மனச்சாட்சியின் படி தீர்மானமெடுப்பேன் - ஜனாதிபதி மஹிந்த
(தினகரன்)
நீதிமன்றம் ஒரு புனித பூமியென்றும், அதனை மாசுபடுத்தாமல் சகலரும் செயற்பட வேண்டுமென்றும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மைமையையும், கெளரவத்தையும் பாதுகாப்பதற்கு தாம் கடமைப்பட்டுள்ளதாகவும், மனச்சாட்சியின்படி தீர்மானம் எடுத்ததாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
ஒழுக்கமுள்ள நாடொன்றை கட்டியெழுப்புவதற்கு சகலரும் அர்ப்பணிக்க வேண்டும் என்று நேற்று சுகததாஸ விளையாட்டரங்கில் பட்டதாரிகளுக்கு நிரந்தர நியமனம் வழங்கும் வைபவத்தில் உரையாற்றும் போது ஜனாதிபதி தெரிவித்தார்,
“பிரதம நீதியரசருக்கு எதிரான குற்றவியல் பிரேரணை நிறைவடைந்தமை பற்றி நீங்கள் அறிந்திருப்பீர்கள். நீதிமன்றத்தின் சுயாதீனத் தன்மையையும், கெளரவத்தையும் பாதுகாப்பது நமது கடமை. நாம் நீதிமன்ற வளாகத்தை அரசியல் செயற்பாடுகளுக்காக பயன்படுத்தவில்லை. வரலாற்றில் ஒருபோதும் நீதிமன்ற வரலாற்றில் கறுப்பு கொடி ஏற்றுமாறு நாம் எமது கட்சி உறுப்பினர்களுக்கு கூறவில்லை. ஆர்ப்பாட்டம் நடத்தும் சுற்றுவட்டமாக நீதிமன்றத்தைப் பயன்படுத்தவில்லை. அங்குதான் நீதிமன்றத்தின் கெளரவம் மாசுபடுத்தப்படுகிறது. ஒவ்வோர் அரச சார்பற்ற நிறுவனத்தின் தேவைக்கேற்ப இவை இடம்பெறுகின்றன. அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு எதிராக சென்றாலும், நாம் நாகரீகமாகவும், கெளரவமாகவும், நடந்து நீதிமன்றத்தை அவமதிக்காது இருந்திருக்கின்றோம். பிரதம நீதியரசர் மிகவும் கடுமையான முறையில் அரசாங்கத்தை அசெளகரியத்துக்கு உள்ளாக்கும் வகையில் தீர்ப்புகளை வழங்கி போதும் நாம் ஓர் அரசாங்கம் என்ற வகையில் பொறுப்புடன் செயற்பட்டோம்.
அதன் பின்னர் திவிநெகும சட்டமூலம் பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட்டது. திவிநெகும என்பது இந்த நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காகவும், நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் பேதங்களின்றி நாட்டு மக்களின் பொருளாதாரத்தினை மேம்படுத்தவும் கொண்டுவரப்பட்ட ஒரு சட்டமூலமாகும். அது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சட்டமூலமாகும். பிரதம நீதியரசரை பொறியில் சிக்கவைப்பதற்காக அவர்கள் மீண்டும் வழக்கு தொடர்ந்தார்கள். ஆனால் தீர்ப்பு வேறு விதமாக வழங்கப்பட்டது. எதிர்க்கட்சியினரும், மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர்களுமே லஞ்ச ஊழல் ஆணையாளரிடம் சென்று முறையிட்டார்கள். அதனை விசாரணை செய்யும் போதுதான் இந்தப் பிரச்சினை வெளியில் வந்தது.” என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
“வரவு செலவுத்திட்டத்தை தயாரிக்கும் போது நாம் சகல தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தினோம். பட்டதாரி சங்க உத்தியோகத்தர்கள், தொழிலாளர்கள், தொழிற்சங்கத்தினர், மருத்துவர்கள் என இலங்கையிலுள்ள சகல துறை சார்ந்தவர்களையும் அழைத்துவந்து கலந்துரையாடினோம். இந்த வேளையில்தான் நீதிமன்றத்திற்கு வந்த அந்த துறை சார்ந்த பிரச்சினைகளை பேசித்தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இங்குதான் மோதல் ஏற்பட்டது. நாம் நீதிமன்றத்திற்கு அழுத்தம் கொடுப்பதாக சொன்னார்கள். ஊழல்கள் தொடர்பில் எமக்கு தகவல் வழங்கியதே நீதித்துறையினர்தான். அது தொடர்பாக அரசியல் அமைப்புக்கு ஏற்புடையதாகவே நாம் செயற்பட்டோம். அரசியல் அமைப்புக்குப் புறம்பாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படவில்லை. நாம் சட்டத்தை இயற்றி தண்டனை வழங்கினால், நாம் சட்டத்தை இயற்றியதாக இன்னொரு பிரச்சினை ஏற்படும்.
ஊழல் தொடர்பான சாட்சிகள் எமக்குக் கிடைத்தன. மக்கள் பிரதிநிதிகளின் கடமைகளை அவர்கள் செய்தார்கள். அதன் பின்னர் எனக்கு அறிவித்தார்கள். எனவே எனது மனச்சாட்சியின் படி செயற்படுவதற்கு நான் நடவடிக்கை எடுத்தேன். சட்ட நிபுணர்களுக்கும், வங்கிக் கணக்குத் தொடர்பான நிபுணர்கள் பலருக்கும் அனுப்பி அதேபோன்று அவுஸ்திரேலியாவில் அங்கீகரிக்கப்பட்ட பேராசிரியர் ஒருவருக்கும் அனுப்பினேன். அவர் எனக்கு இலங்கை சட்டக் கல்லூரியில் கற்பித்த ஒருவர். பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ¤க்கும், அதேபோன்று ரணில் விக்கிரமசிங்கவிற்கு அவர் கற்பித்திருக்கிறார். உலக சட்டம் தொடர்பாக பல புத்தகங்களை எழுதியிருக்கிறார்.
நீதிமன்றத்தின் கெளரவத்தை பாதிக்காதவகையில் அந்த புனித பூமியை மாசுபடுத்தாதவகையில் சகலரும் செயற்படுவார்கள் என்று நான் நம்புகிறேன்.” என்றும் ஜனாதிபதி தனது உரையில் மேலும் குறிப்பிட்டார்.
இவர் பேசுவதற்கும் நடப்பதட்டும் ஒன்றுக்கு ஒன்று முரணாக உள்ளது.
ReplyDelete