன்மையை நிரூபித்துவிட்டது. போருக்கு எதிரான போராட்டம் என்பது முதலாளித்துவத்தை அகற்றி, சோசலிசத்தை நிறுவுவதற்கு சர்வதேசத் தொழிலாளர்களின் சுயாதீன அணிதிரள்வை அடித்தளமாக கொண்டிருக்க வேண்டும்.

No comments

Powered by Blogger.