பாகிஸ்தான் புதிய தலிபான் தலைவராக பஹவல்கான் தேர்வு
பாகிஸ்தானின் தெற்கு வஜிரிஸ்தான் பகுதியின் புதிய தலிபான் தலைவராக பஹவல்கான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இது குறித்த விவரம்: வஜிரிஸ்தான் பகுதியின் தலிபான் தலைவரான முல்லா நசீர், அமெரிக்காவின் ஆள் இல்லா விமானத் தாக்குதலில் கடந்த வியாழக்கிழமை (ஜன.3) கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் மேலும் 12 தலிபான்கள் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களின் குழு அடுத்த தலைவராக பஹவல்கானை ஒருமனதாகத் தேர்ந்தெடுத்தது.
படிப்பறிவில்லாத 34 வயதான பஹவல்கானின் இயற்பெயர் சலாலுதீன் அயூபி. பஸ் டிரைவராகப் பணியாற்றியவர். பிறகு ஹோட்டல் ஒன்றை நடத்தி வந்தார். அதன்பிறகு ஆப்கன் தலிபான்களுடன் இணைந்து செயல்பட்டு வந்தார். அல் காய்தா அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டுள்ள இவருக்கு ஆப்கன் பகுதியிலுள்ள முக்கியமான அமைப்புகளுடன் தொடர்பு உள்ளது.
மறைந்த முல்லா நசீரின் நெருங்கிய நண்பரான பஹவல்கான் அவருடைய இயக்கத்தில் தீவிரமாக செயல்பட்டு வந்தார். மறைந்த முல்லா நசீர், அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபாடு காட்டியதால் பாகிஸ்தான் பாதுகாப்புப் படையினரிடம் அவருக்கு ஓரளவுக்கு நல்ல பெயர் இருந்தது. ஆனால் பஹவல்கானோ அதற்கு மாறாக, மிகுந்த போர்க்குணமும் எதற்கும் வளைந்துகொடுக்காத கடுமையான மனோபாவம் கொண்டவர் எனக் கூறப்படுகிறது.
அமெரிக்க தாக்குதலுக்கு எதிர்ப்பு: இந்நிலையில் தெற்கு வஜிரிஸ்தான் பகுதியில் கடந்த வியாழக்கிழமை நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலைக் கண்டித்து அந்தப் பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பழங்குடியினர் சனிக்கிழமை தீவிர போராட்டத்தில் இறங்கினர்.
அனைத்துக் கடைகள், வணிக நிறுவனங்கள், உள்ளிட்டவை மூடப்பட்டன. மக்கள் சாலைகளில் கூடி அமெரிக்காவின் விமானத் தாக்குதல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
பாகிஸ்தான் தலிபான் முன்னாள் தலைவர் முல்லா நசீர் உள்ளிட்ட 13 தலிபான்கள் ஆளில்லா விமானத் தாக்குதலில் கொல்லப்பட்டதை வன்மையாகக் கண்டித்து கோஷம் எழுப்பினர்.
Post a Comment