ரொட்டவௌ முஸ்லிம் வித்தியாலயத்தில் நீண்டகால ஆசிரியர் பற்றாக்குறை - மாணவர் பாதிப்பு
(அப்துல்சலாம் யாசீம்)
திருகோணமலை வடக்கு கல்வி வலயத்திற்குட்பட்ட ரொட்டவௌ முஸ்லிம் வித்தியாலயத்தில் நீண்ட காலமாக ஆசிரியர் பற்றாக்குறை நிலவி வருவதினால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு வருவதாக பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆரம்ப கல்விப்பிரிவிற்கு நான்கு ஆசிரியர்கள் இல்லாதது மிக முக்கிய குறைபாடாகும்.இவ்விடயம் சம்மந்தமாக கல்வி உயரதிகாரிகளுக்கு தெரியபபடுத்தியும் இது வரை எந்த ஒரு ஆசிரியரும் நியமிக்கப்படவில்லையெனவும் பெற்றோர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
1954ம் ஆண்டு ஆண்டு 06ம்மாதம் 07ம்திகதி ஆரம்பிக்கப்பட்ட இப்பாடசாலை 60வது பவளவிழாவை கொண்டாடவுள்ள போதும் இப்பாடசாலையின் குறைபாடுகளான கட்டிட பற்றாக்குறை,ஆசிரியர் பற்றாக்குறை இன்னும் நிவர்த்திக்கப்படவில்லையெனவும் பழைய மாணவர் சங்கத்தின் தலைவர் கவலையையுடன் தெரிவித்தார்.
கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரை பெற்றோர்கள் சந்தித்த போது 2013ம் ஆண்டு பெப்ரவரி மாதத்திற்குள் ஆசிரியர்களை நியமிப்பதாக வாக்குறுதி அளித்தார். அதனையடுத்து முதலாம் ஆண்டு மாணவர்களின் பெற்றோர்களின் கூட்டம் நடைபெற்ற வேளை 2013 பெப்ரவரி மாதம் வரை தற்காலிகமாக பெற்றோரின் உதவியுடன் இரு தொண்டர் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இவர்கள் இருவருக்கும் பெற்றோர்களால் சிறிய கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
ஆரம்ப பிரிவின் ஆசிரியர் பற்றாக்குறை குறித்து கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் புஸ்பகுமாரவிடம் கேட்டபோது- வெளிமாவட்டங்களில் இருந்து நியமனம் பெற்று வரும் ஆசிரியர்கள் இடமாற்றம் பெற்று வருவதினால் பெப்ரவரி மாதம் திருகோணமலை மாவட்டத்தில் 500 பேருக்கு நியமனம் வழங்கவுள்ளதாகவும்,அதன்பின்பு ஆசிரியர்கள் நியமிப்பதாகவும் உறுதியளித்தார்.
Post a Comment