Header Ads



வாசிம் அக்ரத்தையும், ரமீஸ் ராஜாவையும் விரட்டுங்கள்..!



ஹாக்கி வீரர்களை போல கிரிக்கெட் வர்ணனையாளர்களான வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜாவையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

மும்பை பயங்கரவாத தாக்குதல் நடந்து, ஐந்து ஆண்டுகளுக்குப் பின், சமீபத்தில் தான் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் கிரிக்கெட் தொடரில் மோதின. இது முடிந்த சில நாட்களில், எல்லைப் பகுதியில் இரு இந்திய ராணுவ வீரர்கள், பாகிஸ்தான் படையினரால் கொடூரமாக கொல்லப்பட்டனர். 

இதையடுத்து, இரு நாட்டு உறவு மீண்டும் மோசமான நிலைக்கு சென்றுள்ளது. ஹாக்கி லீக் தொடரில் பங்கேற்கும் பாகிஸ்தான் வீரர்களுக்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. இதனால், 9 ஹாக்கி வீரர்களும் திருப்பி அனுப்பப்பட்டனர். 

இப்போது, இங்குள்ள அக்ரம், ரமீஸ் ராஜாவுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இவர்கள், தற்போது வர்ணனையாளராக உள்ளனர். இவர்களையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

 இது குறித்து 1975ல் உலக கோப்பை வென்ற இந்திய ஹாக்கி அணியில் இடம் பெற்ற முன்னாள் வீரர் அசோக் குமார் கூறியது:

பாகிஸ்தான் ஹாக்கி வீரர்கள் அனுப்பப்பட்டது சரியான செயல் தான். வீரர்கள் என்றாலும் அவர்கள் அந்த நாட்டின் குடிமகன்கள் தான். விளையாட்டில் அரசியலை கலக்கக் கூடாது என்றாலும், இப்போதெல்லாம் எவ்வித விதியும் பின்பற்றப் படுவதில்லை. அனைத்தும் எல்லை மீறிப் போகிறது.

பாகிஸ்தானுக்கு உறுதியான எச்சரிக்கை செய்தி தரவேண்டும். அவர்களிடம் யாரும் எவ்வித தொடர்பும் வைத்துக் கொள்ளக் கூடாது. நடிகர்கள், விளையாட்டு வீரர்கள் என, யாரையும் இந்தியாவில் நடிக்கவோ, விளையாடவோ அனுமதிக்கக் கூடாது. 

இவ்வாறு அசோக் குமார் கூறினார். 

முன்னாள் வீரர் முகேஷ் குமார் கூறுகையில்,"" ஹாக்கி இந்தியா எடுத்த முடிவு சரி தான். ஆனால், வாசிம் அக்ரம், ரமீஸ் ராஜா இருவரும் இன்னும் இந்தியாவில் தான் உள்ளனர். இவர்களை கிரிக்கெட் தொடரில் வர்ணனை செய்ய அனுமதித்தது யார். இருவரையும் பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்ப வேண்டும்,'' என்றார்.

பெண்கள் உலக கோப்பை ரத்து?

வரும் 31ம் தேதி முதல் பிப்., 17 வரை பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் தொடர் மும்பையில் நடக்கவுள்ளது. இதில் பங்கேற்க பாகிஸ்தான் பெண்கள் அணி ஜன., 26ல் மும்பை வரும் எனத் தெரிகிறது. 

ஆனால், இப்போதுள்ள பதட்டமான நிலையில் இவர்கள் மும்பை வர முடியாது. இதனால் உலக கோப்பை போட்டிகளை குஜராத்தில் நடத்தலாம் என, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) விரும்பியது. இதற்கு குஜராத் கிரிக்கெட் சங்கம் (ஜி.சி.ஏ.,) மறுத்துள்ளது. 

ஜி.சி.ஏ., செயலர் ராஜேஷ் படேல் கூறுகையில்,"" ஆமதாபாத்தில் போட்டிகளை நடத்தலாம் என, பி.சி.சி.ஐ., கூறியது. எல்லையில் பதட்டம் ஏற்பட்டுள்ள நிலையில், முடியாது என தெரிவித்தோம்,'' என்றார்.

இதையடுத்து பெண்கள் உலக கோப்பை தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது. 

No comments

Powered by Blogger.