அல்குர்ஆன் பலதார திருமணத்தை ஊக்குவிக்கவில்லை இந்திய நீதிபதி - காமினி லா தீர்ப்பு
இஸ்லாமியர்களின் வேதமான குரான் பலதார மணத்தை ஊக்குவிக்கவில்லை என்றும் சில சந்தர்ப்பங்களில் பயன்படுத்த அனுமதி மட்டுமே வழங்கியுள்ளது என்று வலுக்கட்டாயப்படுத்தி நடத்தப்பட்ட திருமணம் தொடர்பான வழக்கில் இந்திய உயர்நீதிமன்ற நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.
தில்லியை சார்ந்த மெளலவி முஸ்தபா ராஜா என்பவர் நதீம் கான் என்பவருக்கு ஒரு பெண்ணை அப்பெண்ணின் சம்மதம் இல்லாமலும் அப்பெண்ணின் பெற்றோர் இல்லாமலும் திருமணம் நடத்தி வைத்ததாக காவல்துறையால் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடரப்பட்டடது. குரான் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்ய அனுமதி கொடுத்திருப்பதால் தன் செயலில் தவறு இல்லை என்று முஸ்தபா ராஜா வாதித்தார்.
அவ்வழக்கை விசாரித்த தில்லி கூடுதல் நீதிமன்ற நீதிபதி காமினி லா, மெளலவியின் வாதங்களை தள்ளுபடி செய்ததோடு குரான் நான்கு பெண்கள் வரை திருமணம் செய்ய அனுமதி கொடுத்திருக்கிறது என்றாலும் அது பல தார மணத்தை ஊக்குவிக்கவில்லை என்றார். மேலும் மனைவியின் தீராத நோய், பிள்ளை பெற முடியாமை போன்ற சிறப்பு தருணங்களில் முதல் மனைவியின் சம்மதத்தோடு இரண்டாம் திருமணம் செய்ய குரான் பரிந்துரைக்கிறது என்றார். கணவர் இறந்து விட்டால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் பெண்கள் இன்னொரு திருமணம் செய்ய குரான் அனுமதிக்கிறது என்றும் நீதிபதி கூறினார்.
துருக்கி, துனிசியா போன்ற முஸ்லீம் நாடுகளில் பலதார மணம் தடுக்கப்பட்டுள்ளது என்றும் பிற முஸ்லீம் நாடுகளில் முறைப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறிய நீதிபதி இந்தியா போன்ற ஜனநாயக நாட்டில் பலதார மணம் நிச்சயம் ஊக்குவிக்கப்பட முடியாது என்றும் கருத்து தெரிவித்தார். சமூகத்தில் சமன்பாட்டை கொண்டு வருவதற்காகவும் மனிதர்கள் தவறான வழியில் செல்வதை தடுக்கவும் கொடுக்கப்பட்ட பலதார மண அனுமதியை தவறாக பயன்படுத்த கூடாது என்றும் நீதிபதி அறிவுரை வழங்கினார். inneram
Post a Comment