அட்டாளைச்சேனை வீதிகள் மழைநீரால் பாதிப்பு
(அம்னாசமி)
கிழக்கில் தற்போது தொடராக பெய்துவரும் பெரு மழையினால் அட்டாளைச்சேனைப் பிரதேசத்தின் பல வீதிகள் போக்குவரத்திற்கு தடையாக காணப்படுகின்றன. குறிப்பாக அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்கு முன்னால் உள்ள டீன்ஸ்வீதி போக்குவரத்திற்கு மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கவலை தெரிவிக்கின்றனர். அட்டாளைச்சேனையில் பலவீதிகள் கடந்த காலங்களில் மாகாண அமைச்சினாலும், பிரதேச சபையினாலும் அபிவிருத்தி செய்யப்பட்டபோதிலும் இப்பாதை இன்னும் திருத்தம் செய்யவில்லை. இவ்வீதியானது அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்திற்குச் செல்லும் பிரதான பாதையாகும். மழைகாலத்தில் மாத்திரமன்றி எக்காலத்திலும் குண்றும் குழியுமாக காணப்படுவதால் பயனத்திற்கு இப்பாதை உகந்தாக இல்லை. மழை காலத்தில் நீர் தேங்கி நிற்பதால் பகற்காலங்களில்கூட விழுந்து எழும்ப வேண்டிய இக்கட்டான ஒரு பாதையாகவே இது காணப்படுகின்றது.
இத்தனைக்கும் இப்பாதைக்கு மிக அருகாமையிலேயே அட்டாளைச்சேனைப் பிரதேச சபையின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் இருவர் வசிக்கின்றனர். இவர்களிடமும், முன்னால் பிரதேச சபை தலைவரிடமும், தற்போதைய பிரதேச சபைத் தலைவரிடமும் பலதடவைகள் எடுத்துக் கூறியும் எதுவுமே நடைபெறவில்லை. தேங்கி நிற்கின்ற நீரையாவது வடியவைப்பதற்கான முயற்சியையாவது செய்தால் பாடசாலை செல்லும் மாணவர்களுக்கும், பயனிப்பவர்களுக்கும் ஆறுதலாய் அமையுமல்லவா? ஊரில் வீதிக்குப் பொறுப்பான கிழக்கு மாகாண அமைச்சரும், ஆளும் கட்சியில் மாகாண சபையில் ஒரு உறுப்பினரும் இருந்தும் எவ்வித பயனுமில்லையே எனவும் மக்கள் கவலை கொள்கின்றனர். அதேவேளை இவ்வாண்டின் பாதை அபிவிருத்தி திட்டத்தில் இப்பாதையை அமைப்பதற்கான வேலைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. எது எப்படியிருப்பினும் சிறியளவான வடிகான் ஒன்றை அமைத்து தற்போது தேங்கி நிற்கின்ற நீரை வெளியேற்றுவதற்குரிய நடவடிக்கைகளை தற்போது மேற்கொண்டால் அதுவே பெரியதோர் உதவியாக அமையுமல்லவா? அதிகாரிகள் கவனத்திற்கொள்வார்களா?
Post a Comment