வைத்தியர்களின் கவனயீனமே காரணம்..! (படம் இணைப்பு)
வீட்டு படிக்கட்டில் தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்ட கொழும்பு சட்டக்கல்லூரி மாணவிக்கு கை அகற்றப்பட மாத்தறை பொது வைத்தியசாலை வைத்தியர்களின் கவனயீனமே காரணம் என முதற்கட்ட விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.
கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட இறுதி ஆண்டில் கல்வி பயிலும் அஞ்சலா பிரியதர்ஷினி என்ற குறித்த மாணவி தடுக்கி விழுந்து கை முறிவு ஏற்பட்ட நிலையில் மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் அவரது கை வெட்டி அகற்றப்பட்டுள்ளது.
இதனையடுத்து, வைத்தியர்கள் உரிய சிகிச்சை அளிக்காத காரணத்தினாலேயே மாணவிக்கு கை அகற்றப்பட்டுள்ளதாகவும் உரிய விசாரணை நடத்தப்படவேண்டும் எனவும் மாணவியின் பெற்றோர்கள் வலியுறுத்தியிருந்தனர்.
இந்நிலையில், இது குறித்து விசாரணைகளை நடத்துவதற்கு விசேட குழு ஒன்றை சுகாதார அமைச்சு அமைத்தது. மாத்தறை வைத்தியசாலையில் நீண்ட நாட்களாக மாணவி தங்க வைக்கப்பட்டிருந்த நிலையில் அவருக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படவில்லை என அக்குழு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் கொழும்பு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட மாணவிக்கு சிகிச்சை வழங்கிய வைத்தியர்களுக்கு அவரது கையை அகற்றுவதை தவிர வேறு வழியில்லை என தீர்மானித்ததாக அவ் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, பாதிக்கப்பட்ட மாணவியை பார்ப்பதற்காக சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேன இன்று கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு சென்று,மாணவிக்கு வழங்கப்படட சிகிச்சைகள் குறித்த சகல விடயங்களையும் கேட்டறிந்துள்ளார்.
Post a Comment