Header Ads



வாகன ஓட்டிகளுக்கு வழிகாட்ட 'கிச்சு கிச்சு' பெல்ட் வருகிறது..!



வாகன ஓட்டிகளுக்கான பிரத்யேக வைப்ரேஷன் பெல்ட்டை ஹாலந்து ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். எந்த இடத்துக்கு போக வேண்டும் என ஜிபிஎஸ் கருவியில் தேர்வு செய்தால், ‘லெப்ட்.. ரைட்’ என இடுப்பு பெல்ட் மாறி மாறி கிச்சுகிச்சு செய்து வழிகாட்டும். புதிய இடத்தில் ஒரு முகவரியை தேடுவதற்கும், ‘ஷாட் கட்’ தெரிந்துகொள்வதற்கும் ஜிபிஎஸ் கருவிகள் மிகவும் உதவியாக இருக்கின்றன. கார், ஸ்மார்ட் போன்களில் ஜிபிஎஸ் வசதிகள் வந்துவிட்டதால் இதன் மவுசும் பயன்பெறுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஹாலந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள இன்டலிஜென்ட் சிஸ்டம்ஸ் என்ற ஆய்வுக்கூடத்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஆண்டர்ஸ் போவர், ஹஸ்கா ஸ்டெல்டன்போல் ஆகியோர் தலைமையில் இதுதொடர்பான ஆராய்ச்சி சமீபத்தில் நடந்தது. ‘வைப்ரோ பெல்ட்’ என்ற பெல்ட்டை அவர்கள் வடிவமைத்துள்ளனர். சைக்கிள், பைக் போன்ற வாகனங்களில் செல்பவர்கள் இந்த பெல்ட்டை இடுப்பில் அணிந்துகொள்ள வேண்டும். 

ஜிபிஎஸ் கருவி அல்லது ஸ்மார்ட்போனுடன் இது இணைக்கப்பட்டிருக்கும். எந்த இடத்துக்கு போக வேண்டும் என்பதை முதலில் ஜிபிஎஸ்-சில் தேர்வு செய்ய வேண்டும். அதற்கான வழியை ஜிபிஎஸ் கருவி காட்டும். ஆனால், ஜிபிஎஸ் மேப்பை பார்த்தபடி பைக் ஓட்டத் தேவையில்லை. இடது பக்கம் திரும்ப வேண்டும் என்றால், வைப்ரோ பெல்ட்டின் இடதுபக்கம் கிச்சுகிச்சு ஏற்படுத்துவது போல வைப்ரேஷன் ஏற்படும். வலது பக்கம் என்றால், கிச்சுகிச்சு வலதுபக்கம் ஏற்படும். நேர் பாதை அல்லது ரிவர்ஸில் திரும்ப வேண்டும் என்றால் வயிறு, முதுகு பகுதியில் பெல்ட் வைப்ரேஷனை ஏற்படுத்தும். கிச்சுகிச்சு அடிப்படையில் சைக்கிளை ஓட்டிக்கொண்டே போக வேண்டியதுதான். வைப்ரோ பெல்ட்டை சோதித்து பார்க்கும் வகையில் சைக்கிள் ஓட்டிகள் 20 பேரைக் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் இரு குழுவாக பிரிக்கப்பட்டனர். வழக்கம்போல ஜிபிஎஸ் மேப்பை பார்த்துப் பார்த்து ஒரு குழு சைக்கிள் ஓட்டி சென்றது. இன்னொரு குரூப்புக்கு இடுப்பு வைப்ரோ பெல்ட் மாட்டப்பட்டது. 

இரு குழுக்களும் வெற்றிகரமாக இலக்கை அடைந்தன. அதே நேரம், ஜிபிஎஸ் மேப்பை பார்த்தபடி வந்தவர்களுக்கு வழியில் இருந்த முக்கிய இடங்கள், அடையாளங்கள், முக்கிய கடைகள் ஆகியவை நினைவில்லை. வைப்ரோ பெல்ட் அணிந்தவர்கள் மேப்பை கவனிக்க வேண்டிய அவசியம் இல்லாததால் ரோட்டை நன்கு கவனித்து ஓட்டி வந்தார்கள். அதனால், எல்லா லேண்ட்மார்க்குகளும் அவர்களுக்கு நன்கு நினைவில் இருந்தன. எந்த ரூட்டில் போக வேண்டும் என்பதிலேயே கவனம் இருந்தால் மற்ற விஷயங்களை கவனிக்க முடியாது. எனவே, வாகன ஓட்டிகளுக்கு வைப்ரோ பெல்ட் மிகவும் உதவியாக இருக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள். அமெரிக்காவின் சான்டா மோனிகா நகரில் மார்ச்சில் நடக்கவுள்ள சர்வதேச மாநாட்டில் வைப்ரோ பெல்ட் பற்றி ஹாலந்து விஞ்ஞானிகள் விளக்கம் அளிக்கின்றனர். காட்டுக்குள் தேடுதல் வேட்டை, கண்காணிப்பு பணியில் ஈடுபடும் ராணுவ வீரர்களுக்கு வசதியாக வைப்ரேஷன் தரக்கூடிய இடுப்பு கவசத்தை அமெரிக்க ராணுவம் சமீபகாலமாக பயன்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.