'இந்துத்துவாவின் பயங்கரவாத வெறிக்கு நாம் எதிரிகளே' - அஸதுத்தீன் உவைஸி
1992 முதல் இந்தியாவில் நடைபெற்ற அனைத்து குண்டுவெடிப்புகளிலும் இந்துத்துவாவினருக்குப் பங்கிருக்கலாம் என்று தெரியவருவதால், அரசு, அனைத்து குண்டுவெடிப்புச் சம்பவங்களையும் மீளாய்வு செய்துபார்க்கவேண்டும் என்று எம் ஐ எம் கட்சித்தலைவர் அஸதுத்தீன் உவைஸி கோரிக்கை விடுத்துள்ளார்.
மீலாதுநபி கொண்டாட்டங்களையடுத்து ஹைதராபாத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டிருந்த பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய உவைஸி, குண்டுவெடிப்பில் ஈடுபட்ட பயங்கரவாதிகளான பிரக்யா தாகூர் போன்றோருக்காக பிரதமரைச் சந்தித்த அத்வானியைக் கடுமையாகத் தாக்கிப் பேசினார். ஹைதராபாத் தொகுதி மக்களவை உறுப்பினரான உவைஸி, ஷிண்டே ஒரு தலித் என்பதாலேயே அவரை உயர்சாதி அரசியல்வாதிகள் குறிவைக்கின்றனர் என்றும், ஷிண்டே கூறியது உண்மைதான். நாட்டில் 1992க்குப் பிந்தைய அனைத்து குண்டுவெடிப்புகளிலும் இந்துத்துவா ஈடுபட்டிருக்கலாம் என்பதால் அனைத்து குண்டுவெடிப்பு வழக்குகளையும் மீண்டும் ஆராய வேண்டும் என்றார்
முலாயம், மாயாவதி போன்ற தலித் தலைவர்கள் ஆந்திராவில் தோன்றினால் அவர்களுடன் இணைந்தே அரசியல் களப் பணியாற்றுவோம் என்ற உவைஸி " இந்துக்களுக்கோ, அதன் தலைவர்களுக்கோ நாம் விரோதிகளல்லர்; ஆனால் இந்துத்துவாவின் பயங்கரவாத வெறிக்கு நாம் எதிரிகளே" என்றும் அவர் கூறினார்.
தன்னுடைய தம்பியும், சட்டமன்ற உறுப்பினருமான அக்பருத்தீன் உவைஸி இனதுவேஷ வழக்கில் கைது செய்யப்பட்டது காங்கிரஸின் சொந்த பழிவாங்கும் நடவடிக்கை என்ற அஸதுத்தீன் "இதே போன்ற பேச்சுக்களைப் பேசிய சுவாமி கமலானந்த பாரதியும், ப்ரவீன் தொகாடியாவும் ஏன் பிணையில் விடப்பட்டனர். அவர்கள் மீதான பிணையை அரசு ஏன் ஆட்சேபிக்கவில்லை ?" என்று கேள்வி எழுப்பினார். முன்னதாக, ஏழாண்டு பழைய வழக்கொன்றிலிருந்து அஸத்தீன் உவைஸி விடுதலை செய்யப்பட்டார்.
inneram
Post a Comment